ஞாயிறு, 29 நவம்பர், 2020

இந்து மதத்தை வளர்க்கவும், மாற்று மதத்தவரை அச்சுறுத்தவுமே என் ஆட்சி.. யோகி ஆதித்தியநாத்!

Image may contain: 4 people, people standing
சாவித்திரி கண்ணன் : வேறு எதற்காகவும் ஆட்சி செய்ய வரவில்லை! ’’இந்து மதத்தை வளர்க்கவும், மாற்று மதத்தவரை அச்சுறுத்தவுமே என் ஆட்சி’’ என தன் ஒவ்வொரு அசைவிலும் நிருபித்து வருகிறார் யோகி ஆதித்தியநாத்! பெயரில் தான் யோகி, ஆள் படுமுரட்டு சுபாவம்! இந்து மதத்தை அரசாங்கமே வளர்க்கும், போஷிக்கும் என்று களம் கண்டால், அதில், போலீ ஆன்மீவாதிகளும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போட்டு ஊரை ஏய்க்கும் சாமியார்களுமே
அதிகம் பயனடைவார்கள் என்பதற்கு உத்திரபிரதேசமே நல்ல உதாரணமாகும்!
ஏனென்றால், உண்மையான ஆன்மீகவாதிகள் அதிகாரவர்க்கத்தை தேடிச் செல்லமாட்டார்கள்! எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்!
இன்னும் பத்து வருடம் பாஜகவின் யோகி உ.பியின் முதலமைச்சராகத் தொடர்வார் என்றால், ’மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு மக்கள் இயக்கம் வலுவாக உருவாகவும், மக்கள் சாமியார்களை கண்டாலே அவ நம்பிக்கை கொள்ளவுமான நிலை தோன்றிவிடும்’ என நினைக்கிறேன்.
’’கிறிஸ்துவர்கள்,முஸ்லீம்கள் என்றாலே சந்தேகப்படு, வழக்கு போடு,துன்புறுத்து’’ என்பது உ.பி. காவல் துறையில் எழுதப்படாதவிதியாக ஏற்கனவே பின் பற்றப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் அவசர சட்டம் ஒன்றை யோகி அமல்படுத்தி, அதற்கு கவர்னர் ஒப்புதலும் கிடைத்து விட்டது.
அதன்படி இனி, மாற்று மதத்தை சேர்ந்த ஆணையோ,பெண்ணையோ காதலிப்பவர்களை சட்டப்படி தண்டிக்கமுடியும்! ஏனென்றால், அதில், ’’நீ, அவனை மதமாற்றம் செய்ய முயன்றாய்’’ என்றோ, ’’நீ அவளை மதமாற்றம் செய்ய முயன்றாய்’’ என்றோ காவல்துறை வழக்கு பதிவு செய்யலாம்!
ஏற்கனவே, முஸ்லீம் இளைஞன் இந்து பெண்ணை காதலிப்பதை ’லவ் ஜிகாத்’ என்ற வரையறைக்குள் வைத்துப் பார்த்தவர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள்!
.தன் பிள்ளையோ,பெண்ணோ காதலிப்பத்தை விரும்பாத பெற்றோரோ அல்லது உறவினர்களோ புகார் தரும் பட்சத்தில் இந்த சட்டத்தை பயன்படுத்தி, அவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றுத் தரமுடியும். ஜாமினில் கூட வெளிவர முடியாது. நடந்த திருமணத்தையே சட்டப்படி ரத்து செய்துவிடும் அரசாங்கம்! உ.பி அரசின் பார்வையில் இரு மத்ததைச் சேர்ந்த ஆணும்,பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்தால் அது திருமணமல்ல, ‘சூன்யா’ என்று அர்த்தமாகுமாம்!
’’அதாகப்பட்டது, இளசுகளின் காதலை அங்கீகரிக்க மறுக்கும் பெற்றோர்களே, இனி நீங்கள் ஆணவ கொலையில் ஈடுபட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள் எங்களிடம் புகார் தந்தால், கவர்மெண்ட் அவர்களை சட்டப்படி நிம்மதியாக வாழவிடாமல் செய்துவிடும்..” என்பது தான் யோகி அரசு தந்துள்ள செய்தியாகும்!
வயதுக்கு வந்த இரு இளம் உயிர்களின் காதலை, நேசத்தை, பிணைப்பை, வாழ்க்கை ஒப்பந்தத்தை, மதப் பார்வையுடன் அணுகி மதமாற்ற முயற்சி என்று கொச்சைபடுத்தவும், தண்டிக்கவும் அரசாங்கமே முயற்சிப்பது ஒரு அதிபயங்கர வன்முறையாகத் தான் பார்க்கப்படும்.
நமது அரசியல் சட்டம் தனி மனிதனுக்கு தந்துள்ள உரிமையை உ.பி அரசு அவசரசட்டம் போட்டு பறிக்கிறது. அதற்கு கவர்னர் ஒப்புதலும் கிடைக்கிறது. இந்த தவறான முன்னுதாரணம் நாளை பாஜக ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படவும் வாய்ப்புண்டு!
மதவாதிகள் ஆட்சிக்கு வந்தால்,மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து விலகி, எப்படி நடந்து கொள்வார்கள்,சமூகத்தின் இயல்பு நிலைக்கு எப்படி வேட்டுவைப்பார்கள்,தனி மனித சுதந்திரமான காதல் போன்ற விவகாரங்களில் எவ்வாறெல்லாம் தலையிடுவார்கள்.. என்பதற்கு உத்திரபிரதேசமே அத்தாட்சி!
’அறம்’ சாவித்திரி கண்ணன்.

கருத்துகள் இல்லை: