
vikatan.com : எஸ்.மகேஷ்:
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விவிஐபி ஒருவருக்கு சொந்தமான
பண்ணை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில், கட்டுக்கட்டாக ரூபாய்
நோட்டுகள் இருந்துள்ளன. காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள்
திருடிச்சென்றுள்ளனர். அதில், மூன்று பேரை கூவத்தூரில் போலீஸார் கைது
செய்தனர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது கானத்தூர், நயினார்குப்பம்.
நீலாதிரை தெருவில் விவிஐபி ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த
வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன் தன்னுடைய
சொகுசு காரை அந்தப் பகுதியில் உள்ள இன்னொரு பண்ணை வீட்டில்
நிறுத்தியுள்ளார். நீண்ட நாள்களாக அந்த கார் பயன்படுத்தப்படவில்லை. இந்தச்
சூழ்நிலையில், கடந்த 27-ம் தேதி காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு,
அதிலிருந்த பொருள்கள் கொள்ளைபோனது.
இதுகுறித்து தகவலறிந்ததும் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண், காரை
சோதனைசெய்தார். அப்போது ,அவர் வைத்திருந்த பணம் கொள்ளைப்போனது தெரியவந்தது.
இதையடுத்து, கானத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும்
தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், காரிலிருந்து பணத்தைக் கொள்ளையடித்ததாக சிரஞ்சீவி, ஜெயா,
வேலு ஆகிய மூன்று பேரை கூவத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவில் போலீஸார்
கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, சிரஞ்சீவி பணத்தை கொள்ளையடித்ததை
ஒத்துக்கொண்டார். அவரிடமிருந்த பணத்தை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர்.
மூன்று பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கானத்தூரில் நடந்த பணம் கொள்ளைச்
சம்பவத்தில், புகார் கொடுத்த பெண், முதலில் ஒரு தொகையைக் குறிப்பிட்டார்.
அதன்பிறகு விசாரித்தபோது, முதலில் கூறிய தொகையைவிட கூடுதலான தொகையைக்
கூறினார். இதனால், கொள்ளை போன பணத்தின் மதிப்பு லட்சத்தைத் தாண்டியது. பணம் கொள்ளைபோன புகாரை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், ஆளுங்கட்சி தரப்பிலிருந்து சிலர் சிபாரிசுசெய்தனர்.
இதனால், வழக்கின் வேகம் சூடுபிடித்தது. போலீஸ் உயரதிகாரிகள் நேரடியாகக்
களமிறங்கினர்.
கார் நிறுத்தப்பட்டிருந்த பண்ணை வீட்டில் காவலாளியாகப்
பணியாற்றும் சின்னப் பையனிடம் விசாரித்தோம். அப்போது அவர், பணம் கொள்ளைச்
சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டார்.
இருப்பினும், அவர்மீது எங்களுக்கு சந்தேகம் இருந்ததால், அவரின்
நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்தோம். அடிக்கடி சிரஞ்சீவியிடம் போனில்
பேசுவது தெரியவந்தது. அப்போது சிரஞ்சீவி, கூவத்தூரில் இருப்பது
தெரியவந்தது. அவரைப் பிடிக்க நேற்றிரவு அங்கு சென்றோம். இந்த கொள்ளைச்
சம்பவத்தில் சிரஞ்சீவி மட்டுமல்லாமல் இன்னும் சிலருக்குத் தொடர்பு
இருப்பதும் எங்களுக்குத் தெரிந்தது. இதனால், அவர்களை நேற்றிரவு கூவத்தூரில்
கைதுசெய்தோம். காரிலிருந்து கொள்ளையடித்த பணம் மற்றும் சில பொருள்களை
மீட்டுள்ளோம்" என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காவலாளி சின்னப்பையன் வீட்டுக்கு
வந்த சிரஞ்சீவி, கார் குறித்த தகவலைக் கேட்டுள்ளார். அப்போது சின்னபையன்,
இந்த கார், பக்கத்தில் உள்ள ஒரு விவிஐபி-க்கு சொந்தமானது. நீண்டநாள்களாக
இங்கு நிறுத்தியுள்ளார்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகுதான், காருக்குள்
என்ன இருக்கும் என்று இருவரும் பேசியுள்ளனர். அப்போது காருக்குள் நகை, பணம்
இருக்குமோ என்ற சந்தேகம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே
கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர்" என்றார்.
இதற்கிடையில், புகார் கொடுத்த பெண் பிரபலமானவர். அவருக்கு
வேண்டப்பட்ட விவிஐ-பிக்கு சென்னையில் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதனால்,
வருமான வரித்துறைக்கு டிமிக்கி கொடுக்க காரில் கோடிக்கணக்கில் பணம், நகை,
வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் இருந்ததாகத் தகவல்கள்
வெளியாகின. ஆனால், அதை போலீஸாரும் சம்பந்தப்பட்டவர்களும் மறுத்துள்ளனர்.
இதனால், கானத்தூர் போலீஸ் நிலையம் மட்டுமல்லாமல் தென்சென்னை காவல்
மாவட்டமே பரபரப்பாகக் காட்சியளித்தது.
காருக்குள் என்ன இருந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள், போலீஸார் மற்றும் கொள்ளையடித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக