ஞாயிறு, 27 ஜனவரி, 2019

குடியரசு அணிவகுப்பில் தமிழகத்தை திட்டமிட்டு கேவலப்படுத்திய வடஇந்திய அரசு

தமிழர்கள் தவறாகச் சித்தரிக்கப்படுகிறார்களா?
 மின்னம்பலம் : 70ஆவது குடியரசு தினவிழாவையொட்டி நேற்று தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்புகளில் தமிழக மக்களின் ஆடை சித்தரிக்கப்பட்ட விதம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அனைத்து மாநிலங்களும் தத்தம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆடை அணிந்து வந்த நிலையில், தமிழக விவசாயிகள் நாற்று நடுவது, ஏறு தழுவுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக பெண்கள் ரவிக்கை அணியாமல் வெறும் புடவை மட்டும் அணிந்திருப்பதுபோல சித்தரிக்கப்பட்டது. விவசாயிகளும் ஆடையின்றி வெறும் கோவணம் மட்டும் கட்டியிருப்பது போலச் சித்தரிக்கப்பட்டது. இது தமிழகத்தின் தரப்பிலிருந்து கண்டனங்களை பெற்றுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகப் பெண்கள் ரவிக்கை அணியாத நிலை இருந்தது. போராட்டங்களுக்கு பின்னர் அந்த முறை ஒழிக்கப்பட்டுத் தற்போது தமிழக மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளதோடு உடை நாகரிகத்திலும் மேம்பட்டுள்ளனர். ஆனால் வெளிநாட்டவர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளும் குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழர்கள் அரைகுறை ஆடையுடன் சித்தரிக்கப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இன்னும் அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன் எப்படியிருந்தார்கள் என்பதை காண்பிக்க வேண்டுமா என்பதே எதிர்ப்பாளர்களின் கேள்வி.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுகையில், “இதில் உள்நோக்கம் ஏதுமில்லை. காந்தியின் 150ஆவது பிறந்தநாள் வரவுள்ளதை முன்னிட்டு கலாச்சார அணிவகுப்பு நடைபெற்றது. தமிழக விவசாயிகளும், பெண்களும் அரை ஆடையுடன் இருப்பதால் இனி நானும் அரை ஆடையுடன் இருக்கப் போகிறேன் என காந்தி தன்னுடைய ஆடை அணியும் பழக்கத்தை மாறியதைக் காட்டும் வகையில் அணிவகுப்பில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: