ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ரூ 700 அடிப்படைச் சம்பளம்; திங்கட்கிழமை கைச்சாத்து.. மீண்டும் ஏமாற்றப்பட்ட மலையக மக்கள்

tamilmirror -க.ஆ.கோகிலவாணி : கடந்த நான்கு மாதங்களாக இழுபறி
நிலையில் இருந்துவந்த கூட்டுஒப்பந்த விவகாரம், இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  700 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிகட்டப் பேச்சுவார்த்தை, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தில், இன்று (25) நடைபெற்றது.
இன்றையப் பேச்சுவார்த்தையில், தொழில் அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் மத்தியஸ்தம் வைக்க, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் கலந்துகொண்டன.

இதன்போது, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷும், அரசாங்கம் சார்பில் புதிய முன்மொழிவை முன்மொழிந்துள்ளனர்.
அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாயும்  விலைக் கொடுப்பனவாக 50 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியமாக 105 ரூபாய் என்ற அடிப்படையில், மொத்தச் சம்பளம் 855 ரூபாயும்   மேலதிகமாகப் பறிக்கப்படும் கொழுந்து ஒரு கிலோவுக்கு 40 ரூபாயும் வழங்கப்படவுள்ளன. இந்த முன்மொழிவுகளுக்கு, இருதரப்பும் இணங்கியுள்ளன.
மேலும் தொழிலாளர்களுக்கு, நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்கும் அரசாங்கமும் கம்பனிகளும் முன்வந்துள்ளன.   2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரைக்கான நிலுவைக்கொடுப்பனவு, தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்ற நாள்களை அடிப்படையாக வைத்து வழங்கப்படவுள்ளன.
நிலுவைக்கொடுப்பனவை வழங்குவதற்கு, போதியளவு நிதி இல்லை என்று கம்பனிகள் அறிவித்ததால்,  தேயிலைச்சபையிலிருந்து 150 மில்லியன் ரூபாயை நிதியை கம்பனிகளுக்கு வழங்க, அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதில் 50 மில்லியன் ரூபாய் நிதியை, அரசாங்கம் கம்பனிகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனவும் 100 மில்லியன் ரூபாய் நிதி, தோட்டத் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தின் தரப்பில் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளைபேசெட் தடை இரத்துச் செய்யப்பட்டுள்ளதெனவும் எனவே, காடுகளாகியுள்ள தேயிலைத் தோட்டங்களைத் துப்புறவுச் செய்து,  தொழிலாளர்களுக்கு தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பானச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும், கம்பனிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இம்முறை செய்துகொள்ளப்படவுள்ள கூட்டுஒப்பந்தத்தின் பிரதிகள், தமிழ்மொழியில் மொழிபெயர்ப்பு செய்து, தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: