செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஜார்ஜ் பெர்ணான்டஸ்.. எமர்ஜென்சி.. கலைஞர்.. புலிகளின் ஆயுத கப்பலை தடுக்காமல் சர்ச்சையில் சிக்கியவர்

BBC :சோஷியலிஸ்ட் தலைவராக
வாழ்க்கையைத் தொடக்கி, உலகின் மிகப்பெரும் வேலை நிறுத்தத்தை  நடத்தி, பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்த சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எப்போதும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். தமது துணிகளை தாமே துவைத்துக் கொண்டவர். பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போதுகூட பாதுகாவலர் வைத்துக்கொள்ளாதவர் அவர்.
பம்பாய் சிங்கம் : 1967-ம் ஆண்டு பம்பாய் தெற்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்து எம்.பி.யானார் ஜார்ஜ் பெர்ணான்டஸ்.
மனைவி ஜெயா ஜெட்லி
பின்னால் சக்திமிக்க தொழிற்சங்கத் தலைவராகவும், செல்வாக்குமிக்க சோஷியலிஸ்ட் தலைவராகவும் அறியப்பட்ட, பிறகு அதிகாரம் மிக்க பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் ஆன ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு தேசிய அளவில் முதல் முதலில் முக்கியத்துவம் கிடைத்தது அப்போதுதான்.
அந்த தேர்தலுக்கு முன்பு மும்பை முனிசிபல் கவுன்சிலில் ஒரு கவுன்சிலராகதான் இருந்தார் பெர்ணான்டஸ்.  
இவரும் கலைஞரும் ஒரே தேதியில் பிறந்தவர்களாகும்.  ஜூன் 3தான்  இருவரின் பிறந்த நாள் ஆகும். 

தேர்தலுக்கு முன்பு, புகழ்பெற்ற பத்திரிகையாளரும் பெர்ணான்டசின் நண்பருமான விக்ரம் ராவ், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.கே.பாட்டீலிடம் குறும்பாக கேட்டுள்ளார் "நீங்கள் மும்பையின் கேள்விக்கப்பாற்பட்ட மாமன்னர். ஜார்ஜ் பெர்ணான்டஸ் என்று ஏதோ ஒரு முனிசிபல் கவுன்சிலர் உங்களை எதிர்த்துப் போட்டியிடுகிறாராமே?"
"யாரது ஜார்ஜ் பெர்ணான்டஸ்" என்று திருப்பிக் கேட்டுள்ளார் பாட்டீல்.
"உங்களை ஒருவராலும் வெல்ல முடியாது. ஆனால், ஒருவேளை நீங்கள் தோற்றுவிட்டால்" என்று கேட்டுள்ளார் விக்ரம் ராவ். "கடவுளே வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது" என்றாராம் எஸ்.கே.பாட்டீல்.
அந்த தேர்தலில் அவர் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசிடம் தோற்றுப்போயிருக்கிறார்.
"ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு "பம்பாயின் சிங்கம்" என்று பெயர். அவர் முழங்கினால் பம்பாய் முழுவதும் எதிரொலிக்கும். பல வேலை நிறுத்தங்களை அவர் நடத்தினார். ஆனால், 3 நாள்களுக்கு மேல் வேலை நிறுத்தம் நீடித்தால் அவரே உணவோடு தொழிலாளர்களின் இடங்களுக்கு செல்வார்," என்று பெர்ணான்டசுக்கு நெருக்கமான மற்றொரு பத்திரிகையாளர் விஜய் சங்வி தெரிவித்தார்.

1974 ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம்

1974ல் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தபோது இந்திய அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார் ஜார்ஜ் பெர்ணான்டஸ்.இந்திய விடுதலைக்குப் பிறகு சம்பளக் கமிஷன்கள் வந்தன. ஆனால், ரயில்வே தொழிலாளர்களின் ஊதியம் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை. 1973 நவம்பரில் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பில் (ஆல் இந்தியா ரயில்வே மென்'ஸ் பெடரேஷன்) தலைவரானார் ஜார்ஜ் பெர்ணான்டஸ். இதையடுத்து, ரயில்வே தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரி வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
ஜார்ஜ் பெர்ணான்டஸ் எடுத்த முன் முயற்சியால், டாக்ஸி ஓட்டுநர்கள், மின் ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோரும் ஆதரவாக வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.
மெட்ராஸ் ரயில்பெட்டித் தொழிற்சாலையின் பத்தாயிரம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக தெருவுக்கு வந்தனர்.
கயாவில் ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருப்புப்பாதையில் அமர்ந்தனர். ஒரே நேரத்தில் மொத்த நாடும் ஸ்தம்பித்தது. இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டினை எடுத்தது அரசு.
பல இடங்களில் ரயில் பாதைகளைத் திறக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டது.
வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, 30 ஆயிரம் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கை. இந்திரா காந்தி அரசு இரக்கமற்ற முறையில் இந்த வேலை நிறுத்தத்தை நசுக்கியது.
"தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றில் இப்படி கொடூரமான முறையில் ஒரு வேலை நிறுத்தமும் ஒடுக்கப்பட்டதில்லை. பிரிட்டீஷார்கூட இப்படி கொடூரமாக நடந்ததில்லை. ஜார்ஜ் பெர்ணான்டஸ் சிறையில் அடைக்கப்பட்டார்" என்கிறார் பத்திரிகையாளர் விக்ரம் ராவ்.
"ரயில்வே போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதுதான் இந்திரா காந்தி பொக்ரானில் அணு ஆயுதச் சோதனை நடத்தினார். உலகம் அதிர்ந்தது. ஆனால், இந்தியர்களை இது அதிகம் பாதிக்கவில்லை. தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்க வேலை நிறுத்தம்தான் தொடர்ந்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது" என்கிறார் விஜய் சங்வி.
உலகின் மிகப்பெரும் தொழிற்சங்க செயற்பாடு இது என்று கூறப்படும் நிகழ்வு இது.

எமர்ஜென்சியில் தலைமறைவு

1975 ஜூன் 25-ம் தேதி இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது இரவு 11 மணி வரை எதிர்க்கட்சிகள் அலுவலகத்தில் இருந்தார் ஜார்ஜ்.அந்த இரவு அங்கேயே தூங்கிவிட்டார். அடுத்த நாள் காலை அவர் புவனேஷ்வருக்கு விமானத்தில் சென்றார். அப்போதுதான் அவருக்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருப்பது தெரியும்.
அங்கிருந்து நேராக டெல்லிக்கு சாலை வழியாக வந்த ஜார்ஜ் தம் வீட்டுக்கு நேராக வந்ததாகவும், தம்முடன் சில நாள்கள் தங்குவதாக கூறிய ஜார்ஜ் பிறகு பரோடா சென்றுவிட்டதாகவும் கூறுகிறார் விஜய் சங்வி.
அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஒன்றரை மாதம் கழித்து சீக்கியர் போன்ற தோற்றத்தில் பத்திரிகையாளர் விக்ரம் ராவை சந்தித்துள்ளார். தமது சொந்த நாட்டிலேயே தாம் அகதியாகிவிட்டதாக அவர் அப்போது கூறியதாக நினைவுகூர்கிறார் விக்ரம் ராவ்.
எமர்ஜென்சி காலத்தில் அவர் மாறுவேடத்தில் பல பயணப்பட்ட அவர் தமிழகம் வந்து கருணாநிதி ஏற்பாட்டில் சென்னையில் தங்கியிருந்தார் என்று திமுக தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
கல்கத்தாவில் அவர் ஒரு தேவாலயத்தில் கைது செய்யப்பட்டவுடன், அன்று இரவு ரகசியமாக இலியுஷின் என்ற ரஷ்ய ராணுவ விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார்."அந்த நேரத்தில் இந்திரா காந்தி மாஸ்கோ சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவரை கைது செய்ததும் தொலைபேசி மூலம் இந்திரா காந்தியின் அறிவுரையைப் பெற அதிகாரிகளுக்கு சிறிது நேரம் பிடித்தது. அதற்குள் அந்த கிறித்துவ தேவாலயத்தின் போதகர் விஜயன் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி துணைத் தூதர்களிடம் ஜார்ஜ் கைது செய்யப்பட்ட விவரத்தைக் கூறிவிட்டார்.
விரைவிலேயே அவர் ஒரு 'என்கவுண்டரில்' கொல்லப்படுவார் என்ற நிலை இருந்தது. ஆனால், உடனடியாக இந்த செய்தி லண்டனிலும், பான் நகரிலும் உடனடிச் செய்தியாக வெளியானது. பிரிட்டிஷ் பிரதமர் ஜேம்ஸ் கால்லகன், ஜெர்மனி சான்சலர் வில்லி பிரான்ட், ஆஸ்திரிய சான்சலர் புரூனோ க்ராஸ்கி, ஆகியோர் ஜார்ஜை என்கவுன்டரில் கொன்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அப்போது மாஸ்கோவில் இருந்த இந்திராவை தொலைபேசி மூலம் எச்சரித்தனர். சர்வதேச எதிர்வினைகளைக் கண்டு பயந்தார் இந்திரா. இதனால்தான் ஜார்ஜ் சுட்டுக் கொல்லப்படாமல் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்," என்கிறார் விக்ரம் ராவ்.

திகாரில் கொண்டாட்டம்

1977ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, சிறையில் இருந்த ஜார்ஜ் முஜாபர்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்தார்.
இது குறித்துக் கூறுகிறார் பத்திரிகையாளர் விக்ரம் ராவ் "நாங்கள் சிறையில் 17 வது வார்டில் இருந்தோம். தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இரவு சிறைக்கு வந்த டாக்டர் ஒருவரிடம் முஜாபர்பூரில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று கேட்டோம்.
  ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக கூறினார். அதிகாலை 4 மணிக்கு, நான் ஒளித்து வைத்திருந்த சிறு ரேடியோவை எடுத்தேன். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஸ்டேஷன் கிடைத்தது. அதில் ரேபரேலி தொகுதியில் மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்று இந்திரா காந்தியின் தேர்தல் முகவர் கேட்பதாக கூறினார்கள். தோற்றவர்கள்தானே மறுவாக்கு எண்ணிக்கை கேட்பார்கள். உடனே எனக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. படுத்திருந்த ஜார்ஜை எழுப்பி இந்திரா தோற்றதைக் கூறினேன். சிறை முழுவதும் தீபாவளியைப் போல ஒரு மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் மற்றவரை கட்டிப்பிடித்துக்கொண்டோம்.
  1977 ஜனதா கட்சி அமைச்சரவையில் ஜார்ஜ் தகவல் தொழில்தொடர்புத் துறை அமைச்சரானார். பிறகு தொழில்துறை அமைச்சரானார். ஜனதா கட்சி உடையத் தொடங்கியபோது நாடாளுமன்றத்தில் மொராஜி தேசாயை உறுதியாக ஆதரித்தார் ஜார்ஜ். ஆனால், 24 மணி நேரத்தில் அவர் சரண்சிங் முகாமுக்குத் தாவினார். இந்த பல்டியால் அவருக்கு எதிரான கோபம் எழுந்தது. ஆனால், சரண்சிங் அமைச்சரவையில் அவருக்கு இடம் தரப்படவில்லை.

  லைலா கபீருடன் திருமணம்

  கர்நாடக மாநிலம் மங்களூரில் கத்தோலிக்க கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த ஜார்ஜ், கொங்கனியை தாய்மொழியாக கொண்டவர். பிறகு தமிழ் உட்பட பல மொழிகளைக் கற்றவர். குறிப்பாக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் புலமை பெற்றவர்.
  நேரு அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ஹுமாயூன் கபீரின் மகள் லைலா கபீரை ஒரு விமானப் பயணத்தில் மனதைப் பறிகொடுத்து, திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் இந்திரா காந்தியும் பங்கேற்றது ஓர் ஆச்சரியம்.
  ஆனால், 1984ல் கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். 1977ல் ஜனதா ஆட்சியில் தொழிற்துறை அமைச்சராக ஜார்ஜ் இருந்தபோது அவரது சிறப்பு உதவியாளராக இருந்த அஷோக் ஜெட்லியின் மனைவி ஜெயாவை முதல் முதலாக சந்தித்தார். பிற்காலத்தில் அவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார் ஜார்ஜ்.

  சீப்பே பயன்படுத்தாத ஜார்ஜ்

  நூல்களை நேசித்த, வீட்டிலேயே மிகப்பெரிய நூலகத்தை வைத்திருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஒரு போதும் சீப்பு பயன்படுத்தியதில்லை. தமது துணியை தாமே துவைத்துக்கொண்டவர். அந்த துணிகளை அவர் இஸ்திரி போடுவாரே தவிர, கஞ்சி போட்டுக்கொள்ளமாட்டார் என்கிறார் ஜெயா ஜெட்லி.
  உணவின் மீது அதீத ஆசை கொண்ட ஜார்ஜ் கொங்கனி மீனும், நண்டும் விரும்பி சாப்பிடுவார். தமது ஓட்டுநரையும் தம்முடன் ஒரே மேசையில் அமர்ந்து உண்ண வைப்பார் என்கிறார் ஜெயா.  பாதுகாவலர் இல்லாத பாதுகாப்பு அமைச்சர்

  இந்தியாவின் மத்திய அமைச்சர்களில் வீட்டுக்கு பாதுகாவலர் வைத்துக்கொள்ளாத ஒரே அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்தான். யார் வேண்டுமானாலும், நேராக அவர் வீட்டுக்குள் சென்றுவிட முடியும். இதற்குப் பின்னால் ஒரு கதையும் உள்ளது. அதை நினைவு கூர்கிறார் ஜெயா ஜெட்லி "எதிர்க்கட்சி எம்.பி.யாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் இருந்தபோது அவரது எதிர்வீட்டில் இருந்தவர் உள்துறை அமைச்சர் சங்கர்ராவ் சவான்.
  அவரது வீட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். அவர் நாடாளுமன்றத்துக்கு கிளம்பும்போதெல்லாம் ஜார்ஜ் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வந்துவிடாதபடி தடுக்க, ஜார்ஜ் வீட்டின் பூட்டை அமைச்சரின் பாதுகாவலர்கள் பூட்டிவிடுவார்கள். அவர்கள் சென்ற பிறகே கதவு திறக்கப்படும். இதனால், ஆத்திரமடைந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ். நானும்தான் அவசரமாக நாடாளுமன்றம் செல்லவேண்டும்.
  இதை நான் ஏற்க முடியாது என்று கூறி, தமது வீட்டின் கேட்டையே பெயர்த்து எடுத்துவிட்டார். அதன் பிறகும் அவர் வீட்டுக்கு பாதுகாவலரை வைத்துக்கொண்டதில்லை. பாதுகாப்பு அமைச்சராக ஆன பிறகு, பிரதமர் வாஜ்பேயி அவரிடம் பாதுகாவலர்களை வைத்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ஜார்ஜ் கண்டுகொள்ளவில்லை.


  ஆனால், நாடாளுமன்றத்தின் தாக்குதல் நடந்த பிறகு, "ஜார்ஜ் பெர்ணான்டஸை கொல்வது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டார் அது நாட்டுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்று கூறினேன். அதன்பிறகே ஓரிரண்டு பாதுகாவலர்களை அரைமனதோடு வைத்துக்கொண்டார்" என்கிறார் ஜெயா ஜெட்லி.

  டெஹல்கா புலனாய்வு

  ஒரு பாதுகாப்பு பேரம் ஒன்றுக்காக ஜெயா ஜெட்லி பணம் பெறுவதாக காட்டும் ஒரு ரகசிய கேமிரா பதிவு ஒன்றைக் காட்டி புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது டெஹல்கா பத்திரிகை.
  இது பற்றிக் கூறிய ஜெயா "அந்த விடியோவில் இடம் பெற்றவர்களை நான் முன்பு எப்போதும் சந்தித்தது இல்லை. அந்த உரையாடல் நடந்தபோது, என்னிடம் கட்சிக்காக ஒன்று தரலாமா என்று கேட்டனர். அவர்கள் என்ன தருகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. கட்சிக்கு நன்கொடை தருவது சட்டவிரோதமல்ல. அவர்கள் எதையோ தர முன்வந்தபோது நான் மைசூரில் உள்ள அமைச்சர் மாநாடு ஒன்று நடத்துவதால் அங்கு அனுப்பும்படி சொன்னேன். நல்லது... என்று அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
  பிறகு அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏதோ பிரச்சனை என்றார்கள். அது பாதுகாப்பு அமைச்சகம் செய்வது. எனக்குத் தெரியாது என்று கூறினேன். ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப தாங்கள் கடிதம் அனுப்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து பதில் இல்லை என்றும் கூறினார்கள்.
  அவர்கள் கூறியது, அவர்கள் ஏதோ அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பது போலவும், அமைச்சகத்தில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டிருப்பதுபோலவும் இருந்தது. அப்படி ஏதும் தப்பு நடந்தால் அவர்கள் எல்லோரையும் சமமாக பாவிக்கும்படி பார்த்துக்கொள்கிறேன் என்றேன். உடனே, பாதுகாப்பு அமைச்சர் வீட்டில் உட்கார்ந்துகொண்டு நான் பணம் வாங்குவதாக அவர்கள் ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்" என்றார் ஜெயா.
  உண்மை என்னவானாலும், அதற்கான விலையை அரசியலில் தந்தார் ஜெயா. கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. அதனால், அவர் மட்டுமல்ல, பெர்ணான்டசும் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது.

  ஈழ ஆதரவு

  தமிழகத்துக்கு வெளியே, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த இந்தியத் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். ஈழத்தை ஆதரவு மாநாடு ஒன்றையும் நடத்தியவர் அவர். பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் ஏற்றிச்சென்ற ஒரு கப்பலை இடைமறிக்கவேண்டாம் என்று அவர் கூறியதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சரே புலிகளின் ஆதரவாளர் என்று இலங்கை விமர்சித்தது.

  கருத்துகள் இல்லை: