செவ்வாய், 29 ஜனவரி, 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கைகால்கள்: கர்நாடக பெண்ணினுடையதா? போலீஸ்...

tamil.thehindu.com : சமீபத்தில் பெருங்குடி குப்பை மேட்டில் கிடந்த பெண்ணின் ஒரு கை, இரண்டு கால்கள் யாருடையது என்பதில் பெருங்குழப்பம் நீடிக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடல் பாகங்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தனிப்படை கர்நாடகா விரைந்துள்ளது.
கடந்த 20-ம் தேதி சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் என்பதை தாண்டி 5 வது கொலையாக குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரின் ஒரு கை இரண்டு கால்கள் மட்டும் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பை கிடங்குக்கு கொண்டுவரப்படும். அவ்வாறு வந்த ஒரு லாரியில் கொண்டுவரப்பட்ட  குப்பையில் இளம்பெண்ணின் உடலின் கை, கால்கள் மட்டுமே பார்சல் செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளம்பெண்ணைக் கொலை செய்து கைகாலை மட்டும் வெட்டி கச்சிதமாக பார்சல் செய்து குப்பையில் வீசியுள்ளது ஒரு கும்பல்.
இதுகுறித்த தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக்கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் வந்த லாரி குறித்து விசாரணை நடத்தியதில் அது கோடம்பாக்கம் பவர் ஹவுசிலிருந்து குப்பையை ஏற்றிவந்தது தெரியவந்தது.
30-லிருந்து 35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் பச்சைக்குத்தப்பட்டிருந்தது. உடலின் நிறம், டாட்டுவை வைத்து பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று போலீஸார் கருதினர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதினர்.
கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் உடல் எங்கே என போலீஸார் தேடினர்.  நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்த போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கொலையாளிகள் மிகத்திறமையானவர்களாக இருந்துள்ளனர். எந்த தடயத்தையும் வைக்கவில்லை.
தடயவியல் துறையினரும், உடலின் பாகத்தை சோதித்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி அப்பெண் கொலை செய்யப்பட்டது இரவு 10 மணிக்கு மேல் இருக்கலாம். மறுநாள் மாலை 5 மணிக்கு உடல் பாகங்கள் குப்பை மேட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இரவு அல்லது அதிகாலையில் இதை குப்பைத்தொட்டியில் வீசிச்சென்றிருக்கலாம் கொலை செய்ததது உடலை துண்டாக வெட்டியது ஒருவராக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் கொலை செய்தப்பின் உடலை எந்திரம் மூலம் அறுத்துள்ளனர். இதை செய்தவர்கள் நிச்சயம் கொடூர மனம் படைத்தவர்கள் அல்லது தீவிர போதைக்கு அடிமையானவர்களாக இருக்கலாம்.
துண்டிக்கப்பட்ட உடலை எந்திரம் மூலம் அறுத்துள்ளதன்மூலம் அவர்கள் ஒரு இடத்தில் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் நிதானமாக பெண்ணின் உடலை அறுத்துள்ளனர். போலீஸை குழப்ப வேண்டும் என்பதற்காக ஒரு சில பாகங்களை மட்டும் போட்டுள்ளனர். என்கிற முடிவுக்கு வந்தனர்.
அப்படியானால் போலீஸார் முன் உள்ள கேள்வி மீதமுள்ள பாகங்களை என்ன செய்திருப்பார்கள். எரித்திருப்பார்களா? புதைத்திருப்பார்களா? இதை எப்படி கண்டுபிடிப்பது. கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கு முன் கொலை செய்யப்பட்டவர் யார் என கண்டுபிடிக்க வேண்டும் என்பது போலீஸாரின் முக்கிய பணியாக இருந்தது. உடலின் சில பாகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் யார் என கண்டுபிடிக்க என்ன செய்வது?
முதலில் அவரது கையில் உள்ள டாட்டூ பச்சை குத்திய அடையாளம். இரண்டாவது டிஎன்ஏ சோதனை, மூன்றாவது ஆதார் மூலம் தேடுவது, நான்காவது பெண்ணின் கையில் உள்ள விரல் நகங்களில் வேறு யாருடைய முடி, சதை துணுக்குகள் உள்ளதா என்கிற சோதனை.( இவை பின்னர் குற்றவாளியை இனம் காணவும் குற்றத்தை நிரூபிக்கவும் உதவும்)
முதல் சோதனை டிஎன்ஏ சோதனை. இதற்கு தேவை தமிழகத்தில் காணாமல் போன பெண்கள் பட்டியலை எடுத்து அதில் கிடைத்த பெண்ணின் உடல் பாகங்களோடு ஒத்துப்போகும் சம்பந்தப்பட்ட யாராவது வந்தால் அவர்கள் டிஎன்ஏவை எடுத்து உடல் பாகங்களோடு ஒப்பிட்டு அது ஒத்துப்போனால் பெண் யார் என்று தெரியும்.
இதற்கு காணாமல் போன பெண்களின் பட்டியல் மட்டுமல்ல உறவினர்கள் அதை அடையாளம் காட்டி ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக வருவது ஆதார். கைரேகையை வைத்து அவரது ஆதார் அடையாளத்தை காணலாம் என சிலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கைவிரல் ரேகை, கண் ரேகை இரண்டையும் வைத்து யாருடைய தகவலையும் வாங்க முடியாது. இதை இதுவரை யாரும் நடைமுறைப்படுத்தியதும் இல்லை என்பதால் போலீஸாருக்கு அந்த வழி அடைக்கப்பட்டது. மூன்றாவது வழி மூன்றாவது கண் சிசிடிவி அதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக போலீஸின் நம்பிக்கை காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலே.
இந்நிலையில் போலீஸாருக்கு புதிய நம்பிக்கையாக கர்நாடகாவில் காணாமல்போன பெண் கொலை செய்யப்ப்பட்ட பெண்ணாக இருக்கலாம் என்கிற தகவல் நம்பிக்கையை தந்துள்ளது. இதையடுத்து அவர் குறித்த தகவலை சேகரிக்க கர்நாடகாவுக்கு போலீஸ் தனிப்படை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒருவேளை அந்தப்பெண் தான் கொலை செய்யப்பட்ட பெண் என நிரூபணமானால் அதையடுத்து நடக்கும் விசாரணையில் கொலையாளியும், மற்ற உடல் பாகங்களும் சிக்கலாம். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் இது சென்னை போலீஸாருக்கு மிகச்சிறந்த ஒரு வழக்காக இருக்கும்.
அவ்வாறு நடக்காத பட்சத்தில் போலீஸ் விசாரணை நீளும். ஆனால் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தால் புலன்விசாரணையில் அது ஒரு மைல்கல் ஆகும்

கருத்துகள் இல்லை: