வியாழன், 6 டிசம்பர், 2018

துரைமுருகன் திறந்த கதவை மூடிய ஸ்டாலின்

துரைமுருகன் திறந்த கதவை மூடிய ஸ்டாலின்மின்னம்பலம் : திமுகவில் என்னதான் நடக்கிறது? - மினி தொடர் - 6 - ஆரா கூட்டணி குறித்த விவாதங்களை துரைமுருகன் பேட்டியின் மூலமாகத் தூண்டிவிட்டுவிட்டு, அதன்பின் எல்லா பழியையும் ஊடகங்கள் மீதே தூக்கிப் போடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் தன்னை சந்தித்த திருமாவளவனோடும் வைகோவும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்காமல் ’தனித்து’ செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “திமுக கூட்டணி பற்றி விளம்பரம் கொடுத்த ஊடகங்களுக்கு நன்றி” என்று சொன்னாரே தவிர, துரைமுருகனின் பேட்டிக்கு நேரடியான எந்தக் கருத்தும் சொல்லவில்லை.
கலைஞர் தேவைப்பட்டால் ஆங்கில ஏடான, ‘தி இந்து’வே சொல்லியிருக்கிறது என்பார். தேவையில்லை என்றால் நம்மைப் பற்றி மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு காட்டியிருக்கும் வயிற்றெரிச்சலைப் பாரீர் என்பார். இப்படித்தான் ஸ்டாலினும்.

துரைமுருகன் பேட்டியை வைத்து எத்தனை நாளுக்குத்தான் விவாதித்துக் கொண்டிருப்பீர்கள் என்று அவருக்கு விளக்கம் தருவதற்காக திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடந்த வாரத்தில் தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்களுக்குப் பேட்டி அளித்தார்.
துரைமுருகன் அளித்த பேட்டி என்பது திமுக தலைவரான ஸ்டாலினுக்குத் தெரியாமல் அளித்த பேட்டி என்பதை உறுதிப்படுத்துவதாக ஆ.ராசாவின் பேட்டிகள் அமைந்திருக்கின்றன. ராசாவும் ஊடகங்கள்தான் திமுக கூட்டணியைப் பிரித்து மேய்கின்றன என்று குற்றம்சாட்டுகிறார். அதேநேரம் அவர் துரைமுருகன் பேட்டியில் சொன்ன சில விஷயங்களைப் பிரித்து மேய்ந்துவிட்டார்.
“இப்போது எங்களோடு இருக்கும் கட்சிகள் கடைசி நேரத்தில் முறுக்கிகினு போகலாம். கடைசி வரைக்கும் எங்களை எதிர்க்கிற கட்சிகள் திடீர்னு எங்க கூட வரலாம்” என்று சொல்லியிருந்தார் துரைமுருகன். விடுதலைச் சிறுத்தைகள் கடைசி நேரத்தில் வெளியே போகலாம், பாமக கடைசி நேரத்தில் உள்ளே வரலாம் என்ற செய்தியை பூசியும் பூசாமலும் சொன்னதுதான் துரைமுருகன் பேட்டி.
ஆனால், ‘’எல்லா பணிகளையும் ஊடகங்களே செய்கின்றன” என்று சொல்லிவிட்டு துரைமுருகனின் பேட்டிக்கு பதில் பேட்டி போலவே ஆ.ராசா பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார் தன் பேட்டிகளில்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு தோழமைக் கட்சிகளை மட்டுமே அழைத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, குறிப்பாக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைக்கவில்லையா என்ற கேள்விக்கு ஆ.ராசாவின் பதில் பல செய்திகளைச் சொல்கிறது.
“கடந்த கால அனுபவம் இருக்கிறது. அவங்களை எல்லாம் கூப்பிட்டு எங்கள் சுயமரியாதையை சுட்டுக் கொள்ள நாங்க விரும்பலை” என்கிறார் ராசா. மேலும்,

“பிஜேபி, அதிமுகவை வீழ்த்த திமுக ஒன்றே போதும். கூட்டணிக்கு வரும் கட்சிகள் வெற்றி வாய்ப்பு இருக்குமானால் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவோம். ஆனால், இதை ஏற்பதும், ஏற்காததும் அவர்களது விருப்பம். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் திமுகவே வெற்றி பெறும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார் ஆ.ராசா.
அதாவது, துரைமுருகன் திறந்து வைத்த கதவை ராசாவை விட்டு மூடச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். பாமகவுக்காகக் கடந்த வாரம் திறக்கப்பட்ட கதவு இந்த வாரம் மூடப்பட்டிருக்கிறது.
துரைமுருகன் கொடுத்த பேட்டி ஸ்டாலின் அறியாமல் கொடுக்கப்பட்டது என்றால் ஆ.ராசாவின் பேட்டி ஸ்டாலினுடன் ஆலோசித்து அளிக்கப்பட்ட பேட்டியாகவே தெரிகிறது. ஏனென்றால் துரைமுருகனை விட ஆ.ராசா கட்சியில் ஜூனியர். ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றாலும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர். எனவே, அவர் வழியாக வெளிவரும் கருத்துகளுக்கு பெரும் அந்தஸ்து உண்டு.
எனவேதான்... துரைமுருகன் தனக்குத் தெரியாமல் திறந்து வைத்த கதவை, ஸ்டாலின் ஆ.ராசாவிடம் சொல்லி மூடச் சொல்லியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: