சனி, 8 டிசம்பர், 2018

ஆ.ராசாவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது எந்த தலித்கட்சியும் , முற்போக்கும் குரல் எழுப்பவில்லையே?

LR Jagadheesan : நம் சமகால அரசியலில் ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களும்
ஒரு தலித் ஆளுமையை ஒருசேர வேட்டையாடியது 2-ஜி விவகாரத்தில் ஆண்டிமுத்து ராசாவுக்கு நடந்தது. ஒருநாளல்ல, இருநாட்களல்ல; ஆண்டுக்கணக்கில் நீடித்த அநியாயம்.
இந்திய அரசு, அதன் அதிகாரிகள்; இந்திய அரசியல் கட்சிகள் அவற்றின் தலைவர்கள், இந்திய நீதித்துறை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஊடகத்துறை இந்த நான்கும் ஒன்றோடொன்று போட்டிக்கொண்டு அரங்கேற்றிய ஒப்புவமை இல்லாத குரூரமான பொதுவாழ்வின் வேட்டை அது. இந்திய அரசியலில் இதற்குமுன்பு இப்படி ஒரு ஜாதிய உள்நோக்கம் கொண்ட அரசியல் தாக்குதல் பொதுவெளியில் யார் மீதும் நடந்ததே இல்லை.
அப்போது திமுக தலைவர் கலைஞரும் திக தலைவர் வீரமணியும் சுபவீ, திருச்சி செல்வேந்திரன் போன்றவர்களும் தான் ஆ ராசா பக்கம் உறுதியாக நின்றார்கள். பகிரங்கமாக ஆ ராசா தரப்பு வக்கீல்களாய் வாதாடினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சில சமயம் ஆதரித்தது. பலசமயம் எதிர்த்தது. குறிப்பாக தேர்தல் மேடைகளில். மற்ற எந்த தலித் கட்சியும் அல்லது அறிவுசீவியும் ஆ ராசாவுக்கு ஆதரவாக பொதுவெளியில் களமாடவில்லை.
ஆனால் இன்று பூவை ஜகன்மூர்த்தியார்; செ கு தமிழரசனார் போன்ற தலித் மீட்பர்களுக்காகவும் ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினிகாந்த்தை தடுத்தாட்கொண்ட பா ரஞ்சித் என்கிற தலித் புரட்சியாளருக்காகவும் பகிரங்கமாக குரல் எழுப்ப மட்டும் அக்ரஹார அறிவுலகமும் அம்பேட்காரிய அறிவுலகமும் ஒன்றாய் சேர்ந்து களம் இறங்குகிறார்கள் என்றால் இதை எப்படி புரிந்துகொள்வது?

ஆ ராசாவைவிட பூவைஜகன்மூர்த்தியார், செகுதமிழரசன், பா ரஞ்சித் போன்றவர்கள் பெரிய அம்பேட்காரியவாதிகளா? தலித் மீட்பர்களா? அல்லது அரசியலில் பெரும் சாதனையாளர்களா? தலித் அரசியல் அதிகாரம் பெறுதலை சாத்தியமாக்கியவர்களா? அல்லது சாத்தியமாக்கப்போகிறவர்களா?
உங்கள் ஆதரவுக்கும் எதிர்ப்புக்குமான அளவுகோள் தான் என்ன? உங்களால் தலித் மீட்பர்களாக ஏற்கப்பட வேண்டும் என்றால் உயர்குல பெருமாட்டி ஜெயலலிதாவுக்கு சேவைசெய்திருக்க வேண்டும்; அல்லது குறைந்தபட்சம் அவரது ஆண்வாரிசாக அடுத்து உருவெடுக்க விரும்பும் ரஜினிகாந்த்துக்காவது சேவை செய்திருக்க வேண்டும் என்பது தான் முன் நிபந்தனையா?
அக்ரஹாரத்தோடு கைகோர்த்து அம்பேட்காரியர்கள் திராவிடம் மீதான போர்தொடுப்பதொன்றும் புதியதல்ல. ரவிக்குமாரில் துவங்கி, கிருஷ்ணசாமிகள் வரிசையில் பா ரஞ்சித் பயணிக்கிறார்.
ஜெயலலிதாவின் உடனுறைந்த உற்ற தோழி சசிகலாவின் கணவர் நடராஜனாரின் அணுக்கத்தோழர் கன்ஷிராம் கட்சி உத்தரப்பிரதேசத்தில் செய்துகாட்டிய அரசியலை தமிழ்நாட்டில் வேறொரு உருவில் உருவாக்க முயல்கிறார் பா ரஞ்சித். அது அவர் உரிமை.
ஆனால் அதன் நிரந்தர லாபம் என்னவாய் பரிணமித்திருக்கிறது என்பதை மட்டும் நீங்கள் ஒருமுறை நினைவில் நிறுத்துங்கள். உத்தரப்பிரதேசத்தில் யோகிஆதித்யநாத்துகளை உருவாக்கி முதல்வராய் வலுப்படுத்தியதில் மாயாவதிகளின் பங்கு கணிசமானது. நீங்கள் தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் அதைத்தான் உருவாக்கி முடிப்பீர்கள்.
ஏனென்றால் 20% பட்டியலின ஜாதிகளின் அரசியல் கூட்டணி என்பது மீதமுள்ள 80% பட்டியலினத்திற்கு வெளியிலான ஜாதிகளை ஓரணியாய் திரளச்செய்யும் என்பதை புரிந்துகொள்ள பெரிய கம்பசூத்திரம் எதுவும் தேவையில்லை. ராமாதாஸ் உருவாக்க முயன்று இன்றுவரை முடியாமல் போன “தலித் அல்லாதார்” அரசியல் அணிதிரட்டலை பா ரஞ்சித் வேறொருவகையில் உருவாக்க உதவுகிறார். அதற்குத்துணைபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களின் ஒத்துழைப்போடு தமிழ்நாட்டு ஆதித்தியநாத்தாக நித்தியானந்தா உருவானால் தமிழ்நாட்டு இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சியடைவார்கள். அதை நாம் எதற்கு கெடுக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை: