சனி, 8 டிசம்பர், 2018

காடுவெட்டி குரு குடும்பம் ஊருக்குள் நுழையவே முடியவில்லை பாதுகாப்பு கோரும் தலைவர்கள்!

குரு குடும்பத்துக்குப் பாதுகாப்பு: வலியுறுத்தும் வன்னியர் தலைவர்கள்!மின்னம்பலம் :பாமகவின் மூத்த தலைவரும் வன்னியர் சங்கத் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று வன்னியர் சங்கப் பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்மையில் குருவின் மகள் தன் அத்தை மகன் மனோஜை திருமணம் செய்துகொண்டார். இதற்கு பாமகவினர் கடுமையான இடையூறு செய்வதாகவும் குருவின் குடும்பத்த்தினரை காடுவெட்டி கிராமத்துக்குள்ளே விடமறுக்கிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடந்த ஐடி விங் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
குரு குடும்ப சர்ச்சையை பாஜக கையிலெடுக்க முயற்சி செய்கிறது’ என்று கூறியதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தப் பின்னணியில் டிசம்பர் 7ஆம் தேதியன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வன்னியர் சங்க பிரமுகர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படையாச்சியார் பேரவையின் தலைவரும், பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவருமான பெரோஸ் காந்தி, “காடுவெட்டி குருவின் மகளுடைய திருமணத்தை லட்சக்கணக்கானவர்கள் கூடி பாமகவும், வன்னியர் சங்கமும் முன்னின்று விழாவாக நடத்தியிருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பமான திருமணம் செய்துகொண்டுவிட்டார் என்றால் கூட, வரவேற்பு நிகழ்ச்சியையாவது பிரம்மாண்டமாக பாமகவினர் நடத்திக் காட்டியிருக்க வேண்டும்.


ஆனால், குருவின் குடும்பத்தினர் இன்று தங்கள் ஊருக்குள் நுழையவே முடியவில்லை என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கதறுகிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் எப்படி சும்மா இருக்க முடியும்?
காடுவெட்டி குருவின் மகன், மகள், உடன் பிறந்த தங்கை, எங்கள் குடும்பம் அத்தனை பேரும் பாமவை புரிந்துகொண்டுவிட்டோம். அவரும் (குருவின் மனைவி) புரிந்துகொள்வார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நாங்கள்வன்னிய சமுதாய்த்தைச் சேர்ந்ந்த தலைவர்கள். வன்னியர் சமுதாயத்துக்காக பாடுபட்ட ஒரு தலைவரின் தங்கை, ‘வன்னியர் சமுதாயத்தினர் யாரெல்லாம் இருக்கிறீர்களோ எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆவண செய்ய வேண்டும்’ என்று கேட்கிறார்.
அதனால்தான் நாங்கள் முன் வந்திருக்கிறோம். தமிழக முதல்வர், டிஜிபி, மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் இருக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து குருவின் குடும்பத்துக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம். இதற்காக முதல்வர், டிஜிபி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்” என்று கூறினார் பெரோஸ் காந்தி.
இதில் அரசியல் ஏதேனும் இருக்கிறதா என்று நாம் கேட்டபோது, “கடவுள் சத்தியமாக இதில் அரசியல் இல்லை. வன்னியர் என்ற உணர்வுடனேயே நாங்கள் பேசுகிறோம். குருவின் குடும்பத்தினருடன் எங்களுக்கு எந்த விதத் தொடர்பும் இல்லை” என்று கூறினார் பெரோஸ் காந்தி.

கருத்துகள் இல்லை: