செவ்வாய், 4 டிசம்பர், 2018

மேகதாட்டு: ஆணையத்தின் அனுமதி தேவை!

மேகதாட்டு: ஆணையத்தின் அனுமதி தேவை!minnambalam : “காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, மேகதாட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்” என்று ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் பேட்டியளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் டிசம்பர் மாதக் கூட்டம், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நேற்று (டிசம்பர் 3) டெல்லி சேவா பவனில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பித்தவுடனேயே, மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கான ஆய்வுக்குக் கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்குத் தமிழக அரசு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “கஜா புயலால் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதி அவர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால், கர்நாடகம் தரப்பிலிருந்தோ, மேகதாட்டுவில் அணை கட்ட தங்களுக்கு அதிகாரம் உள்ளதென வாதிடப்பட்டது. மேகதாட்டுவில் அணை கட்டினாலும் தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்று வாதிட்ட அவர்கள், தமிழகத்தின் எதிர்ப்பை நிராகரிக்க வேண்டுமெனவும் கோரினர். அப்போது தமிழகம், கர்நாடகம் இரு தரப்புக்கும் காரசார வாக்குவாதம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மசூத் உசேன், “ஆணையத்தின் கூட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது. இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது, காவிரி நீர் பங்கீடு குறித்து அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம். சில விஷயங்களில் முடிவு எடுத்துள்ளோம். அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும். இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது, காவிரி படுகை பகுதிகள் நல்ல மழை பெய்ததால் அதிக நீர் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேகதாட்டு விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த உசேன், “மேகதாட்டு விவகாரம் குறித்து தமிழகத் தரப்பு உறுப்பினர்கள் பேசினர். தமிழக அரசின் எதிர்ப்பு, கவனத்தில் கொள்ளப்படும். இது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வது குறித்தது. மேகதாட்டு அணை திட்ட அறிக்கையை மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கும். ஆணையம் அனுமதி அளித்தால் மட்டுமே மத்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: