ஞாயிறு, 2 டிசம்பர், 2018

ஆவடி கொலை: வேலைக்காரத் தம்பதியை தேடும் போலீஸ்!

ஆவடி கொலை: வேலைக்காரத் தம்பதியை தேடும் போலீஸ்!மின்னம்பலம் :
சென்னை ஆவடியில் வயதான தம்பதியர் கொல்லப்பட்ட வழக்கில், அவர்களது வீட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த தம்பதிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் போலீசார்.
ஆவடி அருகே சேக்காடு அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். அரசுத் துறையில் பணியாற்றிய இவர், தனது மனைவி விலாசினியுடன் வசித்து வந்தார். இவரது மனைவியும் அரசு ஊழியர் தான். பணி ஓய்வுக்குப் பிறகு, இவர்கள் சேக்காட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஆந்திராவிலிருந்து சுரேஷ்குமார் – லட்சுமி தம்பதியர் மூன்று வயது பெண் குழந்தையுடன், வீட்டு வேலைகள் செய்யும் பணியைத் தங்களுக்குத் தருமாறு கேட்டனர். இவர்களுக்குத் தங்கள் வீட்டின் சிறுபகுதியை ஒதுக்கித் தந்தார் ஜெகதீசன். சுமார் 10 நாட்களுக்கும் மேலாக, இவர்கள் அந்த வீட்டில் வேலை செய்து வந்தனர்.

கடந்த 27ஆம் தேதியன்று ஜெகதீசன் – விலாசினி தம்பதியர் வீட்டினுள் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அவர்களது தலையில் ரத்தக் காயங்கள் இருந்தன. அவர்கள் வீட்டில் இருந்த நாயும் தாக்கப்பட்டுக் கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்கம், வைர நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் திருடு போயிருந்தது. அந்த வீட்டில் தச்சு வேலைக்காகச் சென்ற ஊழியர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணையின்போது, அந்த வீட்டில் தங்கியிருந்த சுரேஷ்குமார் – லட்சுமி தம்பதியர் காணாமல் போனது தெரியவந்தது. அவர்களது குழந்தையும் வீட்டில் இல்லை. ஜெகதீசன் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 1) சுரேஷ்குமார் – லட்சுமி தம்பதியரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் போலீசார். இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் ஆவடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மீது இருபதுக்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார் சுரேஷ்குமார். இந்த விவரங்கள் அனைத்தும் இந்த கொலை வழக்கு தொடர்பான போலீசார் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: