வெள்ளி, 7 டிசம்பர், 2018

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு: சிபிஐ மீது குற்றச்சாட்டு!

minnambalam : டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரிக்கவில்லை என்று அவரது தந்தை ரவி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு: சிபிஐ மீது குற்றச்சாட்டு!நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாகப் பணியாற்றிவந்த விஷ்ணுப்பிரியா, சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்தார். இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி காவல் அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்ற சந்தேகங்கள் எழுந்துவந்த நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவியும் விஷ்ணுப்பிரியாவின் தோழி மகேஸ்வரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கு மீண்டும் நேற்று (டிசம்பர் 6) கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் ஐந்து காவல் துறை உயரதிகாரிகள் உட்பட ஏழு பேரை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
“விஷ்ணுப்பிரியா தற்கொலையில் உயரதிகாரிகள் அழுத்தம் தொடர்பான ஆதாரம் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகராஜன், வழக்கு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை: