செவ்வாய், 4 டிசம்பர், 2018

கிராமங்களில் சரிந்த வேலைவாய்ப்பு!... பணமதிப்பழிப்பு

கிராமங்களில் சரிந்த வேலைவாய்ப்பு!மின்னம்பலம் : நவம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புகள் நகரங்களில் வளர்ச்சியையும், கிராமங்களில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மந்தமாகவே இருக்கிறது.
இதுகுறித்து பொருளாதார ஆலோசனை மையமான இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நவம்பர் மாதத்தில் 6.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 6.9 விழுக்காடாக இருந்தது. ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் கிராமங்களில் வீழ்ச்சியையும், நகரங்களில் உயர்வையும் கண்டுள்ளது. நவம்பர் மாதக் கணக்குப்படி வயது வந்தவர்களில் 42.72 விழுக்காட்டினர் வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள். இது அக்டோபர் மாதத்தில் 42.4 விழுக்காடாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு இந்தியாவின் ஊழியர் பங்கேற்பு விகிதம் 47 முதல் 48 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஊழியர் பங்கேற்பு விகிதம் உயரவே இல்லை. இதுகுறித்து மேலும் இந்த அறிக்கையில், ‘நகரங்களில் அக்டோபர் மாதத்தில் 7.27 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் நவம்பரில் 7.56 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் கிராமங்களில் அக்டோபரில் 6.72 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் நவம்பரில் 6.14 விழுக்காடாக சரிவைக் கண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நவம்பரில் 402.29 மில்லியன் பேர் வேலைகளில் இருந்தனர். ஆனால் இது 2017ஆம் ஆண்டு நவம்பரில் 409.49 மில்லியனாக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபரில் 397 மில்லியன் பேர் வேலைகளில் இருந்தனர். நவம்பர் மாதக் கணக்குப்படி 28.54 மில்லியன் பேர் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வேலைவாய்ப்பற்ற 10.74 மில்லியன் பேர் தொடர்ந்து வேலை தேடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: