செவ்வாய், 4 டிசம்பர், 2018

செண்டினல்களால் 2 முறை வரவேற்கப்பட்ட மதுமாலா! 6 வருட ஆராய்ச்சியில் எந்த ஆபத்தும் நிகழவில்லை

North Sentinelese
tamil.indianexpress.com 6 வருட ஆராய்ச்சியில் யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை... செண்டினல்களால் 2 முறை வரவேற்கப்பட்ட மதுமாலா! தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் நம்மைவிட பின்தங்கி இருக்கலாம் ஆனால் சமூக இணக்கத்தில் அவர்கள் என்றுமே மேம்பட்டவர்கள்! North Sentinelese : இரண்டு வாரங்களுக்கு முன்பு, அந்தமான் நிக்கோபர் பகுதியில் இருக்கும் வடக்கு செண்டினல் தீவில் கிருத்துவ மதத்தை பரப்ப சென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் காவ். அவருக்கு எச்சரிக்கை அளித்து திருப்பி அனுப்ப முற்பட்டனர் அந்த பழங்குடிகள். ஆனால் தொடர்ந்து இரண்டு நாட்களாக அந்த தீவிற்கு அருகிலேயே சுற்றித் திரிந்திருக்கிறார் ஆலன்.

தன்னை அழைத்து வந்த மீனவர்களை கரைக்கு அனுப்பிவிட்டு செண்டினல் தீவிற்குள் கால் வைத்த ஆலனை கொன்றுவிட்டனர் அந்த பழங்குடிகள். இதே போல் 2006ம் ஆண்டு வழி தவறி அந்த தீவிற்குள் சென்ற இரண்டு மீனவர்களையும் கொன்று மூங்கில் தட்டைகளில் வைத்து கடலில் மிதக்கவிட்டனர் அந்த பழங்குடிகள்.
தங்களின் தனித்தன்மையும், இந்த உலகத்தின் நாகரீகத்தின் மீதான வெறுப்பும் தான், அவர்களால் வெளி இனத்தவர்களை உள்ளே சேர்த்துக் கொள்ள துணிவதில்லை. ஆனால் 1991ம் ஆண்டு செண்டினல்களை சந்தித்து உயிருடன் திரும்பிய ஒரே ஆள் மதுமாலா என்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்.

செண்டினல்களால் இருமுறை வரவேற்கப்பட்ட மதுமாலா யார் ?
1991ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அன்று தான் இப்படியான ஒரு அதிசயமான நிகழ்வு ஏற்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த மதுமாலா சட்டோபாத்யாய் என்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழங்குடிகள் பற்றி 6 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார்.  வெளி உலகத்திற்கும் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கும் இடையேயான நீளத்தினை சுறுக்கியவர் இவர் என்றாலும் தகும் தான். ஜரவா இனத்தின் பண்புகளை உலகறியச் செய்தவரும் இவர் தான். இவரின் பழங்குடிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் பல்வேறு கல்வி நிலையங்களில் பாடங்களாக இருக்கிறாது.
60 ஆயிரம் ஆண்டுகளாக வெளி உலகத்தினர் வாடையே இல்லாமல் இருந்த வடக்கு செண்டினல்களை  (North Sentinelese ) நேரில் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவரும் இந்த மதுமாலா தான். செண்டினல்கள் மட்டுமல்லாமல் ஜவர்வா மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் மதுமாலா.
இவர் பெண்ணாய் இருந்த ஒரு காரணம் கூட, இவரை வரவேற்றுதற்கான காரணமாய் இருக்கலாம். செண்டினல்கள் உட்பட பல்வேறு ஆதிகுடிகள் பற்றி குறிப்பிடும் போது 6 வருடங்களாக பழங்குடிகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் எந்த ஆணும் என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தொழில்நுட்பத்தில் வேண்டும் என்றால் பின்தங்கி இருக்கலாம் ஆனால் சமூக இணக்கத்தில் அவர்கள் நம்மை விட மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

செண்டினல்கள் (North Sentinelese) பற்றி அறிய முற்பட்டவர்கள்

வடக்கு செண்டினல் தீவில் 1880ம் ஆண்டு பிரிட்டிஷ் படையினர் முற்றுகை மேற்கொண்டு இரண்டு பெரியவர்களையும் நான்கு சிறியவர்களையும் போர்ட் பிளேயருக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வெளியுலக கால நிலை ஒத்துக் கொள்ளாததால் பெரியவர்கள் இருவரும் உயிரிழந்தனர். நான்கு சிறியவர்களை மீண்டும் தீவிற்குள்ளே கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றனர் பிரிட்டிஷார்.
இந்திய மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு சர்வேவிற்காக 1970களில் செண்டினல் செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களுக்கு வில்லும் அம்பும் தான் பதிலாய் கிடைத்தது.  1974ம் ஆண்டு நேசனல் ஜியாகிராபி தொலைக்காட்சியில் இருந்து டாக்குமெண்ட்ரி எடுக்க வந்த குழுவினருக்கும் இதே பதில் தான். அப்படத்தின் இயக்குநருக்கு தொடையில் 8 அடி வேல் கம்பு பாய்ந்தது தான் மிச்சம்.

தேங்காய்களை அன்பளிப்புகளாக கொடுத்த மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள்

6 வருட ஆராய்ச்சியைத் தொடர்ந்து வடக்கு செண்டினல் தீவிற்கு 13 பேர் அடங்கிய குழுவுடன் பயணப்பட்டார் மதுமாலா. கண் முன்னே தீவு, ஆனால் ஆதிகுடிகள் யாரும் கண்ணில் படவில்லை. தீவே வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் போல் தற்போதும் தோல்வி தான் என்று படகினை திருப்ப முற்பட்ட போது, மரங்களின் பின்னே பழங்குடிகள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அன்பளிப்புகளாக தருவதற்கு நிறைய தேங்காய்களுடன் சென்றனர் குழுவினர். ஒவ்வொரு தேங்காயாய் நீருக்குள் போட நிறைய வடக்கு செண்டினல் ஆதி குடிகள் வெளிவரத் தொடங்கினர். ஆனால் அவர்கள் யாரும் குழுவினரை வரவேற்கும் தொணியில் இல்லை. ஒரு வித பயம் அவர்களிடம் இருந்தது. குழுவினருக்கும் அதே பயம் இருந்தது. சிறிது நேரத்தில் ஓங்கே இன மொழியில் நிறைய நிறைய என்று கேட்பதை உணர்ந்த மதுமாலா குழு மீண்டும் தேங்காய்களை எடுப்பதற்காக படகை திருப்பினர்.
இரண்டாம் முறை தேங்காய்களை தண்ணீருக்குள் போடும் போது, பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் படகின் அருகே வந்தான். அவனைத் தொடர்ந்து நிறைய பேர் படகின் அருகே வந்து தேங்காய்களை பெற்றுக் கொண்டனர்.
North Sentinelese
செண்டினல்களுக்கு தேங்காய்களை அன்பளிப்பாக தரும் மதுமாலா
கரையில் நின்று கொண்டிருந்த மற்ற சில ஆதிகுடிகள் வில்லுடன் தாக்குதலுக்கு தயாராக இருந்த நிலையில் எதற்கும் துணிந்து நின்று கொண்டிருந்தார் மதுமாலா. வில்லில் இருந்து அம்பு விடப்பட்டது. ஆனால் அந்த வில்லாளின் அருகில் இருந்த செண்டினல் இனப்பெண் வில் எய்தவரை தட்டிவிட அம்பு தண்ணீருக்குள் பாய்ந்தது.
வந்திருக்கும் மானுடவியல் குழுவில் பெண் ஒருவர் இருந்தது தான் இதற்கு காரணம். துணிந்து தண்ணீருக்குள் இறங்கிய குழுவினர், தைரியமாக கொண்டு வந்திருந்த தேங்காய்களை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தனர். வெளியுலகத்தினரை செண்டினல்கள் வரவேற்றது இதுவே முதலும் கடைசியும் கூட.
வெற்றிகரமாக இரண்டாவது முறையாகவும் மதுமாலா வடக்கு செண்டினல் தீவிற்கு சென்று அங்கு வாழும் ஆதிகுடிகளுக்கு தேங்காய்களை பரிசாக அளித்தார். ஆனால் இம்முறை அம்புகள் ஏதும் அவரை குறி பார்க்கவில்லை

கருத்துகள் இல்லை: