செவ்வாய், 30 ஜனவரி, 2018

தகடூர் கோபி காலமானார் .. தமிழ் எழுத்துகளை யூனிகோடுக்கு மாற்றித்தந்தவர்

இணையத் தமிழன் மறைவு!
மின்னம்பலம் :தற்போது நாம் அனைவரும் கணினி மற்றும் செல்போனில் எளிதில் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் தமிழ் எழுத்துகளை யூனிகோடுக்கு மாற்றித்தந்த தகடூர் கோபி என அழைக்கப்பெற்ற த. கோபாலகிருட்டினன்(42), கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) இயற்கை எய்தினார்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கணினியில் தமிழ் மொழியை மிக எளிதில் காண முடியாது. ஒவ்வொருவரும் பலவகையான எழுத்துருக்கள், ஆளுக்கொரு தட்டச்சுப் பலகை முறை என தமிழ் பலர் கையில் பலவிதமாக இருந்தது.
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க தமிழ் ஆர்வலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் சிரமப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர்தான் தகடூர் கோபி.
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான தணிகாச்சலம் என்பவரின் மகன் தகடூர் கோபி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். கணினி பொறியியலில் பட்டம் பெற்ற இவர் சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் மென்பொருள் துறையில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றித்தரும் "அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி,ஹைகோபி" ஆகிய கருவிகளை உருவாக்கி பல சொல் மாற்றி, எழுத்துகள் மாற்றி மென்பொருள்களை உருவாக்கி அனைவருக்கும் பயன்படும் வகையில் தந்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றிடும் கருவிகளையும் கோபி உருவாக்கியுள்ளார்.
2004ஆம் ஆண்டு தகடூர் கோபி தமிழ் வலைத்தளம் தொடங்குவதற்கு சீனு என்பவர் காரணமாக இருந்துள்ளார். தமிழ் மொழி மாற்றி உருவாக்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் கோபிக்கு ஆலோசனை வழங்கியவர் சுரதா.
தமிழ் இணையத்துக்கு சிறப்பான முறையில் பணியாற்றிய தகடூர் கோபி ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து, அவரது உடல் அன்றிரவு தர்மபுரியிலுள்ள அவரது சொந்த வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
தகடூர் கோபின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் கூறுகையில், இணையத்தில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்ப்பவர் கோபி. அதுமட்டுமல்லாமல், தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை உடனுக்குடன் செய்பவர். அனைத்துக்கும் மேலாக, தகடூர் கோபி ஒரு சிறந்த மொழிப்பற்றாளர். இவர் பல மாநாடுகளில் பேசியுள்ளார். அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக கோபியைச் சந்திக்க விரும்பினேன். ஆனால், சந்திக்க முடியவில்லை. அவர் உருவாக்கிய மென்பொருளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் மூலம் அவரின் தமிழ்ப்பற்றைத் தெரிந்துகொள்ள முடியும். அவரின் இறப்பு தமிழ் இணையத் துறைக்கு பெரிய இழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: