சனி, 3 பிப்ரவரி, 2018

சந்தையூர் தடுப்பு சுவர் .... உண்மை நிலவரம் ... எவிடன்ஸ் கதிர் விளக்கம்

மதுரை அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளேயே விரிசலை ஏற்படுத்தி உள்ள சுவர் பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு உயர்நிலைக் குழுவை அமைத்து இரு தரப்பினரையும் உடனே அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
5 ஆண்டாக பதற்றத்தை ஏற்படுத்தும் ‘சந்தையூர் சுவர்’: மற்றொரு உத்தபுரமாக மாறாமலிருக்க சுமுகத்தீர்வு காணப்படுமா?  
Vincent Raj :சந்தையூர் பறையர் சமூகத்து மக்களும் அருந்ததியர் சமூகத்து மக்களும் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் அன்புடன் வாழ்ந்து வந்தனர்.அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவிப்பது குறித்து இரண்டு தரப்புக்கும் சில ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்டது.இட பிரச்னை என்றால் ஊடகம் கவனம் பெறாது தீண்டாமை பிரச்னையாக மாற்றுவோம் என்கிற அரசியல் தந்திரம்தான் இந்த பிரச்னைக்கு அடிப்படை.இந்த தந்திரத்தை உள்ளூர் அருந்ததியர் மக்கள் செய்யவில்லை.அங்கு உள்ள அருந்ததியர் மக்கள் எளிமையானவர்.அன்பானவர்கள்.இட பிரச்னையை அரசியலுக்காக தீண்டாமை பிரச்னையாக மாற்றி இன்று இரண்டு ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியது யார் என்பதை என் அன்புக்கு உரிய நண்பர்களிடமே கேட்கிறேன்.நாங்கள் தீண்டாமையை கடைபிடிக்கவில்லை.வேண்டும் என்றால் எங்கள் கோவிலுக்கு அருந்ததியர் சமூகத்து ஆள் ஒருவர் பூசாரியாக இருக்கட்டும்.அருந்ததியர் சமூகத்து கோவிலுக்கு நாங்கள் பூசாரியாக இருக்கிறோம்.

எங்கள் கோவிலுக்கு அருந்ததியர்கள் வரலாம்.எந்த தடையும் இல்லை.ஊர் மக்கள் சார்பாக எழுதி கொடுக்கிறோம் என்று எல்லோர் முன்னிலையிலும் பறையர் மக்கள் சொன்னதை ஏன் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை? அருந்ததியர் சமூகத்து மக்களின் அனுமதியுடன்தான் இந்த சுவர் கட்டப்பட்டு இருக்கிறது.இது இட பிரச்னை என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.இப்பவும் இரண்டு தரப்பு மக்களிடம் கொம்பு சீவுகிற அரசியல் பேசாமல், இணைந்து இருப்பதின் அவசியத்தை பேசலாம்.அதற்கான சூழல் இல்லாமல் இல்லை.

2  -   உத்தபுரம் சுவரையும் சந்தையூர் சுவரையும் பலரும் ஒப்பிட்டு எழுதி வருகின்றனர். உத்தபுரம் சுவர் என்பது இரண்டு குடியிருப்பிற்கு இடையில் கட்டப்பட்டது. சந்தையூர் சுவர் என்பது கோவிலை சுற்றி கட்டப்பட்டிருக்கிறது. இங்கு அருந்ததியர் மக்களின் கோவில் அம்மக்களின் குடியிருப்பின் மத்தியில் உள்ளது. பறையர் மக்களின் கோவில் குடியிருப்பிலிருந்து தனித்து உள்ளது. சந்தையூரில் பறையர் மக்களும் அருந்ததியர் மக்களும் ஒன்றாகத்தான் வசித்து வருகின்றனர். கடந்த 1984க்கு பிறகு பறையர் மக்கள் அனுபவித்து வந்த கோவிலுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கான தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்படுகிறது. அந்த தொகுப்பு வீட்டில் குடியிருந்த அருந்ததியர் சமூக மக்கள் தங்கள் குடியிருப்பிற்கு வருகிற போது பறையர் மக்களின் கோவில் முன்பு இருந்த பாதை வழியாக வந்து கொண்டிருந்தனர். அந்த பாதை எங்களுக்கு சொந்தம் என்று பறையர் மக்கள் வேலி அமைத்தனர். அவற்றினை தீண்டாமை வேலி என்றனர். பாதையின் அளவு 6 அடி இருந்தது. அதன் பிறகு இரண்டு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை ஏற்படுத்தப்பட்டு 11 அடி ஒதுக்கப்பட்டது. அந்த இடம் ஒதுக்கப்பட்ட சமயத்தில் தான் பறையர் சமூகத்து மக்கள் தங்கள் கோவிலை சுற்றி சுவர் எழுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனை கடந்து அருந்ததியர் சமூகத்து மக்கள் தங்கள் பகுதியில் ஒரு சுவரினை எழுப்ப முயற்சி செய்த போது அதற்கு பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்க நீங்கள் சுவர் எழுப்ப நாங்கள் ஒத்துக்கொண்டோம். இப்போது நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாமே என்று அருந்ததியர் மக்கள் கேள்வி எழுப்பினர். அந்த நிலையில் இரண்டு சமூக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுவரை எழுப்பியிருக்கலாம் அல்லது பறையர் சமூக மக்கள் சுவர் கட்டும் போதே சுவர் தேவையில்லை என்று உறுதியாக இருந்திருக்கலாம்.
சரி இப்போது பிரச்சனை இந்த சுவர் தானே இடித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் அல்லவா? என்று கேட்கப்படுகிறது. நியாயமான கேள்விதான். அதற்கு பறையர் சமூக மக்கள் நாங்கள் கட்டிய கோவில் சுவரை தீண்டாமை சுவர் என்று சொல்கிறார்கள். அதை நாங்கள் இடித்துவிட்டால் நாங்கள் தீண்டாமை கடைபிடித்திருக்கிறோம் என்றல்லவா அர்த்தம். ஒருவேளை இந்த சுவரை ஆக்கிரமிப்பு சுவர் என்று கூறியிருந்தால் இடித்திருப்போம் என்று கூறுகிறார்கள்.
மறுபடியும் சொல்கிறேன் இது ஆக்கிரமிப்பு சம்பந்தமான சுவர் தான். இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் சுவர்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுவர் தான். நீதிமன்றமும் இந்த சுவற்றினை தீண்டாமை சுவர் என்று சொல்லவில்லை ஆக்கிரமிப்பு சுவர் என்று தான் சொல்கிறது.
தற்போது சுவர் பிரச்சனை இரண்டு சமூகங்களின் ஈகோவாக மாறியிருக்கிறது. அதை உடைப்பது குறித்து உடனடியாக முடிவெடுப்பது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கும். பறையர் கோவிலில் அருந்ததியரை பூசாரியாக போடுவது, அருந்ததியர் கோவிலில் பறையரை பூசாரியாக போடுவது, எல்லா கோவிலுக்கும் இரண்டு மக்களும் சென்று வரலாம் என்று முடிவெடுப்பது போன்றவை தான் துவக்க புள்ளியாக அமையும். இரண்டு சமூக குழந்தைகளும் இன்றைக்கு ஒரே இடத்தில் மாலை நேர கல்வி கற்க வைப்பது முக்கியம். இரண்டு சமூக பெண்களுக்கும் மட்டுமல்ல இளைஞர்களுக்கும் சேர்த்து அங்கே விழிப்புணர்வு பரப்புரை முக்கியம்.
இதை ஏன் உத்தபுரத்தில் செய்யவில்லை? என்று சிலர் கேள்வி எழுப்பலாம். சாதியால் ஒடுக்கப்படுகிற மக்களும் சாதியால் வன்மம் செய்கிற மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்பது வேறு. இரண்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள பிரச்சனை என்பது வேறு. இரண்டையும் ஒரே நிலையில் அணுகுவது பலன் தராது.
அருந்ததியர் மக்கள் பறையர் மக்களை நம்புவதில்லை. பறையர் மக்கள் அருந்ததியர் மக்களை நம்புவதில்லை. இதில் கொடுமை என்னவென்றால் ஆதிக்கம் செய்கிற சாதி கட்சிகள் எல்லாம் இன்றைக்கு ஆலோசனை சொல்லுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை புரியாத முற்போக்குவாதிகள் ஏதோ ஒரு அரசியல் நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள். யாரையும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. தோழர் சாமுவேலின் கூற்றைத்தான் மறுபடியும் இங்கே கூற விரும்புகிறேன். சாதிய மதவாத சக்திகள் வலுகொண்டு இருக்கம் இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி இணைப்பது என்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மறுபடியும் உத்தபுரம் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தீர்கள் என்றால், தயவுசெய்து நீங்கள் சந்தையூருக்கு வந்து இருதரப்பையும் சந்தித்துவிட்டு அதற்கு பிறகு நீங்கள் ஆலோசனையை கூறுங்கள் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: