திங்கள், 29 ஜனவரி, 2018

நித்தியானந்தா மதுரை ஆதின மடத்தின் 293ஆவது இளைய மடாதிபதி... நீதிமன்ற எச்சரிக்கை !

மின்னம்பலம் : கர்நாடக மாநிலம் பிடதியில் தனது ஆசிரமத்தை வைத்திருந்தாலும் திருவண்ணாமலை, மதுரை என்று தமிழகத்தில் ஆங்காங்கே பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திவருகிறார் நித்யானந்தா.
இந்நிலையில், மதுரை ஆதீன மடாதிபதி விவகாரத்தில் பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் பதிலளிக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நித்யானந்தா தரப்புக்குச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிபதியிடம் நித்யானந்தா தரப்பு வேண்டிக்கொண்டதால் இன்று கைது நடவடிக்கையிலிருந்து தப்பியுள்ளார் நித்யானந்தா.
இந்த விசாரணையின்போது நித்யானந்தா சீடர் ஒருவர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளிருந்து செல்போன் மூலம் தீர்ப்பின் தகவலை அனுப்பியது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதின மடத்தின் 293ஆவது இளைய மடாதிபதியாக நித்யானந்தா தன்னைத் தானே நியமித்துக்கொண்டதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெகதலபிராதாபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்று வந்த நித்யானந்தா ஆதின மடத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு நித்யானந்தா தரப்பில் , “மதுரை ஆதீனத்தின் 293ஆவது ஆதீனம் நித்யானந்தர்தான், ஒரு முறை ஆதீனமாக பதவியேற்றுக்கொண்டால், அவர்தான் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாக இருப்பார்’’ என்று வாதாடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், “292ஆவது ஆதினம் உயிரோடு இருக்கும்போது எப்படி 293ஆவது ஆதினம் என்று நித்யானந்தா தன்னை கூறிக்கொள்ளலாம்?” என்று கேள்வியெழுப்பியதோடு, “293ஆவது ஆதினம் என்று கூறித் தாக்கல் செய்த பதில் மனுவை நித்யானந்தா வாபஸ் பெற வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதுகுறித்து ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அன்றைய விசாரணையின்போது கால அவகாசம் வழங்கும்படி நித்யானந்தா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி வழக்கு விசாரணை ஜனவரி 29க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நித்யானந்தா தரப்புக்குக் கொடுத்த அவகாசம் இன்று (ஜனவரி 29) முடிவடைந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் இன்றும் நித்யானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, உடனடியாக நித்யானந்தாவைக் கைது செய்து நாளை (ஜனவரி 30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
உடனடியாக நித்யானந்தாவின் வழக்கறிஞர், கடைசியாக ஒருமுறை கால அவகாசம் அளிக்குமாறு நீதிபதியிடம் வேண்டிக்கொண்டார். இதனை ஏற்ற நீதிபதி, கைது உத்தரவைத் திரும்பப் பெற்று, பிப்ரவரி 2ஆம் தேதி வரை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்தார். அப்போது பதிலளிக்கவில்லை எனில் கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
நீதிமன்றத்துக்குள் வாட்ஸ் அப்!
இதனிடையே வழக்கு விசாரணையின் போது நித்யானந்தாவின் சீடரான பெங்களூருவைச் சேர்ந்த நரேந்திரன் என்பவர், வழக்கு விசாரணை நிகழ்வுகளைத் தனது செல்போனில் வரிக்கு வரி பதிவு செய்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதைக் கவனித்த நீதிபதி, “அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி, நீதிமன்ற வாதங்களைப் பதிவு செய்து, வீடியோ, புகைப்படம் எடுத்திருக்கிறாரா எனச் சோதித்து உண்மையிருந்தால் நடவடிக்கை எடுங்கள்’’ என்று காவல் துறைக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்தில் இதுபோன்று வாதங்களைப் பதிவு செய்வதோ அதனை அனுப்புவதோ நீதிமன்ற முறைப்படி குற்றம் என்றும் கூறியுள்ளார் நீதிபதி. நரேந்திரனின் செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நித்யானந்தருக்கு இது புதிதல்ல
நித்யானந்தாவின் பாலியல் குற்றத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த லெனின் கருப்பன் இதுபற்றி நம்மிடம் பேசியபோது,
“நித்யானந்தா தரப்பினர் இவ்வாறு நடந்துகொள்வது முதன்முறை அல்ல. அனைத்து நீதிமன்றங்களிலும் வாதத்தின்போது இதுபோன்றுதான் நடந்துகொள்கிறார்கள். நித்யானந்தா பாலியல் புகார் வழக்கு ஒன்றில் இதே முறையைச் செய்ததால் சைதாபேட்டை 11ஆவது நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. பெங்களூரு உயர் நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது முதன்முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
மேலும், “பொய்யான தகவல்களைப் பரப்புவதும், அத்துமீறல்களைச் செய்வதையும் நித்யானந்தா சீடர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு வரும் பிப்ரவரி 12 முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. தொடர்ந்து பொய்யான வாதங்களையும், அத்துமீறல்களையும் செய்துவரும் அவர்களுக்கு நீதியின் முன்பு கட்டாயமாக தண்டனைக் கிடைக்கும்” என்றும் தெரிவித்தார் லெனின் கருப்பன்.
நித்யானந்தாவின் ஆக்கிரமிப்புகள்!
நித்தியானந்தா தரப்பு வளைத்துப் போட நினைக்கும் இடங்களில் முதலில் பிரச்சினை செய்வது அவரின் சீடர்கள்தான். சென்னை பல்லாவரத்தில் பொதுமக்கள் 40 ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்த பொதுவழிச்சாலையை மூடி நித்தியானந்தா சீடர்கள் ஆசிரமம் அமைத்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கும் சீடர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
திருவண்ணாமலை பவழக் குன்று மலையில் அத்துமீறித் தொடர் பூஜையில் ஈடுபட்டுவந்ததாக நித்தியானந்தரின் 2 பெண் சீடர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டாள் சர்ச்சையின் போது, பெண் சீடர்கள் ஆபாசமாகப் பேசியுள்ளனர். ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாசத்தைப் போதிக்கும் நித்யானந்தா மற்றும் அவரின் சீடர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: