சனி, 25 மார்ச், 2017

நீட் தேர்வு: மத்திய மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!



நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டுவந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில் நேற்று நீட் தேர்வு தமிழகத்தில் மூன்று இடங்களில் நடைபெறும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “தமிழகத்துக்கு இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முடியாது” என்று கூறியபிறகு இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன்படி 88,478 தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 39,951 பேர் விண்ணப்பித்தனர். இதில் 13,916 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  minnambalam

கருத்துகள் இல்லை: