வெள்ளி, 24 மார்ச், 2017

ரஜினி இலங்கை செல்லும் பின்னணியின் வரலாறு!

ரஜினி இலங்கை செல்லும் காரணம் என்னவென்று முழுவதுமாக வெளியிடப்படவில்லை. லைகா சார்பில் கட்டப்பட்ட 150 வீடுகளை திறக்கச் செல்லும் தகவல் மட்டுமே தற்போது வெளியாகியிருக்க, அந்த 150 வீடுகளை லைகா நிறுவனம் கட்டுவதற்கான காரணமென்ன என்பதை நோக்கிப் பயணித்தபோது கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.

ஈழப்போருக்குப் பிறகான மீள் குடியேற்ற நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதில் பாரபட்சம் பார்க்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து சுபாஷ்கரன் அல்லிராஜாவின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் லைகா கிராமம் உருவாக்கும் திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இலங்கையிலுள்ள பூந்தோட்ட முகாமில் வசிக்கும் 104 குடும்பங்கள் கூரை இல்லாத வீடுகளிலும், சுவர் இல்லாத மறைவிடங்களிலும் வாழ்ந்துவந்த நிலையில் இந்த லைகா கிராமம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த விழாவிலேயே, கட்டப்படும் வீடுகள் மற்றும் இடத்துக்கான உரிமை பதிவுசெய்யப்பட்ட பத்திரங்கள் பூந்தோட்ட முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.(இதனால்தான் புலம்பெயர் தமிழர்கள், அதன்பிறகு அதிக அளவில் நிதி உதவியை ஞானம் அறக்கட்டளைக்கு தந்து உதவினர்)

2014இல் தொடங்கியிருக்கவேண்டிய இந்தத் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவதில் இழுபறி ஏற்பட்டிருந்ததால் காத்திருந்த லைகா, வவுனியா பகுதியிலுள்ள கனகராயன்குளம், சின்னடம்பன், இராசபுரம் கிராமங்களிலுள்ள காட்டுப்பகுதி ஒதுக்கப்பட்டதும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் லைகா கிராமம் படிப்படியாக உருவானதை கீழே உள்ள புகைப்படங்களில் காணலாம்.



இவை தான் ரஜினி திறந்துவைக்கப்போகும் லைகா கிராமம் உருவான வரலாறு. இப்போது லைகா நிறுவனம் இதற்குள் ரஜினியைக் கொண்டு வந்த விதத்தைப் பார்ப்போம். கத்தி திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் லைகா நிறுவனம் முதன்முதலில் தமிழ்நாட்டுக்குள் லைகா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் காலடி வைத்தது. பொதுவாகவே பிரச்னைகளை எதிர்கொள்ளும் விஜய் திரைப்படங்களுக்கு மத்தியில், கத்தி மிகப்பெரிய எதிர்ப்புகளைக் கண்டது. லைகாவின் சார்பில், தனியாக பிரஸ் மீட் வைத்து எங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சுபாஷ்கரன் அல்லிராஜா சத்தியம் செய்யாத குறையாக பேசினார்.

பின், கத்தி திரைப்படமும் ரிலீஸானது. அதன்பிறகு இரண்டுவருடங்கள் எவ்வித அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்த லைகா 2016ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்படத்தை தயாரித்தது. தொடர்ந்து தெலுங்கில் கத்தியின் ரீமேக்கான கைதி நம்பர் 150, விஜய் ஆண்டனியின் எமன், ரஜினியின் 2.0, கமலின் சபாஷ் நாயுடு, உதயநிதியின் இப்படை வெல்லும் ஆகிய திரைப்படங்களில் கமிட் ஆனது.
இதில் இப்போது 2.0 ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் ரஜினி, வவுனியாவில் நடைபெறவிருக்கும் லைகா கிராமத்தின் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். எந்திரன் 2.0 படத்தின் புரமோஷன் நேரத்தில், ரஜினி அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, 2.0 பட புரமோஷனின் ஒரு பகுதியா? என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. இலங்கை செல்லும் ரஜினி, அவரது கையால் பூந்தோட்ட முகாமில் வாழும் தமிழ் மக்களுக்கு வீட்டின் சாவிகளைக் கொடுப்பதாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
-சிவா minnambalam

கருத்துகள் இல்லை: