திங்கள், 7 நவம்பர், 2016

டெல்லியில் கடும் புகை .. 90 மடங்கு அதிகம் .. கேஜ்ரிவால் அவசர ஆலோசனை.

மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை, ஐந்து நாட்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி, இடிக்கும் பணிகளுக்குத் தடை,மருத்துவமனைகள் தவிர்த்து அனைத்து இடங்களிலும் ஜெனரேட்டர் பயன்பாட்டுக்குத் தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது டெல்லி அரசு. அதற்கு காரணம் கடந்த ஒரு வாரகாலமாக காற்று மாசுபாட்டில் சிக்கி தவித்து வருகிறது தலைநகர் டெல்லி. இதற்குமுன் எப்போதுமில்லாத அளவிற்கு காற்று அதிகளவு மாசுபட்டிருக்கிறது. இதனால் டெல்லியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த காற்று மாசுபாடானது(PM-2.5 அளவீட்டில்) உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவைவிட 90 மடங்கு அதிகமாகவும், இந்திய அரசு நிர்ணயித்த அளவைவிட 15 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது. நேற்று டெல்லி அரசின் சுற்றுசூழல் துறை அமைச்சர் தலைமையில் நடந்த அவசரக்கூட்டத்தில்  டெல்லி  முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்று காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேவை நேரில் சந்தித்துப்பேசியிருக்கிறார். அண்டை மாநில முதல்வர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களை அழைத்து பிரச்சனைக்கான தீர்வுகுறித்து பேசியிருக்கிறார்.

இன்று காலை ஜந்தர்மந்தர் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் குழந்தைகளுடன் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டை குறைப்பதற்கு என்னென்ன பணிகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விளக்கியிருக்கிறார். அண்டை மாநிலமான  பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில்   விவசாயிகள் கழிவுகளை எரிப்பதாலும்,தீபாவளி கொண்டாட்டதாலும்  அதிக அளவு காற்று மாசுபட்டிருப்பதாகவும் காரணம் கூறியிருக்கிறார்கள்.அதிக அளவிலான காற்று மாசு பாட்டின் காரணமாக ஏர் ப்யூரிபயர் உள்ளிட்ட காற்று சுத்தம் செய்யும் பொருட்களின் விற்பனையும் அதிகமாகியிருக்கிறது.

ஒரு புறம் அனைத்துக்  கட்சி தலைவர்கள் மாநில அரசை குற்றம்சாட்டினாலும்,மறுபுறம் தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவந்த மத்திய அரசுதலைநகரையே தூய்மையாக வைத்துக்கொள்ளாததாக விமர்சனம் எழுந்திருக்கிறது.
 செய்தி ஜீவபாரதி நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: