வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஜெயகாந்தன்! இலக்கியவாதிகளின் தலையில் அடித்து திருத்திய சீர்திருத்த சிறுகதை சூரியன்!

ஜெயகாந்தனின் அடையாளம் ஆரம்பக் காலம் தொட்டே அவருடைய கம்பீரமும் கர்வமும்தான்!  அவரே தமிழ் எழுத்தாளர்களின் கம்பீர முகம். ஜெயகாந்தன் ஒரு சுயம்பு. 1934-ல் கடலூரில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்போடு பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டார். அப்புறம் காலம் அவரை விழுப்புரத்தில் தூக்கிப்போட்டது. தாய்மாமன் வடிவில் பாரதியின் எழுத்துகளும் பொதுவுடைமைச் சிந்தனைகளும் ஜெயகாந்தனுக்குள் வந்து விழுந்தது அப்போதுதான்.
அன்றைக்குத் தொடங்கி அவர் எப்படியெல்லாம் அவருடைய வாழ்க்கைப் பாதையைக் கடந்து வந்தார் என்பதை அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், “நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்ட்ரல் சினிமாவில் ‘வேலைக்காரி’ சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸிலிருந்து பத்திரிகைகள் - புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் இன்ஜினுக்குக் கரி கொட்டியது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது, ஃபுரூஃப் ரீடர், பத்திரிகை உதவி ஆசிரியர்…”
ஆமாம். அவருடைய எழுத்துகள் வெளிக்கொண்டுவந்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கை வெறுமனே பார்த்ததாலோ படித்ததாலோ வந்தது அல்ல. உண்மையான வாழ்க்கையிலிருந்தே வந்தது.
தன்னுடைய இலக்கிய வாழ்வை ‘சரஸ்வதி’, ‘தாமரை’, ‘கிராம ஊழியன்’ என்று ஆரம்பித்த ஜெயகாந்தனைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது ‘ஆனந்த விகடன்’. வெகுஜனப் பத்திரிகைகளில் தரமான இலக்கியப் படைப்புகள் வெளிவராது என்கிற சூழலை ஜெயகாந்தன் தகர்த்தெறிந்தார். நல்ல எழுத்துக்கு என்றும் எங்கும் மவுசு உண்டு என்பதை அவருடைய ‘முத்திரைக் கதைகள்’ நிரூபித்தன. ஒருகட்டத்தில் அடுத்த வாரம் வரவிருக்கும் கதைக்கு முதல் வாரமே விளம்பரம் வெளியிட்டது ‘ஆனந்த விகடன்’. அத்தனை வரவேற்பு!
சொல் வேறு; செயல் வேறு அல்ல!
ஜெயகாந்தனின் அடையாளம் ஆரம்பக் காலம் தொட்டே அவருடைய கம்பீரமும் கர்வமும்தான். ஞானச் செறுக்கு என்பார்களே அதன் மறுவடிவம் ஜெயகாந்தன். எல்லா இடங்களிலும் அவர் ஒரே மாதிரிதான். உள்ளே ஒரு மாதிரி வெளியே ஒரு மாதிரி கிடையாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகம். சரியோ, தவறோ தன் மனதில் பட்டதை உடைத்துப் பேசும் ஜெயகாந்தன் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி அனைவரையுமே அவரவர் செல்வாக்கின் உச்சத்தில் இருக்கும்போது எதிர்த்துச் செயல்பட்டவர்; கடுமையாக விமர்சித்தவர்.
பெரியாரை எதிர்த்து அவர் பேசிய மேடையிலேயே பேசினார். “இது தமிழ் எழுத்தாளர் மகாநாடு. நான் எழுதுகிறவன். எனவே, எனக்குச் சில பொறுப்புகள் இந்த மாநாட்டில் பேசுகிறவன் என்ற முறையில் மட்டுமல்லாமல், மற்ற எல்லோரையும்விட அதிகமாக இருப்பதாக நம்புகிறேன். எனக்கு முன்னால் பேசிய பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் தெரிவித்த கருத்துகளையெல்லாம் உங்களைப் போல் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதனால் அவரது பேச்சுகள் எனக்கும் உடன்பாடானவை என்று நினைத்துவிட வேண்டாம்.
அவருக்குப் பிறகு நான் பேச ஆரம்பித்து, அவரது கருத்துகளால் எனக்கு ஏற்பட்ட சலனங்களை வெளியிடாமல், என்ன காரணம் கொண்டும் மறைத்துக்கொள்வேனேயானால் அதற்கு நான் உடன்பட்டுவிட்டேன் என்றே அர்த்தமாகும்...” என்று தொடங்கும் அந்த நீளமான உரை, ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய தார்மிகத் துணிவுக்கும் ஆரோக்கியமான விமர்சன முறைக்கும் இன்றைக்கும் உதாரணம்.
உலகிலேயே அதிகம் பேர் பங்கேற்ற இறுதி அஞ்சலி அண்ணாவினுடையது. அவ்வளவு பெரிய தாக்கம் தமிழகத்தில். அப்போதுதான் ஜெயகாந்தன் இப்படி ஓர் அஞ்சலிக் குறிப்பை வெளியிட்டார்: “அவர் இறந்ததில் எனக்கும் வருத்தமே. என் அரசியல் எதிரியை நான் தோற்கடிக்கும் முன் காலன் கவர்ந்துகொண்டு சென்றுவிட்டான் என்பதில் எனக்கும் வருத்தமே.”
எம்ஜிஆர் காலத்தில் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போரே நடந்துகொண்டிருந்தது. ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ தமிழர்களின் சினிமா மோகத்தின் மீதான விமர்சனம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில், எம்ஜிஆர் மீதான அவருடைய விமர்சனமே. எம்ஜிஆர் வீட்டிலிருந்து ஜெயகாந்தனுக்கு ஒருநாள் சூடான அழைப்பு வந்தது: “தலைவர் உன்னைப் பார்க்கணும்னு சொல்றார்.” அதே சூட்டில் ஜெயகாந்தன் சொன்ன பதில் இது: “சரி வரச் சொல்...” (பின்பு மணியனிடமும் இதே பதிலையே சொல்லி அனுப்பினார்.)
கருணாநிதியையும் பல தருணங்களில் கடுமையாக விமர்சித்தவர்தான் அவர். ஒரு ஆச்சரியம், இன்றைக்கெல்லாம் எழுத்தாளன் என்றால் யார் என்று கேட்கும் தமிழ்ச் சமூகமும், எழுத்தாளர்கள் கொஞ்சம் வாய் திறந்தாலும் தங்கள் குரூர முகத்தை வெளிக்காட்டும் தமிழ் அரசியல் வர்க்கமும் ஜெயகாந்தனை எப்போதும் ரசித்தது. அவரை எல்லோருமே விரும்பினார்கள். அப்துல் கலாம் முதல் இளையராஜா வரை அவருக்குப் பலர் ரசிகர்களாக இருந்தார்கள்.
எல்லாமும்தான் வாழ்க்கை; எழுத்துதான் காலம்
ஒருவிதத்தில் ஜெயகாந்தன் அதிர்ஷ்டசாலி. “சரஸ்வதி தேவியின் அருள் பெற்று அவள் கைப்பிடித்து நடந்த எண்ணற்ற கலைக் குழந்தைகளில் கடைசிப் புதல்வனாகவேனும் நான் சென்றால் போதும். அந்த லட்சுமி தேவி என் பின்னால் கை கட்டி வருவதானால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்” என்று அவர் வாழ்க்கையின் முற்பகுதியில் எழுதினாலும், தமிழ்ச் சமூகத்தில் எழுத்தை வாழ்வாக வரித்துக்கொண்டவர்களில் அவருக்கு மட்டுமே உரிய நேரத்தில் யாவும் கிடைத்தன.
தமிழ் சினிமாவிலும் அவர் உலா வந்தார். அவருடைய நாவல்கள் படங்கள் ஆக்கப்பட்டன. ‘உன்னைப் போல் ஒருவன்’ உள்ளிட்ட படங்களை அவரே இயக்கினார். சினிமாவுக்குப் போன வேகத்திலேயே அதிலிருந்து திரும்பி வெளிவந்தார். 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.நகர் தேர்தலில் சுயேச்சையாக சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டு, வெறும் 481 வாக்குகளைப் பெற்றுத் தோற்றபோது, “சிங்கத்துக்குப் பிடிச்ச தீனி நம்ம டெபாசிட்தான்போல” என்று சிரித்தார். ஒருமுறை நாகேஷுடன் சேர்ந்து விளையாட்டாகப் பிச்சைகூட எடுத்திருக்கிறார். “எல்லா அனுபவங்களும் கலந்துதான் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக ஆக்குகின்றன” என்றார்.
ஜெயகாந்தன் போல் இங்கு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த எழுத்தாளர்கள் இல்லை என்று சொல்லலாம். அவருக்குப் பிடித்த பழமொழிகளில் ஒன்றான ‘கடைசி சல்லியையும் ஒரு ராஜா மாதிரி செலவு செய்’ என்பது மாதிரியே வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். நல்ல சாப்பாட்டுப் பிரியரான ஜெயகாந்தனுக்கு மதுவும் புகையும், கூடவே பேச நண்பர்களும் சேர்ந்துவிட்டால், அவர் அமர்ந்திருக்கும் எந்த இடமும் சபையாக மாறிவிடும்.
அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவே கிறுக்குப் பிடித்து அவர் வீட்டுக்கு அலையும் ஒரு கூட்டம் கடைசி வரை இருந்தது. எழுத்துக்கு விடை கொடுத்து பல மாமாங்கங்கள் நெருங்கும் சூழலிலும், ஒரு எழுத்தாளர் இப்படிக் கொண்டாடப்பட்டது இங்கே அவர் மட்டும்தான்.
தன்னுடைய ஆரம்பக் காலத்தில் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்து, பின் காங்கிரஸ்காரராக மாறி, ஒருகட்டத்தில் சித்தர் மரபில் திரிந்த ஜெயகாந்தன் பிற்காலத்தில், உலகமயமாக்கலை ஆதரிப்பது உள்ளிட்ட எவ்வளவோ முரண் முடிவுகளை எடுத்தவர். ஆனால், எந்தச் சூழலிலும் சமூகம் எதை விரும்பும், ரசிக்கும் என்ற அளவுகோல்கள் அவருடைய சொற்களைக் கட்டுப்படுத்தியது இல்லை.
தன் வாழ்வின் உச்சகட்டத்தில், “எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் வளமும் எய்துகிறார்கள். அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எதிர்கால சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல்.
அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம்” என்றெல்லாம் தன் எழுத்தைப் பற்றி வர்ணித்த ஜெயகாந்தனுக்குக் கடைசிக் காலத்தில் தன்னுடைய எழுத்து மட்டும் அல்ல; யாருடைய எழுத்துமே ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மௌனத்தை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். எல்லாவற்றையும் கவனித்தார்; புன்சிரித்தார். அவ்வளவே. அவரைப் பொறுத்தளவில் அவர் எழுத்தும் அவர் காலமும் ஒன்றே!
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

கருத்துகள் இல்லை: