சனி, 7 பிப்ரவரி, 2015

Delhi Exit Poll கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது? சமுக வலைதளங்களின் ஆதரவு?


டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியே வெற்றிவாகை சூடும் என்று தேர்தலுக்குப் பின் வெளியாகியுள்ள பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே - சிசரோ நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 39 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2013 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை விட 11 இடங்கள் அதிகமாகும். பாஜக 26 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 3 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் சுயேச்சைகள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நியூஸ் நேசன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 39-43 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு 25 முதல் 29 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 3 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி - நீல்சன் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே டெல்லியை ஆளும் என்று தெரிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி 39 இடங்களைக் கைப்பற்றி டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. பாஜகவிற்கு 28 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல இந்தியா டிவி - சி ஓட்டர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு 31 முதல் 39 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 27முதல் 35 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் 4இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது
அதேபோல சாணக்யா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பிலும் ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 இடங்கள் கூடவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என்றும் அது தெரிவிக்கிறது. பாஜகவிற்கு 22 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் 6 இடங்கள் கூடவோ குறையவோ வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிரண்பேடி கருத்து இந்த கருத்துக்கணிப்புகளை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி கூறியுள்ளார். தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் மூன்று மணிக்கு எடுக்கப்பட்டவை. ஆனால் பிற்பகல் மூன்று மணிக்கு மேல்தான் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனவே கருத்துக்கணிப்புகள் மாற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார் கிரண்பேடி.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாலை 5 மணிவரை 63.46 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகபட்சமாக வடகிழக்கு டெல்லி பகுதியில் 66.36 சதவிகித வாக்குகளும், குறைந்த பட்சமாக தெற்கு டெல்லி பகுதியில் 61.7 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. மத்திய டெல்லியில் 64.66 சதவிகிதமும், கிழக்கு டெல்லியில் 64.67 சதவிகிதமும், புது டெல்லியில் 59.29 சதவிகிதமும், வடக்கு டெல்லியில் 65.56 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதேசமயம் வடமேற்கு டெல்லி பகுதியில் 62.1 சதவிகித வாக்குகளும், தென்மேற்கு டெல்லி பகுதியில் 63.66 சதவிகித வாக்குகளும் மேற்கு டெல்லியில் 64.48 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலை விட 9 சதவிகிதம் அதிகமாகும். வாக்குப்பதிவு 6 மணிவரைக்கும் நடைபெற்றதால் வாக்குசதவிகிதம் மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் பார்க்கும் போது கடந்த 2013 சட்டசபை தேர்தலில் முதலிடம் பிடித்த பாஜக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சி முதலிடத்திற்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட படு பாதாளத்திற்கு போய்விட்டது. இது கருத்துக்கணிப்பு மட்டுமே. நிஜ நிலவரத்தைத் தெரிந்து கொள்ள இன்னும் இரண்டு தினங்கள் காத்திருந்துதான் ஆகவேண்டும்.//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: