வியாழன், 5 பிப்ரவரி, 2015

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ! தனது பெயரை உச்சரிக்க தானே பயப்படும் ஒரு அற்புத காரக்டர் பன்னீரு!


ப.திருமாவேலன்:  கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி, தனது இருக்கையில் அமர்கிறார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பைத் தள்ளுபடிசெய்கிறார். உடனடியாக ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் பதவியில் இருந்துவிலகுகிறார். ஜெயலலிதா, மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். கதவு திறக்கப்படுகிறது... தமிழ்நாடே பூத்துக் குலுங்குகிறது!
இந்த ஒரு காட்சி மட்டுமே ஜெயலலிதாவின் மனக் கண்ணில், அ.தி.மு.க அமைச்சர்களின் கற்பனையில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை மார்ச் மாதத்தில் தீர்ப்பு வரவில்லை என்றால், அந்தக் கற்பனைக் காட்சி மீண்டும் மீண்டும் 'ரீவைண்ட்’ ஆகும்!
ஜெயலலிதாவுக்கு மட்டுமா நான்கு ஆண்டுகள் தண்டனை? அதில் இருந்து அவர் விடுபடும் வரை தமிழ்நாடு மக்களுக்கும் தண்டனைதானோ?  
ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் பினாமியாக அல்லது ஆளும் கட்சியின் நாமினியாக எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். ஆனால், அதே சட்டத்தின்படி அவர் செயல்படாமல் இருப்பதும் அல்லது அவரைச் செயல்படவிடாமல் தடுத்துவைத்திருப்பதும் ஜனநாயகக் கேலிக்கூத்து.
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கான தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி. அடுத்த இரண்டாவது நாளில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். மூன்று மாதங்கள் முடிந்து... 125 நாட்களைக் கடந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி நான்காவது மாதத்தில் நடைபோடுகிறது. எந்தப் புதிய ஆட்சிக்கும் ஆறு மாதங்கள் அவகாசம் தரப்படும். ஆனால் அ.தி.மு.க ஆட்சி, புதிய ஆட்சி அல்ல; மூன்றரை ஆண்டுகளை முடித்த ஆட்சி. அதன் தலைமை நாற்காலி மட்டும்தான் மாறியுள்ளது. மற்ற அமைச்சர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். எனவே, இவர்களுக்கு ஆறு மாத கால அவகாசம் என்பது அநாவசியம்.
மூன்றரை ஆண்டு காலமாக 'ஏதோ ஒரு விதத்தில்’ செயல்பட்ட அ.தி.மு.க ஆட்சி, கடந்த மூன்றரை மாதங்களில் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், தன்னை முதலமைச்சர் என்றுகூடச் சொல்லிக்கொள்வது இல்லை; முதலமைச்சர் அறைக்குச் செல்வது இல்லை; முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்வது இல்லை. நிதி அமைச்சராக இருந்தபோது இருந்த அறையில், தனக்குத்தானே சிறை வைத்துக்கொண்டிருக்கிறார். அவரது வீட்டில் 'முதலமைச்சர்’ என்ற பெயர்ப்பலகைகூட இல்லை. முதலமைச்சர் வீடு என்பதும் முதலமைச்சரின் முகாம் அலுவலகம்தான். அந்த அலுவலகத்துக்கு முதலமைச்சரின் செயலாளர்கள் எனச் சொல்லிக்கொண்டு சம்பளம் வாங்குபவர்கள் வருவதே இல்லை.
இந்த மூன்றரை மாதங்களில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்துக்கும் செல்லவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கான தங்கக் காப்பு எடுத்துத் தரவும், உள்ளே வைக்கவும் இரண்டே இரண்டு முறை மதுரை மாவட்டத்துக்குப் போனார். மற்றபடி எங்கும் சென்று, எந்தப் பணியையும் பார்வையிடவில்லை. எந்த ஆலோசனையையும் மாவட்டங்களில் நடத்தவில்லை. அவரது தேனி மாவட்டமே முக்கியமான மூன்று பிரச்னைகளில் சிக்கியது.
'முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து’ என மிரட்டல் அச்சுறுத்தல் கொடுத்துக்கொண்டிருக்கிறது கேரளா. 'நியூட்ரினோ திட்டம், தங்களது பகுதிக்கு ஆபத்தானது’ என அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். பல்லாண்டுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை உச்ச நீதிமன்றம் முடக்கிவைத்ததால், இந்த ஆண்டு கரும்புப் பொங்கல் அந்தப் பகுதியில் கறுப்புப் பொங்கலாக மாறிவிட்டது. இந்த மூன்றிலும் தமிழ்நாடு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? குறிப்பாக, அந்த வட்டாரத்தில் இருந்து வந்த பன்னீர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாத நிலைமை.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேங்கிவிட்டதால், என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறது கேரளா. நியூட்ரினோ விவகாரத்தில் மக்களின் கேள்விகளுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வாங்கித் தரவேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது, ஏதோ ஐரோப்பிய இறக்குமதி என இந்திரா குடும்பத்து இறக்குமதி அமைச்சர் மேனகா சொன்னதற்கு எதிராக, ஜல்லிக்கட்டைத் தடைசெய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு போதிய முயற்சி எடுக்கவில்லை. 'அம்மா வழக்கு விசாரணையில் இருப்பதால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சங்கடம் உண்டாகுமாறு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’ என நினைத்திருந்தால், அந்தச் சோகத்தை எந்தக் கோயிலில் சொல்லி அழ?
'தீபாவளி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து, பொங்கல் வாழ்த்து... என எதையும் சொல்லும் தகுதி எனக்கு இல்லை’ என பன்னீர் நினைக்கலாம். ஆனாலும் 'நமக்கு’ அவர்தானே முதலமைச்சர்?!
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மாநாடுதான் அரசாங்கத் தலைமைக்கும் நிர்வாக நரம்புக்குமான ரத்த ஓட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். ஆட்சிச் சக்கரத்தைக் கையில் வைத்திருப்பவர் என்ன மாதிரியான சிந்தனைகொண்டவர் என்பதை அதிகாரிகளும், எந்த மாதிரியான அதிகாரிகளை நாம் வைத்திருக்கிறோம் என முதலமைச்சரும், அமைச்சர்களும் புரிந்துகொள்ள இந்த மாநாடு பயன்படும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள அதிகாரிகளுக்கு, இந்த அரசிடம் இருந்து தெரிந்துகொள்ள, தெளிந்துகொள்ளவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.  
இந்த மூன்றரை மாதங்களில் முதலமைச்சரால் எந்தத் திட்டமும் தொடங்கிவைக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா முதலமைச்சராக வந்த பிறகு பார்க்கலாம் என ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசுப் பொறியியல் கல்லூரிக் கட்டடம் திறக்கப்படாமல் இருக்கிறது. அதனால் பலர் பயனடைவார்கள், அதை உணர்ந்து சிலர் வாக்களிப்பார்கள் என்பதைவிட ஜெயலலிதா கையால் திறக்கப்பட வேண்டும் என்பதே அனைத்தையும்விட முக்கியமானது!
'பாட அனுமதி இல்லை’ என்றாலும் பன்னீர் தினமும் கச்சேரிக்கு வந்துவிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக ஆறு நாட்களும் காலை முதல் மாலை வரை 'நிதி அமைச்சருக்கான’ அறையில் இருக்கிறார். அமைச்சர்கள் விரும்பினால், வந்து பார்க்கலாம். முகமலர்ச்சியுடன் வரவேற்று காபி கொடுத்து, 'செயலாளரிடம்  பேசிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார். பல நேரங்களில், 'ஆலோசகரிடம் கேளுங்கள்’ என்கிறார்.
தலைமைச் செயலாளராக இருந்து பல்வேறு கோப்புகளில் முடிவெடுக்க முடியாமல் திணறிய ஷீலா பாலகிருஷ்ணன், இந்த அரசாங்கத்தின் ஆலோசகர். ஓய்வுக்குப் பிறகு அவருக்கு இந்த உயர் பதவி. முதலமைச்சரின் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஐந்து ஆண்டுகள் நீட்டிப்பு பெற்ற வெங்கடரமணன், இன்னும் முதலமைச்சரின் செயலாளர். யார் எந்தப் பிரச்னையைக் கொண்டுவந்தாலும் இவர்கள் இருவரையும் பார்க்கச் சொல்லிவிடுகிறார்கள். குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக, என்ன முடிவெடுக்கலாம் என இவர்கள் ஓர் அறிக்கை தயாரிப்பார்கள். 'மேலிடம்’ ஒரு துண்டுத் தாளில் வழிகாட்டும் குறிப்பை எழுதி அனுப்பும். அதன்படி செயல்பாடுகள் தொடங்கும். ஒருவேளை அந்தத் துண்டுத் தாள் வரவில்லை என்றால்... வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்!
அதிகாரம் ஒருவர் கையிலும், நிர்வாகம் வேறு ஒருவர் கையிலும் இருப்பது புதிது அல்ல. மத்தியில் முந்தைய 10 ஆண்டு கால மன்மோகன் சிங் - சோனியா காந்தி கூட்டணி ஆட்சி அப்படி நடந்ததுதான். முடிவுகள் எடுத்தது அனைத்தும் சோனியா. ஆனால், மன்மோகன் சிங் பிரதமராக நடத்தப்பட்டார் என்பது டெல்லி மகிழ்ச்சி; இங்கேயோ, பன்னீர் முதலமைச்சராகக்கூட நடத்தப்படவில்லை என்பதே சென்னை சோகம்!
'அரசுத் திட்டங்களில் பெயர் வந்துவிடக் கூடாது, கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்டுவிடக் கூடாது’ என தடுப்பவர்கள், பால் விலை உயர்வில், மின்கட்டண உயர்வில், சிமென்ட் விலை உத்தரவுகளில் மட்டும் அவர் பெயர் வரட்டும் என நினைப்பது கொடுமை!
'எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பது மாதிரி, 'எல்லா கெட்ட பெயரும் பன்னீருக்கே’ எனச் செயல்படுவதன் விளைவுதான், விலைவாசியைப் பற்றியும் கவலை இல்லை... சட்டம் - ஒழுங்கைப் பற்றியும் கவலை இல்லை என்ற நிலைமை. 'அம்மா வந்தால்தான் சரியாகும்’ என எல்லோரையும் நினைக்கவைக்கும் தந்திரமா இது!?
தமிழ்நாட்டின் நிதி நிலைமை, அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவிருப்பதுதான் இந்த ஆட்சியின் கடைசி 'நிதி நிலை அறிக்கை’. 2016-ம் ஆண்டு மார்ச்சில், இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த மார்ச் மாதத்தில் இந்த ஆட்சியின் கனவுகள் அனைத்துக்கும் செயல்வடிவம் கொடுத்தாக வேண்டும். இந்த நிலைமையில் புதிய திட்டமிடல்களை அறிவிப்பார்களா, அதற்கு ஒதுக்கீடு செய்ய நிதி இருக்குமா என்பது  சந்தேகமே!
கடந்த ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 'விதி எண் 110 அறிக்கை’ மூலம் அறிவித்த திட்டங்களுக்கே இன்னும் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் - 2023’ என்ற கொள்கையை ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்கும் நிதி இல்லை. இந்த நிலையில்,புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவும் வாய்ப்பு இல்லை; அதை பன்னீர் அறிவிக்கவும் வாய்ப்பு இல்லை. நிதி நிலை அறிக்கையில் 18 ஆயிரம் கோடி துண்டுவிழுமா... அதைவிட அதிகரிக்குமா என இப்போது சொல்ல இயலாது. ஆனால், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிலையில் தமிழக நிதி நிலவரம் தற்போது இல்லை.
டாஸ்மாக் கடையை நம்பியும், பத்திரப்பதிவு துறையை எதிர்பார்த்தும் இருக்கிறது ஆட்சியின் நிதி வளம். வணிக வரியை அடுத்த மாதத்துக்கும் சேர்த்து தோராயமாகக் கட்டவைக்கலாம் என்ற ஆலோசனைகள் இப்போதே கிளம்பிவிட்டன. பெரிய பெரிய கோயில்களுக்கு தாக்கீது அனுப்பி, 'எவ்வளவு கொண்டுவருவீர்கள்?’ என, கருவூலங்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்த மோசமான நிலைமையை இன்றைய ஆட்சியாளர்களால் பரிசீலிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
அமைச்சர்களுக்கு, இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. ஜெயலலிதா சிறையில் இருந்த 21 நாட்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தவம் கிடந்தார்கள்; தாடி வளர்த்தார்கள்; விரதம் இருந்தார்கள். அவர் ஜாமீனில் வெளியானதும் மொட்டைபோட்டார்கள்; யாகம் வளர்த்தார்கள்; தங்கத்தேர் இழுத்தார்கள்; அர்ச்சனை செய்தார்கள்; இப்போதும் அலகு குத்துகிறார்கள்; மிளகாயை அள்ளி நெருப்பில் போடுகிறார்கள். எல்லோர் கண்களிலும் எரிச்சல். இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்துக்கான அசைன்மென்ட் தரப்பட்டுவிட்டது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல். அந்தக் காய்ச்சல் பிப்ரவரி 15-ம் தேதி வரை ஓடும்.
அடுத்த பிப்ரவரி 24 -ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள். 'சிறப்புப் பிரார்த்தனை நாள்’ என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒரு நாளோடு முடிகிற பிரார்த்தனையா இது? மார்ச் வரை தொடரவிருக்கிறது. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு வரை பிரார்த்தனைக்குத் தடை இல்லை. ஆனால், அது வரை நிர்வாகச் செயல்பாடுகளுக்கு நிரந்தரத் தடை என்பதை அழுத்தமாக உணர முடிகிறது.
சொல்ல மறந்துவிட்டேன்! ஒரே ஒரு திட்டம் மறக்காமல் நடந்தது. மேட்டுபாளையம் தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் 45 கோயில் யானைகளுக்கும், முதுமலையில்
53 வன யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் டிசம்பர் 11 முதல் ஜனவரி 28 வரை சிறப்புற நடந்து முடிந்துவிட்டது. 'அம்மா அவர்களின் வழிகாட்டுதல்படி’ என்கிறது செய்தி. யானைகளுக்குக் காட்டிய வழிகாட்டுதல், மக்கள் பக்கமும் திரும்பட்டுமே! விகடன்.com
ஓவியம்:ஹாசிப்கான்

கருத்துகள் இல்லை: