திங்கள், 2 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ரங்கத்தில் அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறதா? அனுதாபம் மிஸ்ஸிங்?

ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் தி.மு.க.விற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தி.மு.க. வேட்பாளரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென தி.மு.க. தலைமை கேட்ட போது புதிய தமிழகம் தவிர மற்ற கட்சிகள் ஒதுங்கிக் கொண்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வேட்பாளரை களம் இறக்கிய நிலையில் காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்து விட்டன.
2016 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் இடைத்தேர்தலில் தி.மு.க–அ.தி.மு.க– பா.ஜனதா போன்ற பெரிய கட்சிகள் பலம் எப்படி உள்ளது? மக்கள் சிந்தனை எப்படி உள்ளது? என்பதை பார்த்து சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது எந்த கூட்டணியில் சேருவது என்பதை முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக இந்த கட்சிகள் இடைத்தேர்தலில் ஒதுங்கிக் கொண்டன.

ஆனாலும் தேர்தல் களத்தை இந்த கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க. தங்களது முழு பலத்தையும் காட்டத் தயாராகி வருகிறது. ஏற்கனவே கடந்த தேர்தலில் ஜெயலலிதா 41 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் என்பதால் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தை இலக்காக கொண்டு தேர்தல் பணியாற்றி வருகிறது. இது எதிர்க்கட்சிகளை மிரள வைத்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. இடைத்தேர்தலில் புதுக்கணக்கை போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஸ்ரீரங்கம் 6–வது வார்டு தேர்தல் அலுவலக திறப்பு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், தென்னரசு, திருச்சி சிவா எம்.பி. என பலர் முன்னிலையில் பேசிய கே.என்.நேரு, இந்த தேர்தல் தி.மு.க.விற்கு மட்டும் அல்ல அனைத்து கட்சிகளுக்குமே பரிசோதனை தேர்தல். தி.மு.க.வை தோழமை கட்சிகள் ஆதரிக்காததால் நமது பலத்தை யாரும் சந்தேகிக்க வேண்டாம்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. அதிக முறை வெற்றி பெற்று உள்ளதாக கூறினாலும் தி.மு.க.விற்கு சம அளவு பலம் உள்ளது. இப்போது வெற்றி முனையில் தி.மு.க உள்ளது. தேர்தல் முடிவு அ.தி.மு.க.விற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும் என தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு புதுக்கணக்கை கூறி கே.என்.நேரு கட்சியினரை தைரியமூட்டி வருகிறார்.
ஸ்ரீரங்கத்தில் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்பிரமணியன், கு.ப.கிருஷ்ணன், சவுந்தரராஜன் என பலர் வெற்றி பெற்ற போதெல்லாம் ஓட்டு வித்தியாசம் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் 12 ஆயிரம் மட்டுமே. 2011–ல் ஜெயலலிதா வெற்றி பெற்ற போது 41 ஆயிரம் ஓட்டு அ.தி.மு.க.விற்கு கூடுதலாக கிடைத்தது.
ஆனால் இம்முறை அ.தி.மு.க.வோடு தே.மு.தி.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் இல்லை. இதனால் சுமார் 20 ஆயிரம் ஓட்டுக்கள் அ.தி.மு.க.விற்கு குறையும். இப்போது அ.தி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி தி.மு.க.விற்கு சாதகமாகும். எனவே இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க.விற்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும் என கே.என்.நேரு கணக்கு போட்டு கூற தி.மு.க.வினர் புதிய பலம் கிடைத்தது போன்று கூட்டத்தில் இருந்து தேர்தல் களத்திற்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.
ஆனால் ‘ஒன்றே கால் வித்தியாசம் லட்சியம், ஒன்று நிச்சயம்’ என அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலளார்கள், வாரிய தலைவர்கள் என முகாமிட்டு தேர்தல் களத்தை கலக்கி வருகிறார்கள். maalaimalar.com

கருத்துகள் இல்லை: