திங்கள், 15 செப்டம்பர், 2014

கோவை மேயர் தேர்தலில் வீடு, வீடாக ஓட்டுக்கு 'நோட்டு' : அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் ! பிரவீனை காணோம் ?

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அ.தி.மு.க.,வினரை சுற்றிவளைத்த பா.ஜ., கட்சியினர், அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை கைப்பற்றினர். இதனால், பல்வேறு இடங்களில் பரபரப்பு நிலவியது.கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் பிரசாரம்விறு,விறுப்பாக நடக்கிறது. துடியலூர் வட்டாரத்தில், அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பரவலாக புகார் கிளம்பியது. நேற்று மதியம், துடியலூர், சேரன் காலனியில், கோவை மாநகராட்சி 1வது வார்டு, பா.ஜ., கவுன்சிலர் வத்சலா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்குமாறு கூறி, வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய நபர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து, பணம் வழங்கிய விபரம் அடங்கிய நோட்டு, கட்டுக்கட்டாக ௧௦௦ ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர்.   தெருவில் பூனைகள் 2 பிராண்டி கொள்வதை பார்த்தால் அவை இரண்டும் சண்டை போட்டுக்கொள்வது போல தெரியும்...ஆனால் உண்மையில் அது சண்டையல்ல..அன்பின் மிகுதியால் ஆடும் விளையாட்டே..அது போலத்தான் இந்த பிஜேபி - அதிமுக சண்டைகள் ...இல்லை..இல்லை..அன்பின் மிகுதியிலான விளையாட்டுகள்
இதனால், பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்தனர்.அப்பநாயக்கன்பாளையம் இதற்கிடையே, மாநகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம், பார்க் சிட்டி உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க.,வினர் பணம் வினியோகத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அவர்களிடம் இருந்தும், கட்டுக்கட்டாக பணத்தை பா.ஜ.,வினர் கைப்பற்றினர்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகேயுள்ள பிரபு நகர், அசோக் நகர், மீனா நகர் பகுதிகளில் நேற்று காலை, காரில் வந்த அ.தி.மு.க., பிரமுகர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் பணம் வினியோகித்ததாக புகார் கிளம்பியது. சம்பவ இடத்துக்குச்சென்ற கவுண்டம்பாளையம் மண்டல பா.ஜ., தலைவர் மணி, தேர்தல் ஏஜன்ட் ராஜேஷ் தலைமையிலான தொண்டர்கள், அ.தி.மு.க.,வினருடன் வாக்குவாதம்செய்து, பணத்தை பறித்தனர். அப்போது, கைகலப்பு ஏற்பட்டது.அ.தி.மு.க., பிரமுகர்கள், தாங்கள் வந்த காரை அங்கேயே விட்டுவிட்டு'எஸ்கேப்' ஆகினர். ஆத்திரமடைந்த பா.ஜ.,வினர்,காரின் நான்கு டயர்களையும் பஞ்சராக்கினர். துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வந்து சமாதானம் செய்து, கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து பா.ஜ.,வினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் வாக்காளர் பட்டியல் நகல்கள், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்படும். இந்த தேர்தலில் அதிகளவில் பணம் விளையாடுகிறது என்பதற்கு, கைப்பற்றப்பட்ட பணமே சாட்சி. மாநகராட்சி முழுவதும் இதே நிலைதான்.இன்று (நேற்று) பட்டப்பகலிலேயே பல இடங்களில், அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாகச் சென்று பணம் வினியோகித்துள்ளனர். கோவை தெற்குப்பகுதியில் சுந்தராபுரம், மாச்சம்பாளையம், இடையர்பாளையம் பகுதிகளிலும் பண வினியோகம் நடந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது
குறித்தும், எங்களது தலைமையிடம் முறையிட்டுள்ளோம்.இவ்வாறு, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

'தமிழகத்தில் அராஜகம், அத்துமீறல், மிரட்டல் போன்ற சம்பவங்கள், இடைத்தேர்தலில் தலைதூக்கியுள்ளன. இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்,'' என்று, கோவையில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் பா.ஜ.,மேயர் வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜனநாயகத்தை காக்க, பா.ஜ., களம் இறங்கியுள்ளது. பல இடங்களில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளவில்லை. ஆள் கடத்தல், பணபேரம் நடந்துள்ளது. முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.கோவையில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர், வேலாண்டிபாளையம் பகுதிகளில் பணப்பட்டுவாடாவை அ.தி.மு.க.,வினர் துவக்கி விட்டனர். ஒரு தெருவின் நுழைவு மற்றும் கடைசி பகுதியில் அ.தி.மு.க.,வினர் முகாமிட்டு நிற்கின்றனர். அனைத்து தெருக்களையும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர்.இன்று (நேற்று) காலை, கவுண்டம்பாளையம் பகுதியில் அ.தி.மு.க.,வினர், பணம் பட்டுவாடா செய்ததை பா.ஜ.,வினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் ரகளை ஏற்பட்டு, வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது குறித்து, தேர்தல் பார்வையாளர் கஜலட்சுமி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் அர்ச்சனாபட்நாயக்கிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.கோவையில் 20 அமைச்சர்கள் முகாமிட்டிருப்பதை பார்த்தால், தமிழக சட்டசபையும் கூட, விரைவில் கோவைக்கு வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.இவ்வாறு, அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின்போது, பா.ஜ., மாநில பொருளாளர் சேகர், செயலாளர் செல்வகுமார், ம.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
மறுக்கிறது அ.தி.மு.க.,:அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் ராஜ்குமார் கூறுகையில்,''பணம் பட்டுவாடாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை; நான் பிரசாரத்தில் இருக்கிறேன். காழ்ப்புணர்ச்சியால், எதிர்க்கட்சியினர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்,'' என்றார்.

அமைச்சர் வேலுமணி கூறுகையில்,''எங்களுக்கு எதிரியும் இல்லை; எதிர்க்கட்சியும் இல்லை. பா.ஜ.,வினர், அவதூறு கிளப்புகின்றனர். நாங்கள் எதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்? எங்களது சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். கோவை, அ.தி.மு.க.,வின் கோட்டை. ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறும் பா.ஜ.,வினர் 'டிபாசிட்' இழப்பார்கள். அந்த பயத்தால்தான், புகார் கூறுகின்றனர்,'' என்றார்.
கோவை, துடியலூரில் அ.தி.மு.க.,வினர், வாக்காளர் பட்டியலை நகல் எடுத்து, அதை 80 பக்க நோட்டில் ஒட்டி,நடுநிலையான வாக்காளர்கள் யார், யார் என குறிப்பிட்டுள்ளனர். இவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை குறிக்கும் விதமாக, 'டிக்' செய்கின்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்தால் 'டோர் லாக்டு' என குறிப்பிடுகின்றனர். நோட்டின் முதல் பக்கத்தில் கட்சியினரில் யார், யார் பொறுப்பில் நோட்டு மற்றும் பணம் ஒப்படைக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்படுகிறது. கட்சி நிர்வாகிகளின் பெயர் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.பணம் வழங்குவதிலும், வகை பிரித்துள்ளனர். நடுநிலை வாக்காளர்களுக்குதலா 200 ரூபாய் எனவும், மாற்று கட்சியினருக்கு 500 முதல் 1000 ரூபாயும் வழங்குகின்றனர். பணம் வினியோகம் குறித்து,தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என, குற்றம்சாட்டுகின்றனர் பா.ஜ.,வினர்.

- நமது நிருபர் குழு - dinamalar.com

கருத்துகள் இல்லை: