திங்கள், 15 செப்டம்பர், 2014

அருண் செல்வராசனுடன் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பல பெருந்தலைகள் தொடர்பு ? மிகபெரும் சதிவலை !

சென்னை: சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளியுடன், முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர் உள்பட சில ஐஏஎஸ் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது என்ஐஏ விசாரணையில்  தெரிய வந்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளியான இலங்கை தமிழர் (முன்னாள் புலி ) அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு படையினர்(என்ஐஏ) கைது செய்தனர். பின்னர், அவனை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். அவனை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.இதற்கிடையில், அருண் செல்வராசன் பற்றி என்ஐஏ போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.


அவன் நடத்திய விழாவில் சென்னையை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் கலந்து கொண்டதும், அந்த விஐபி கலந்து கொள்ளும் பல விழாக்களை அருண் செல்வராசன் நடத்திய தனியார் நிறுவனமே நடத்தி கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்த விழாக்களின் புகைப்படங்கள் அவனது இணைய தளத்திலும் வெளியாகியுள்ளன. அந்த முக்கியப் பிரமுகரின் தொடர்பு மூலம் மேலும் பல விஐபிக்களுடன் அருண் தொடர்பு கொண்டு விழா நடத்தி கொடுத்தது தெரியவந்துள்ளது.மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவருடன் அருண் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளரின் குடும்ப விழாக்கள் அனைத்துமே அருண்செல்வராசன்தான் முன்னின்று இலவசமாக நடத்தி கொடுத்துள்ளான்.

பின்னர், அவர் மூலம் பல விஐபிக்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்துள்ளான். முன்னாள் தலைமைச் செயலாளரின் குடும்ப உறுப்பினராகவே அருண் செல்வராசன் இருந்துள்ளான். அந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மூலம் பல ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவனுடன் தொடர்பு வைத்திருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் தற்போது அவன் உளவாளி என தெரிந்ததும் அச்சத்தில் உள்ளனர். அருண் செல்வராசன், ஒரு விழாவில் சென்னை புறநகரில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவியைச் சந்தித்துள்ளான். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அந்த மாணவி கேட்டு கொண்டதால், அந்த கல்லூரிக்கு 2 விழாக்களை நடிகர்கள், நடிகைகள், பாடகர்களை வைத்து நடத்தி கொடுத்துள்ளான். அதற்கான செலவு முழுவதையுமே அருண் செல்வராசன் ஏற்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும், நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டராக உள்ளவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொடர்பு மூலம் இந்தி நடிகர்கள், நடிகைகளுடனும் அருண் செல்வராசன் பழகி வந்துள்ளான். மும்பையிலும் அவர் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்திருக்கிறான். பெரும்பாலான நிகழ்ச்சிகள், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நடந்துள்ளது. அந்த போட்டோக்களை அவன் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். இந்த தகவல்களும், என்ஐஏ போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகிஸ்தான் தூதரகத்துக்கு இந்த படங்களை அனுப்பியதன் மூலம் விஐபிக்கள் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகளை தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து அருண் செல்வராசனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அருண்செல்வராசனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: