வெள்ளி, 18 ஜூலை, 2014

தமிழக பாஜகாவினர் டெல்லி தலைவர்களை சந்திக்க புதிய கட்டுப்பாடுகள் ! அமித்ஷா கண்ட்ரோல் ?

சென்னை : பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவின் அதிரடியான உத்தரவுகளால், தமிழக பா.ஜ.,வினர் கலங்கிப் போயிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது: பா.ஜ.,வின் தேசியத் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும், புதிய தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் அமித் ஷா, பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின், அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறார். குறிப்பாக, டில்லியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து செயல்படும் அமைச்சர்களை தேவையில்லாமல், மாநிலங்களில் இருந்து வந்து கட்சியினர் பார்க்கக் கூடாது என்று முதலில் உத்தரவு போட்டார்.
கட்சியினருக்கு ஏதும் பரிந்துரை என்றால், கட்சியின் மாநிலத் தலைவரின் பரிந்துரையுடன் தான், அமைச்சர்களை வந்து பார்க்க வேண்டும் என, சொல்லியிருக்கிறார். அப்படி வருகிறவர்களுக்கே சிபாரிசுகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும், அமைச்சர்களிடமும் சொல்லியிருக்கிறார். இதனால், டில்லிக்கு வந்து தங்களை சந்திக்க வரும் கட்சியினரை, அமைச்சர்கள் பலரும் சந்திக்காமல் தவிர்த்து வருகின்றனர். அதேபோல, டில்லியில் இருக்கும் அரசுத் தரப்பு அதிகாரிகளை கட்சியினர், நேரடியாகச் சென்று சந்தித்து காரியம் முடிக்கும் விஷயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க, பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார். அடுத்ததாக, பல்வேறு துறைகளிலும் இருக்கும் வாரியங்கள், கழகங்களில் பதவிகளைப் பெறுவதற்கு, கட்சியினர் முட்டி மோதுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து, நிறைய பேர் பல வழிகளிலும் பொறுப்புகளை பெறுவதற்கு, டில்லியில் இருக்கும் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களுக்கு, தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றனர். இதையும் அமித் ஷா விரும்பவில்லை.

குறிப்பாக, அந்த பொறுப்புகளை வைத்து, கட்சியை வளர்க்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார் அமித் ஷா. லோக்சபா தேர்தலில் கட்சி தோல்வி அடைந்திருந்தாலும், வேகமாக வளருவதற்கு வாய்ப்புள்ள மாநிலங்களுக்கு, வாரியம் மற்றும் கழகங்களில் பொறுப்புகளை வழங்க முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் தமிழகம் போலவே, ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற ஒடிசா மாநிலத்தில், கட்சி 20 சதவீத ஓட்டுகளை பெற்றிருப்பதால், அடுத்த தேர்தலுக்குள், கட்சி வேகமாக வளருவதற்கு வாய்ப்பிருப்பதாகக் கருதும் ஷா, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்திருக்கிறார். அந்த வரிசையில், தமிழகம் பின்தங்கி இருப்பதோடு, அதிருப்தி பட்டியலிலும் இருப்பதால், இங்கிருப்பவர்களுக்கு வாரிய பொறுப்புகளை பெற வாய்ப்பு குறைவு தான். இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்களில் தெரிவித்தனர்dinamalar.com 

கருத்துகள் இல்லை: