ஞாயிறு, 13 ஜூலை, 2014

ராமானுஜன் திரைப்படம் ! சாஸ்திரங்களால் சாகடிக்கப்பட்ட மேதையின் கதை இது !

வரலாற்றில் தன் முத்திரையை பதித்த ஒரு மனிதனின் வாழ்வை படமாக்குவதில் ஆயிரம் சவால்கள் இருக்கின்றன. பாரதி, பெரியார் என இரண்டு மிகப்பெரும் ஆளுமைகளை நம் கண்முன் நிறுத்தி, அதில் வெற்றி கண்டவர் இயக்குனர் ஞானராஜசேகரன். இப்போது ஆங்கிலேயர்களையே வியக்க வைத்த ராமானுஜரைப் பற்றிய வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்.கணித மேதையாக பரவலாக அறியப்பட்ட ராமானுஜன், கணிதத்தில் சாதித்தவை என்ன என்று தெரிந்து கொள்ள ஒரு சரியான வாய்ப்பு இந்தத் திரைப்படம். இன்று பயன்படுத்தப்படும் எ.டி.எம் கார்ட்டுகள் கூட ராமானுஜரின் கணிதத்திலிருந்து பிறந்தவை என்பது நமக்கு பெருமையை கொடுக்கிறது.
இது ஒரு வரலாற்றுப் பதிவு தான் என்றாலும் காதல், தாய்மை, நகைச்சுவை என வெகுஜன சினிமாவுக்கு தேவையான விஷயங்களை முடிந்த அளவு இதில் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் ஞானராஜசேகரன்.எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதை விட, வாழும் போது என்ன சாதித்தோம் என்பதே முக்கியமானது... இது ராமானுஜருக்கு அப்படியே பொருந்தும்.
>கும்பகோணத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த ஸ்ரீநிவாச ராமானுஜன், இரண்டாம் வகுப்பில் படிக்கும் போதே பி.ஏ படிக்கிறவர்களுக்கு கணிதம் சொல்லிக்கொடுத்தார் என்பது அவரின் திறமைக்கு சான்று. கணிதத்தில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் ராமானுஜர் மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போகிறார். இதனால், சராசரி மாணவன் எங்களுக்கு போதும், நீ தேவையில்லை என்று கல்லூரி அவரை நிராகரிக்கிறது. 


ஒரு மாபெரும் கணித மேதை அரிசி மண்டியில் வேலைக்கு நிற்பதும், வேலை கிடைத்துவிட்ட பிறகு கணக்குப்போட குறிப்பேடுகள் இல்லாமல் காகிதங்களை பொருக்குவதும் என வந்து போகும் காட்சிகள் இதயத்தை கனமாக்குகிறது.

தன் திருமணத்திற்கு பின் சென்னை வருகிறார் ராமானுஜர். பச்சையப்பா கல்லூரியின் பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் மற்றும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் எட்வர்டு பி.ரோஸ் போன்றவர்கள் ராமானுஜரின் கணித அறிவை கண்டு பெரிதும் ஆச்சரியப்படுகிறார்கள். அங்கே தான், அடுத்தக் கட்டத்தை அடைகிறது ராமானுஜரின் கணித பயணம்... ராமானுஜர் எண்களால் நடத்தும் வித்தைகள் பலரையும் ஆச்சரியப்படுத்த, சில காலத்துக்குப் பின்னர் ஆங்கிலேயரின் முயற்சியால் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. 


’நம்மவா யாரும் கடல் தாண்டிப் போகக்கூடாது’ என்று சாஸ்திரம் பேசுகிறது உறவுகள். ’இந்திய சாஸ்திரங்கள் விநோதமானவை, எந்த பாவத்தை செய்தாலும் அதற்கு ஒரு பரிகாரம் உண்டு’ என்று அடுத்து வரும் காட்சியில் லண்டனில் வசிக்கும் ஒரு இந்தியர் விளக்கம் சொல்கிறார். 

ராமானுஜர் லண்டன் செல்கிறார். அவரை அழைத்து ஆராதனை செய்கிறார்கள் வெள்ளைக்காரர்கள். கும்பகோணம் கொடுக்காத மரியாதையை அவருக்கு கேம்பிரிட்ஜ் கொடுக்கிறது. எண்களின் உலகத்தில் வாழ்ந்து வரும் ராமானுஜர் அங்கே தன் கணித ஆராய்ச்சிகளை தொடர்கிறார். கேம்பிரிட்ஜின் ட்ரினிட்டி காலேஜில் பி.ஏ பட்டம் பெறுகிறார். 

அறிவியல் விஞ்ஞானிகள், கணித மேதைகள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருப்பார்கள். ஆனால், ராமானுஜரோ... தான் போடும் கணக்குகளுக்கு, பெருமாள் அதன் விடையை தன் நாவில் வந்து எழுதுவதாக நம்புகிறார். இது வெள்ளைக்காரர்களை மட்டுமல்ல நம்மையும் ஆச்சரியப்படுத்துகிறது. அதற்கு, படத்தில் ஒரு வெள்ளைக்காரர் கொடுக்கும் விளக்கம் ரசிக்க வைக்கிறது...


பல கணித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கேம்பிரிட்ஜின் ‘ஃபெலோ ஆஃப் ட்ரினிட்டி’ என்று தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையும் ரமானுஜருக்கு உண்டு. 

முதல் உலகப் போர் நடந்து வரும் காலகட்டத்தில் ராமானுஜருக்கு காசநோய் இருப்பது தெரிய வருகிறது. அதுவரை தானே சமைத்து சாப்பிட்டு வரும் ராமானுஜர் மருத்துவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட மறுக்கிறார். சத்தான உணவுகளை உட்கொள்ளாத ராமானுஜரின் உடல் மேலும் சோர்வடைகிறது.

மீண்டும் சென்னை வருகிறார். உடல் நலம் மோசமாக, கடைசி கட்டத்தில் உயிருடன் போராட்டம் நடத்தும் போதும் கணக்குகளை அவர் கைவிடவில்லை. மரணத்தின் படுக்கையிலும் கணிதத்தை நேசித்தார். கடல் தாண்டி போனவரின் உயிர் பிரியும் நேரம், அவர் கூட இருந்தால், அந்த பாவம் நம்மையும் பிடித்துக் கொள்ளும் என்று சொல்லி உறவினர்கள் சென்று விடுகிறார்கள். தன் சொந்த சமூகம் கைவிட்ட நிலையில் சொர்ப்ப ஆட்களே அவரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்கும் நிலை வருகிறது.சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி ஒரு மேதையை சாகடித்துவிட்டார்களே என்ற வேதனைதான் படத்தின் முடிவில் நமக்கு செய்தியாக கிடைக்கிறது. இறந்த பிறகும் மக்களால் போற்றிப் பேசப்படுபவனே உண்மையாக பிறந்தவன் என்பது ராமானுஜரின் வாழ்க்கைக்கு பொருத்தமானது.


பிராமண வாசம் ராமானுஜர் படத்தில் தவிர்க்க முடியாதது. வகுப்பறையில் அவர்கள் மட்டுமே இருந்தார்கள், கோவிலில் அவர்கள் மட்டுமே அமரமுடியும், அதிகாரத்தில் அவர்கள் மட்டுமே இருக்கமுடிந்தது போன்ற பதிவுகளையும் சொல்லாமல் சொல்கிறது படத்தின் பல காட்சிகள்.நிழல்கள் ரவி, சரத்பாபு, ராதாரவி, தலைவாசல் விஜய் என சிறிது நேரம் வரும் கதாபாத்திரங்களும் நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மனைவியாக வரும் பாமாவும் மனதில் நிற்கிறார். இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேல் நடிப்பை வழங்கி இருப்பவர் சுஹாசினி. >ஒவ்வொரு ஃப்ரேமும் பேசுகிறது... சன்னி ஜோசப்பின் ஒளிப்பதிவில் அவ்வளவு நேர்த்தி. படத்தொகுப்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சபாஷ் போடும் அளவிற்கு தன் நிதானத்தையும் அனுபவத்தையும் படத்தொகுப்பில் காண்பித்திருக்கிறார் எடிட்டர் பி.லெனின். பின்னணி இசையில் இளையராஜாவின் சாயலை ஞாபகப்படுத்தும் வகையில் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் ரமேஷ் வினாயகம்.கேம்பிரிஜ் வியந்து போற்றிய கணித மேதை நம் கும்பகோணத்தில் இருந்தவர் தான் என்பதை தெரிந்து கொள்ளவும், இன்னும்... ஒரு ஜீனியசை இந்த சமூகம் எப்படி நடத்தியது என்பதை உணர்ந்து கொள்ளவும் அவசியம் அனைவரும் ‘ராமானுஜன்’ பார்க்க வேண்டும்!&>ராமானுஜன் - சாஸ்திரங்களால் சாகடிகப்பட்ட நாயகன்! nakkheeran.in

கருத்துகள் இல்லை: