செவ்வாய், 15 ஜூலை, 2014

செம்மஞ்சேரி ஹேமலதா தற்கொலை ! ஜேப்பியார் பல்கலைகழகத்தின் எல்லையில்லா அடாவடி !

posterசாராய ரவுடியாக தொழிலை ஆரம்பித்த ஜேப்பியார் பின்னர் கல்வி வள்ளலாக அவதரித்து சத்யபாமா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஜேப்பியார், பனிமலர், மாமல்லன், செயின்ட் ஜோசப் போன்ற ஜேப்பியாரின் கல்லூரிகள் அனைத்தும் அங்கு பயிலும் மாணவர் நோக்கில் கிளைச் சிறைகள் என்றால் சத்தியபாமா பல்கலைக்கழகத்தை மத்திய சிறை என்று கூறலாம்.
வெளியிலிருந்து பார்த்தால் பளபளப்பான சுதந்திர நவநாகரீக வளாகமாக காட்சியளிக்கும் சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே சென்று பார்த்தால் இது உண்மையிலே ஒரு கல்வி நிறுவனம் தானா என்கிற சந்தேகம் வரும். பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது. செல்போன் வைத்திருக்கக் கூடாது, அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது என்று ஆயிரத்தெட்டு நிபந்தனைகள், வளாகத்திற்குள் சிரிக்கக்கூடாது என்கிற நிபந்தனை இருக்கிறதா என்று தெரியவில்லை. பொதுவாக கல்லூரிகளில் மாணவர்களின் பயிற்சி, வளர்ச்சியை முன்னிட்டு கட்டுப்பாடுகள் இருப்பது சரியென்றாலும் இங்கே அது எல்லை மீறி ஜேப்பியாரின் பண்ணையடிமைத்தனமாக மாற்றப்பட்டுவிட்டது. எம்ஜியார்  செய்த  எத்தனையோ  பாவங்களில் இந்த ஜேப்பியார் போன்ற  அடியாட்களை கண்டெடுத்து வளர்த்து விட்டது  உண்மையில் மிகபெரும் சாபகேடுதான்

மாணவர்கள் இந்த நிபந்தனைகளில் எதையாவது மீறினால் திடீரென்று பாய்ந்து வரும் குண்டர்கள் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் செல்வார்கள். அவர்களை கவனிப்பதற்கென்று பல்கலைக்கழகத்திற்குள் விசாரணையறைகள் என்ற பெயரில் தனி இருட்டறைகள்  உண்டு.
நிர்வாகத்தின் இத்தகைய அடக்குமுறைகளுக்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக 2006-ம் ஆண்டு ஒரு கடுமையான எதிர்வினை நிகழ்ந்தது. அப்போது படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஜேப்பியாரின் இந்த நாட்டாமைத்தனத்திற்கெதிராக கொதித்தெழுந்தனர். மாணவர்கள் அதுவரை தமது நெஞ்சங்களில் தேக்கி வைத்திருந்த கோபத்தை அன்று ஒரு சிறிய கலவரம் மூலம் தீர்த்துக் கொண்டனர். பல்கலைக்கழகத்தின் விடுதிகள், சேர்மன் அறை, முதல்வர்  அறை, உதவியாளர் அறை, கான்பரன்ஸ் ஹால் அனைத்தையும் உடைத்து நொறுக்கித் தீ வைத்து கொளுத்தினர். நள்ளிரவு இரண்டு மணியை தாண்டியும் தீயணைப்பு படையினர் தீயை அனைத்துக் கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவு நேரத்திலும் மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இப்படி கொதித்தெழுந்தது வேறு எங்கும் இல்லை. இதிலிருந்தே ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் சித்திரவதை கட்டமைப்பை புரிந்து கொள்ளலாம். மறுபுறம் இப்படி எதிர்ப்பை போராட்டமாக காண்பிக்காமல் மனமுடைந்து தற்கொலையும் செய்து  கொள்கிறார்கள். இதில் நிர்வாகத்தின் அடக்குமுறையால் தற்கொலை செய்துகொள்பவர்கள் தான் அதிகம். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இதுவரை பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த 11.07.2014 வெள்ளிக்கிழமை அன்று அந்த வரிசையில் மற்றொரு ‘தற்கொலை’ யும் சேர்ந்திருக்கிக்றது. நான்காம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்த ஹேமலதா (21) என்கிற மாணவி கல்லூரி விடுதியில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கடந்த பருவ தேர்வில் (semester) ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர் தேர்வுக்கு பிறகு அதை தனியாக எழுதி தேர்ச்சியடைந்து விடுகிறார். ஆனால் அந்த தேர்வுத்தாளின் இறுதியில் “give me a pass mark” என்று எழுதி விடுகிறார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த துறைத்தலைவரும், கல்லூரி நிர்வாகிகளும் ஹேமலதாவை அழைத்து கடுமையாக திட்டியுள்ளனர்.
“நீ ஒழுங்காக படிப்பதில்லை, ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறாய், நீ அப்படி இப்படி நடந்து கொள்கிறாய்” என்று உளவியல் ரீதியாக பாதிக்கும்படியான வார்த்தைகளில் கடுமையாக தாக்கியுள்ளனர். திட்டியதுடன் பெற்றோரையும் அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்கள். ஹேமலதாவும் பெற்றோரை அழைத்து வந்திருக்கிறார். “உங்கள் மகள் சரியாக படிப்பதில்லை” என்று பெற்றோரிடம் புகார் பட்டியலை வாசித்துள்ளனர். “சரி இனிமேல் அப்படி நடக்காது நாங்கள் சொல்கிறோம்” என்று கூறிய பெற்றோர் ஹேமலதாவுக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறிவிட்டு கிளம்பிவிட்டனர்.
ஹேமலதாவை அவருடைய பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்த்துள்ளனர். அதற்காக இருந்த நிலத்தையும், நகைகளையும் விற்றுள்ளனர்.
அவர்கள் கிளம்பிய பிறகு மறுபடியும் ஹேமலதாவை அழைத்த துறைத்தலைவர் பாரதி மறுபடியும் ஒரு பேயாட்டம் போட்டிருக்கிறார். “நீயெல்லாம் எதுக்கு காலேஜ்க்கு வர்றன்னு எனக்கு தெரியும், நீ ரூம்ல இருக்கும் போது என்ன பண்றேன்னு தெரியும், நீயெல்லாம் படிக்கிறதுக்கே வரலடி” என்று மிக மோசமாக திரும்பவும் ஏசியுள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹேமலதா இரண்டு நாட்கள் யாருடனும் பேசாமல் இறுக்கமாக இருந்திருக்கிறார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. அவருடைய அறையில் இருந்த மாணவிகள் அனைவரும் வகுப்பிற்கு சென்ற பிறகு விடுதியின் ஜன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நிர்வாகம் உடனடியாக குப்பையை அப்புறப்படுத்துவதைப் போல ஹேமலதாவை பல்கலைக்கழகத்திலிருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, “உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டாள், உடலை ராயப்பேட்டைக்கு அனுப்பி விட்டோம் அங்கே போய்விடுங்கள்” என்று பெற்றோருக்கு தகவல் கூறிவிட்டு பிரச்சினையிலிருந்து நழுவிக் கொண்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்] – படங்கள் : நன்றி நக்கீரன்

பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினர். அவர்கள் மருத்துவமனையிலிருக்கும் போது தொலைபேசியில் அழைத்த பல்கலைக்கழக நிர்வாகம், “வந்து ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு போய்விடுங்கள்” என்று கூறியுள்ளனர். “கையெழுத்து போட முடியாது” என்று மறுத்தவர்கள் “எங்களுடைய மகளின் சாவுக்கு நீங்கள் தான் காரணம்” என்று கூறியதுடன் பல்கலைக்கழகத்தின் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒரு புகாரும் கொடுத்தனர். ஆனால் பெயருக்கு புகாரை பெற்றுக் கொண்ட ஜேப்பியாருக்கு வாலாட்டும் செம்மஞ்சேரி காவல் நிலையம், புகார் அளித்ததற்கான ரசீதை கூட (CSR Copy) ஹேமலதாவின் பெற்றோருக்கு கொடுக்கவில்லை.
Exif_JPEG_420மறுநாள் சனிக்கிழமை, தற்கொலை சம்பவத்தை அறிந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் உடனடியாக களத்திற்கு சென்றனர். ஹேமலதாவின் கொலையில் சந்தேகம் இருப்பதால் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறி அவருடைய பெற்றோரும், உறவினர்களும் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்தை முற்றுகையிட்டனர். அடுத்ததாக பெற்றோர் உறவினர்களோடு தோழர்களும் மருத்துவமனைக்கு முன்பாக உள்ள சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
மாணவியின் தாய் ஜெயந்தி கூறும் போது, “என்னுடைய மகளின் சாவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தான் காரணம், இன்று என்னுடைய மகள் இறந்துவிட்டாள். நாளை வேறு ஒரு பிள்ளைக்கு இந்த கதி ஏற்படக்கூடாது என்றால் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சின்ன சின்ன விசயங்களுக்காக மாணவர்களை இழிவுப்படுத்துவதால் தான் இதுபோன்ற  விசயங்கள் நடக்கின்றன. இதில் உண்மை நிலை தெரியும் வரை அவளுடைய உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது” என்று ஆவேசமாக கூறினார்.
பெற்றோர்கள், உறவினர்களுடன் இணைந்து தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரியளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உடனடியாக போலீசு குவிக்கப்பட்டது. தோழர்களையும், உறவினர்களையும் கைது செய்து வண்டியில் ஏற்றிச் சென்றனர். எனினும் இப்போராட்டத்தின் நெருக்கடியால் தற்கொலையாக பதிவு செய்யப்பட்ட வழக்கு 174 வது பிரிவின் கீழ் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று மாற்றப்பட்டது. அதன்பிறகு சில மாணவர்கள் ஹேமலதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு முன்பு முழக்கமிட்டுள்ளனர். உடனே ஜேப்பியாருக்காக பதறிக்கொண்டு வந்த போலீசு அவர்களை அள்ளிப்போட்டுக் கொண்டு பறந்தது.
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர். சுங்குவார்சத்திரத்தில் அவர் பெயரில் கட்டிக்கொண்டிருந்த கல்லூரி இடிந்து விழுந்ததில் பல தொழிலாளிகள் இறந்து போன வழக்கும் அவர் மீது இருக்கிறது. அவரது கல்லூரியில் ஓட்டுநராக இருந்த தோழர் வெற்றிவேல்செழியன் தொடுத்த வழக்கில் நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்தாமல் நீதி மன்றத்தை அவமதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த அரசும் நீதி மன்றமும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஹேமலதா தன் கையால் தான் தூக்கு மாட்டிக் கொண்டார் என்றே நடந்திருந்தாலும் அந்தக் கைகளை அப்படித் தூண்டியது ஜேப்பியாரின் சர்வாதிகார நிர்வாக அமைப்புதான். ஆகவே இதை கொலையாகவும் விசாரிக்க வேண்டும். ஹேமலதாவை போன்று இதற்கு முன்பும் பல மாணவ மாணவிகள் இந்த கல்விக் கொள்ளையர்களால் தற்கொலை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இனியும் இத்தகைய தற்கொலைகள் தொடராமல் இருக்க வேண்டுமானால் தனியார் கல்விக் கொள்ளையர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும். அரசே ஆரம்ப பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்தையும் நடத்துவதற்கு நாம் போராட வேண்டும். இதன்றி ஹேமலதாக்களை நாம் காப்பாற்ற முடியுமா? vinavu.com

கருத்துகள் இல்லை: