சனி, 3 ஆகஸ்ட், 2013

இயக்குனர் சேரன்: என் மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்கவேண்டும்

சென்னை: எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கேட்டுள்ளார் அதேசமயம் நான் காதலுக்கு எதிரானவன் அல்ல...என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி (20). தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வீட்டுச்சிறையில் தந்தை சேரன் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தாமினி தெரிவித்தார். இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேரன் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சந்துரு மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், கூறியதாவது: தான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல என்றும், தானும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன்தான் என்றும் கூறிய அவர், தாமும் தனது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றும், மனைவி குடும்பத்தினர் கூட ஏழ்மை நிலையிலிருந்து மேலே வந்தவர்கள்தான் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நானும் எங்களது குழந்தைகளை ஏழை, பணக்காரன், சாதி, மத பாகுபாடு பார்க்கக்கூடாது என்று சொல்லி அதன்படியே வளர்த்துள்ளோம்.எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போது அந்த பையன் ( சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள். உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு...நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன். இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. எனது மகள் எனக்கு எதிராக நேற்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாள். தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் எடுத்த திரைப்படங்களை பார்த்தாலே இதை தெரிந்துகொள்ளலாம். மேலும் ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றும், அதேப்போன்று ஒரு மாமனாராக எனக்கு மருமகனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது? நியாயமானதுதானே...?" என கண்ணீர் மல்க பேட்டியை முடித்துக்கொண்டார். கமிஷனர் அலுவலகத்திற்கு சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு. பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
tamil.oneindia.i

கருத்துகள் இல்லை: