சென்னை-மதுரவாயல் பகுதியிலுள்ள ஈ.வெ.ரா.பெரியார்
சாலையில் கே.தர்மராஜ், சேதுராமன் உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாகச் சேர்ந்து
ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகின்றனர். மதுரவாயல் போலீசார் இவர்களிடம்
மாமூல் வசூலிப்பதை எவ்விதத் தடங்கலுமின்றி நடத்திவந்த வேளையில்,
ஆறாண்டுகளுக்கு முன்பு அப்போலீசு நிலையத்தில் ஆய்வாளராகப் பதவியேற்ற எஸ்.
சீதாராமன் இவர்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரு கேவலமான மாற்றத்தைக்
கொண்டுவந்தார். “மாமூலைப் பணமாகத் தருவதற்குப் பதிலாக, போலீசு நிலையத்தைச்
சேர்ந்த நான்கு போலீசாருக்கும் மூன்று வேளை சாப்பாடை மாமூலாகத் தர
வேண்டும்” என அந்த அதிகாரியிடமிருந்து உத்தரவு பறந்தது. இதன்படி நடந்துவந்த
அவர்கள், சில மாதங்களுக்குப் பின் சாப்பாடு கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.

மாமூல்
நிறுத்தப்பட்டதைத் தமது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதிய
ஆய்வாளர் சீதாராமனும், தலைமைக் காவலர் திருவேங்கடமும் கடந்த மார்ச் 19,
2007 அன்று அந்த உணவகத்திற்குச் சென்று, அங்கிருந்த தர்மராஜ், சேதுராமனிடம்
அவர்களது வாகனத்துக்கான உரிமத்தைக் கேட்டனர். அவர்கள் அந்த உரிமத்தைக்
கொடுத்தவுடன், அதனை வாங்கி கிழித்துப் போட்ட அவ்விரண்டு போலீசாரும்
மீண்டும் உரிமத்தைக் கொடுக்குமாறு அடாவடித்தனம் செய்தனர். தர்மராஜும்
சேதுராமனும் இதனைத் தட்டிக் கேட்டவுடனேயே, அவர்களைத் தாக்கி, போலீசு
நிலையத்திற்கு இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்தனர். இருதய
நோயாளியான தர்மராஜுக்கு இந்தத் தாக்குதலில் மண்டை உடைந்து இரத்தம் வழிந்த
போதும் அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப மறுத்தார் ஆய்வாளர் சீதாராமன்.
தர்மராஜின் வியாபாரக் கூட்டாளிகள் இந்த அத்துமீறல் பற்றி விசாரிக்க போலீசு
நிலையத்திற்கு வந்தவுடன், அவர்களையும் சட்டவிரோதக் காவலில் அடைத்ததோடு,
வாகனச் சோதனை நடத்திய பொழுது தர்மராஜும் அவரது கூட்டாளிகளும் தலைமைக்
காவலரைத் தாக்கியதாகப் பொய் வழக்குப் போட்டு புழல் சிறைக்குள் தள்ளியது,
மதுரவாயல் போலீசு.
நீதிமன்றத்தில் இது பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டு அவர்கள் விடுதலை
செய்யப்பட்டனர். மதுரவாயல் போலீசின் இந்த அத்துமீறலுக்கு எதிராக தர்மராஜ்
மனித உரிமை ஆணையத்தில் தொடுத்த வழக்கில், “பாதிக்கப்பட்ட ஐவருக்கும் தலா
ரூ.50,000/- வீதம் ரூ.2,50,000/-ஐத் தமிழக அரசு வழங்க வேண்டும்; இத்தொகையை
அவ்விரு போலீசாரின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ள வேண்டும்; அவர்கள்
மீது துறை ரீதியான விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும்” என ஆறாண்டுகள்
கழித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மதுரவாயல்
போலீசார் அந்த ஐந்து பேரையும் தொடர்ந்து மிரட்டி மாமூல் வசூலித்து
வந்துள்ளனர்; நியாயமான அடிப்படையில் அவர்கள் மாமூலைத் தர மறுத்தபொழுது,
போலீசார் அவர்களை அடித்தும் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்தும்
துன்புறுத்தியுள்ளனர்; மாமூல் தர மறுத்த ஒரே காரணத்திற்காக அவர்கள் பொய்
வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்துணை சட்டவிரோதச் செயல்களையும்
செய்த போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்; சிறையில்
தள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்போ அபராதம் என்ற மொன்னையான
தண்டனையை மட்டும்தான் அவர்களுக்கு விதித்திருக்கிறது. அதுவும் அப்போலீசார்
வாகன உரிமத்தைக் கேட்ட சமயத்தில் மனித உரிமைகளை மீறி நடந்துகொண்டதற்காக
மட்டும்தான் இத்தண்டனை என்றால், மாமூல் கேட்டு அவர்கள்
துன்புறுத்தப்பட்டதை, பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதைச் சகித்துக்
கொள்ள வேண்டியதுதானா?
இது விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல என்பதையும் போலீசு ஒரு
ஒட்டுண்ணிக் கும்பல் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் அறிவோம். தமக்குள்ள
வானளாவிய அதிகாரத்தின் காரணமாக, கூச்சநாச்சமின்றியும் தண்டிக்கப்படுவோம்
என்ற பயமின்றியும் நாலாவிதமான குற்றங்களையும் செய்து வருகிறது, போலீசு. இது
போன்ற அத்துமீறல் ஒவ்வொன்றும் போலீசு என்ற அமைப்பையே கலைக்கக் கோரிப்
போராட வேண்டும் என்பதை நோக்கி நம்மை உந்தித் தள்ளவில்லையா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக