ஞாயிறு, 28 ஜூலை, 2013

கலைஞர் காங்கிரசை இன்னும் மன்னிக்கவில்லையா ? அல்லது ராகுல் காரணமா ?

ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த பின்,
தி.மு.க., - காங்., கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி மலரும் என்ற எதிர்பார்ப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற அடிப்படையில், அக்கட்சியை வேகமாக தி.மு.க., எதிர்த்து வருவதால், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது தே.மு.தி.க.,வுடன் கூட் டணி அமைத்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர் ஆகியோர் விரும்புகின்றனர். மற்ற கோஷ்டித் தலைவர்கள் தி.மு.க., கூட்டணியை விரும்பவில்லை.தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு, தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கருதுகிறார். அதனால் தான், தி.மு.க., கூட்டணியை அவர் விரும்பவில்லை.
ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆதரவு அளித்த காங்கிரசுடன் கூட்டணி இல்லை என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அறிவித்தார். ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்ட, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இல்லை என, தி.மு.க., வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை. மாறாக, தே.மு.தி.க.,வை பாராட்டி வருகிறது.மத்திய அரசை பிரச்னை அடிப்படையில் எதிர்ப்பதில், தி.மு.க., வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக, ராணுவத் துறையிலும், தொலைத்தொடர்புத் துறையிலும் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கு, கருணாநிதி கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன், முதல் நாளே கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, அமெரிக்கா செல்ல, "விசா' கொடுக்கக் கூடாது என, எழுதிய கடிதத்தில் தி.மு.க., - எம்.பி.,க்கள் கையழுத்திட்டிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கருணாநிதி எச்சரிக்கை விட்டிருந்தார். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், பிரதமர் பதவிக்கு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது அதிருப்திக்கு தி.மு.க., ஆளாகி விடக்கூடாது என்பதற்காகத் தான், மோடிக்கு ஆதரவாக கருணாநிதி குரல் கொடுத்து உள்ளார்.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., - காங்., கூட்டணி மீண்டும் மலருவதற்குரிய வாய்ப்பு, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் குறைவாக இருக்கிறது. தி.மு.க.,வை பொறுத்தவரையில், தே.மு.தி.க.,வை கூட்டணியில் இழுத்துக் கொண்டால் போதும் என கருதுகிறது. அதனால் தான், மத்திய அரசை எதிர்ப்பதில், தி.மு.க., வேகத்தை அதிகரித்துள்ளது. பா.ஜ., பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம், மோடி விசா கையெழுத்து விவகாரத்தில் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு எச்சரிக்கை என, மெல்ல மெல்ல பா.ஜ., ஆதரவான நடவடிக்கைகளில் தி.மு.க., மூக்கை நீட்டுகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் கூட, சில தொகுதிகளை கைப்பற்றக் கூடும் என கருத்து கணிப்பு வெளிவந்திருப்பது, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு உற்சாகம் அளித்துள்ளது.அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் நடுநாயகமாக காங்கிரஸ் கட்சியை வழி நடத்திக் கொண்டு செல்வதால் தான், காங்., கட்சிக்கு ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது என, ஞானதேசிகன் கருதுகிறார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருப்பதால், அதற்குள் அரசியல் அரங்கில், பல மாற்றங்கள் நிகழக் கூடும். காங்கிரஸ் கட்சியை தி.மு.க., கழற்றி விட்டால், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அல்லது காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: