சனி, 3 ஆகஸ்ட், 2013

சந்திரசேகர ராவ் மிரட்டல்: ஆந்திரா, ராயலசீமா அரசு ஊழியர்கள் வெளியேற வேண்டும் !

திருப்பதி: தெலங்கானா பகுதியில் இருந்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திடீரென மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 4வது நாளாக பந்த் நடப்பதால் ஆந்திராவில் பதற்றம் நீடிக்கிறது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக  அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் கடந்த 31ம் தேதி முதல் தொடர் பந்த் நடந்து வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திரா பாதுகாப்பு கமிட்டி மற்றும் மாணவர் அமைப்பினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டம், ஊர்வலம், தர்ணா போன்றவற்றில் ஈடுபட்டனர்.

ஒரு சில இடங்களில் நடந்த சிறிய வன்முறைகளை தவிர அமைதியான முறையிலேயே போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று 4வது நாளாக பந்த் நீடிக்கிறது. இன்று அதிகாலை முதல் ராயலசீமா, ஆந்திர பகுதிகளில் மாணவர்களும் போராட்ட குழுவினரும் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வரவில்லை.

ஸ்ரீகாகுளம் பொறியியல் கல்லூரி மாணவர்கள், பைக்கில் ஊர்வலமாக சென்று போராட்டத்துக்கு ஒத்துழைப்பு கேட்டு கடைகளை மூடச் சொல்லி வலியுறுத்தினர். பொனுகூட்டி வலசா பகுதியை சேர்ந்த பாலு, ராமுலு ஆகியோர் நேற்று மாலை ‘ஜெய் ஆந்திரா’ என்று முழக்கமிட்டபடி, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் காப்பாற்றினர்.

நெல்லூர் மாவட்டத்தில் காலை முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். விஜயநகரம் மாவட்டத்தில் சோனியா காந்தி, திக்விஜய் சிங், சந்திரசேகர ராவ் ஆகியோரது உருவபொம்மைகளை மாணவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று எரித்தனர். தொடர்ந்து 4வது நாளாக பந்த் நடப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், ஐதராபாத்தில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர், 'தெலங்கானாவை தனி மாநிலமாக பிரித்துள்ளதால் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உடனே இந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும்' என தெரிவித்தார். இது, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரசேகர ராவ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் நேற்றிரவு 7 மணி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மெழுகுவர்த்தியுடன் நகரில் மவுன ஊர்வலம் நடத்தி, சப்கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையில் பணிபுரியும் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதியை சேர்ந்த ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். சந்திரசேகர் ராவ், தனது பேச்சை வாபஸ் பெறும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானா எதிர்ப்பு போராட்டத்துடன், சந்திரசேகர ராவ் பேச்சுக்கு எதிராக அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் ஆந்திராவில் பதற்றமும் பரபரப்பும் நீடித்து வருகிறது. dinakaran,com

கருத்துகள் இல்லை: