
இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உடையில் வந்த தீவிரவாதிகள், இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர் என்றார். அந்தோணியின் பேச்சு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மறுநாள் நாடாளுமன்றத்தில் அந்தோணி மீண்டும் விளக்கம் அளித்தார். அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்தியாவின் பொறுமைக்கு எல்லை உண்டு என்று எச்சரித்தார். அந்தோணியின் மாறுபட்ட விளக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினமும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்று இரவு அதே பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீண்டும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இரவு 10.20 மணிக்கு இருதரப்புக்கும் இடையில் தொடங்கிய துப்பாக்கிச் சண்டை இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. எனினும் இரு தரப்பு சண்டையில் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலில் சிறு ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஆச்சாரியா தெரிவித்தார். நான்கு நாட்களுக்கு முன்னர் 5 வீரர்கள் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் அடங்குவதற்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நவாஸ் & மன்மோகன் பேச்சு நடக்குமா?
பாகிஸ்தான் & இந்தியா இடையே எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் சமீபத்தில் பதவியேற்றார். அவரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த மாதம் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் எல்லையில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளதால், இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பு நிகழுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக