ஞாயிறு, 12 மே, 2013

சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி.ஐ.,? வேண்டப்படாதவர்களுக்கு பாடம் படிப்பிக்க ஒரு அமைப்பா ?

கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி, மத்திய
அரசு ஆட்டம் கண்டு வருகிறது. ஊழல் செய்தோரை தண்டிக்கும் பேர் வழி என, சி.பி.ஐ., மூலம் வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிடுகிறது. ஆனால், குற்றவாளிகளை காப்பாற்றுவது போல், சி.பி.ஐ., விசாரணை உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு விசாரணை நிலையை, தாக்கல் செய்யுமாறு, சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இந்த அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் திருத்தினார். குறிப்பாக, குற்றவாளிகள் பற்றிய விவரங்களை, அறிக்கையிலிருந்து நீக்கி, விசாரணையை நீர்த்துப்போக செய்துவிட்டார் என, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., இயக்குனர் கூறியுள்ளார். நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.., சுதந்திரத் தன்மையை இழந்துவிட்டது. அரசியல்வாதிகளின் கைப்பாவை ஆகிவிட்டது என, புகார்கள் எழுந்துள்ளன. சி.பி.ஐ.,யின் இந்த நிலைக்கான காரணம் மற்றும் மாற்றங்கள் குறித்து, முன்னாள் அதிகாரிகளின் கருத்துகள் இதோ:  கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷனின் செயல்பாடே ஒருதலை பட்சமாகத்தானே இருந்தது என்று பேச்சு. சிபிஐயை விட பொறுப்புள்ள அரசியல்வாதிகளை பதவிக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டியவர்களே அப்படி என்றால் யாரை குற்றம் சொல்லி என்ன பயன்.


சி.பி.ஐ.,யிடம் ஒரு வழக்கு விசாரணைக்கு வரும் போது, அந்த வழக்கை எப்படி விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய, தனிக் குழு உள்ளது. அக்குழு, எடுக்கும் முடிவின் படி, விசாரணை நடக்கும். விசாரணை செய்ய வேண்டியவர், அரசு அதிகாரியாக இருந்தால், குறிப்பாக, இணைச் செயலர் அந்தஸ்துக்கு மேல் இருந்தால், சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி வாங்கப்படும். இத்தகுதிக்கு குறைவான அதிகாரியாக இருந்தால், அவருடைய முதன்மை அதிகாரியிடம், உடனடி அனுமதி வாங்கப்படும்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு அதிகாரியை தேவையில்லாமல் விசாரிப்பதாக புகார் வந்தால், அதுகுறித்து, சி.பி.ஐ., இயக்குனர், வழக்கு விசாரணை அதிகாரியிடம் தெரிவிப்பார். அதற்கு, உரிய பதிலும் பெறப்படும். ஆனால், எந்த கட்டத்திலும், விசாரணையை நிறுத்துங்கள் என, கூறமுடியாது.

இந்நிலையில், சி.பி.ஐ., நடத்தும் விசாரணைகள், அது தொடர்பான ஆவணங்கள், விசாரணை நிலை அறிக்கை ஆகியவற்றை, சி.பி.ஐ., சட்ட அலுவலரிடமே பகிர்ந்து கொள்ளமுடியும். வேறு எவரிடமும், விசாரணை ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியமில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான, விசாரணை நிலை அறிக்கையை, சட்ட அமைச்சர் திருத்தினார் என்பது, சட்டத்திற்கு புறம்பானது.

சி.பி.ஐ., விசாரணையில் அரசியல் தலையீடு மற்றும் ஆவணங்களை வெளியிட வேண்டும் என்பது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தெளிவான தீர்ப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அரசியல் தலையீட்டை தடுக்கும் வகையிலும், ஆவணங்களை வெளியிடுவது சி.பி.ஐ., உரிமை என்றும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விசாரணை அறிக்கையை, சட்ட அமைச்சர் திருத்தியது, சட்ட புறம்பானது.

ரகோத்தமன்,சி.பி.ஐ., முன்னாள் அதிகாரி

சி.பி.ஐ., தனித் தன்மையை இழந்துவிட்டது என்று கூறுவதே தவறு. சி.பி.ஐ., அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பு என்பது புதிதல்ல. இதற்கு, உள்ளங்கை நெல்லிக் கனி போல், பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.

போலீஸ் ஸ்டேஷனில் தொடரப்படும் எப்.ஐ.ஆர்., முதல் சி.பி.ஐ., தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகை வரை, விசாரணை
அதிகாரிகள் யாருக்கும் அடிபணியாமல், சுதந்திரமாக நடந்து கொள்ள வேண்டும் என, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் வலியுறுத்துகிறது. எனவே, தனித்துப் பார்க்க வேண்டிய அமைப்பாக சி.பி.ஐ., இல்லை.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் எழுந்துள்ள பிரச்னையைத் தொடர்ந்து, சி.பி.ஐ., போன்ற உயர் விசாரணை அமைப்புகளை கண்காணிக்க, லோக்பால், லோக் அயுக்தா போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது அவசியத் தேவையாக உள்ளது.

இந்தத் தலைமை அமைப்புகளும், உத்தரவிடும் அதிகாரத்துடன் இருக்கக் கூடாது. கண்காணித்து, ஆலோசனைகள் வழங்குவதாக இருக்க வேண்டும். அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்துவிட்டால், அதுவும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். "நரிக்கு நாட்டாண்மையை அளித்தால், கிடைக்கு இரண்டு தலை கேட்கும்' என்பார்கள். அதுபோல, அதிகாரக் குவியலைக் கொண்ட அமைப்புகளையும் உருவாக்கி விடக் கூடாது.

ஒவ்வொரு சம்பவத்திலும் கற்றுக் கொண்டே வருகிறோம். அதுபோல தான், இப்பவும் கற்றுக்கொண்டுள்ளோம். இந்தியா போன்ற பெரிய ஜனநாயக அமைப்பில், திருத்தங்களை கொண்டு வருவதற்கு கால அவகாசம் தேவை. சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளை கண்காணிக்க, புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

கோபால்சாமி,முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதில், சி.பி.ஐ., அறிக்கையை, மத்திய சட்ட அமைச்சர் திருத்தியது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோர்ட் அளிக்கும் தீர்ப்பே முக்கியமானது.

பொதுவாக, தனித்தன்மைமிக்க மத்திய புலன் விசாரணை அமைப்பின் மீது, குற்றச்சாட்டுகள் எழுவது வருத்தமாக உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலை விசாரித்து வரும், சி.பி.ஐ., அதிகாரி, மத்திய சட்ட அமைச்சர் அழைப்பை ஏற்காமல், அவரது கடமையை செய்திருக்க வேண்டும். ஆனால், சட்ட அமைச்சர் அழைப்பை ஏற்று, சி.பி.ஐ., அதிகாரி சென்றது தவறு.தற்போது, அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள், தங்களது சட்டப்பூர்வ கடமையை முறையாகச் செய்ய தவறுகின்றனர். கடமை தவறிவிட்டு, அதற்கு சாக்கு, போக்கு சொல்வது ஏற்புடையதல்ல.

"தானாக பழுக்க வேண்டும். இல்லையேல் தடிகொண்டு பழுக்க வைக்க வேண்டும்,'' என்ற பழமொழியுண்டு.அதுபோல, அதிகாரிகள் கடமையை செய்ய வேண்டும். இல்லையேல், கடுமையான நடவடிக்கைகள் மூலம், கடமையை செய்ய வைக்க வேண்டும் என்ற, நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விசாரணையிலும் இது வெளிப்பட்டுள்ளது. தன்னிச்சையான, சுதந்திரமான மத்திய அமைப்பு மீது, இப்படியொரு புகார் வந்துவிட்டதே என, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற, குற்றச்சாட்டுகள் அனைத்தும், அமைப்பின் மீதும் வந்து கொண்டு தான் உள்ளன. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது.

சி.பி.ஐ., அறிக்கையை, சட்ட அமைச்சர் திருத்திவிட்டார் என்பதைக் கொண்டு, சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்துவது தேவையற்றது.

விட்டல்,முன்னாள் தலைவர்,மத்திய ஊழல் தடுப்புக் குழு

நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பாக சி.பி.ஐ., உள்ளது. அதன், சுதந்திரத் தன்மை, அரசியல்வாதிகளாலோ, பிற உயர் அரசு அமைப்புகளினாலோ பாதிக்கப்படக் கூடாது. ஆனால், சி.பி.ஐ., அதிகாரிகள் செயல்படும் விதம், அரசியல்வாதிகளுக்கும், பிற உயர் அமைப்பு பிரதிநிதிகளுக்கும், கொத்தடிமை போல் உள்ளது.

மிக முக்கியமான வழக்கை விசாரித்து, நாட்டுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க வேண்டும். பெரும் இழப்பை ஏற்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக, சி.பி.ஐ.,யிடம் வழக்குகள் ஒப்படைக்கப்படுகின்றன. பல நேர்மையான அதிகாரிகள் மூலம், சி.பி.ஐ., பெருமைப்பட்டுள்ளது. பல அரிதான வழக்குகளில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால், தற்போதைய செயல்பாடுகள், பெரும் அவமானத்தை சி.பி.ஐ.,க்கு ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ., இயக்குனர் அந்தஸ்தில் இருப்பவர்களே, அரசியல்வாதிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுகின்றனர். போபர்ஸ் வழக்கில், சி.பி.ஐ., செயல்பாடுகள், அரசியல்வாதிகளின் தலையீட்டால் முடக்கப்பட்டது.

இதுபோல தான், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கிலும், அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்யவிருந்த, வழக்கு தொடர்பான அறிக்கையை சட்ட அமைச்சர், திருத்தியுள்ளார்.இந்த அவல நிலையைப் போக்க, சி.பி.ஐ., அமைப்பை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக உருவாக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதன்படி, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக, சி.பி.ஐ., உருவாக்கப்படும்போது, சி.பி.ஐ., அமைப்பின் சுதந்திரத் தன்மை உறுதிப்படுத்தப்படும். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வேலு,செயலர், ஊழல் எதிர்ப்பு இயக்கம், கோவை பிரிவு

கருத்துகள் இல்லை: