புதன், 15 மே, 2013

தீம் திருமணங்கள் ! வழக்கமான கல்யாணங்களை Glamour ஆக்கியிருக்கிறது

ஹைதராபாத் திருமண நுழைவாயில்

ண்மையாகவே அது வித்தியாசமான திருமணம் தான். அந்தத் திருமண வரவேற்பிற்காக மண்டப அலங்காரங்களுக்கு மாத்திரம் 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பார்கள். தமிழகத்தில் வாழும் பரம்பரை தமிழர்களில் ஒருவரான என் நண்பனின் திருமணம் தான் அது. ஆனால் திருமணத்தில் தமிழின் அடையாளம் எதுவும் இல்லை. திருமண வரவேற்பு முழுக்கவும் வடநாட்டு பாணியில் இருந்தது. உண்மையில் அது திருமணம் மாதிரியே இல்லை. ஏதோ சினிமா செட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது. இதன் பெயர் தான் “தீம் மேரேஜ்” அதாவது ஒரு கரு அல்லது குறிப்பிட்ட வகை அழகியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான திருமணம் என்று பொருள் கொள்ளலாம்.
திருமணம் என்றால் வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாகவும், ஏழைகள் எளிமையாகவும் செய்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பணக்காரர்களின் காசு வெறுமனே ஆடம்பரம் என்று இல்லாமல் இப்படி தீம் அடிப்படையில் ’அழகுணர்ச்சியுடன்’ அவதாரமெடுத்திருக்கிறது என்பதை இந்தத் திருமணத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. பிறகென்ன, இந்த தீம் திருமணங்கள் குறித்து தொழில்முறை விற்பன்னர்களிடம் விசாரித்த போதுதான் இந்த தனி உலகு குறித்து தெரிய வந்தது.

பொதுவாக திருமணம் என்றாலே, வாழை மரம் கட்டி வரவேற்கும் மண்டப வாசல், சந்தனம் தெளித்து வரவேற்பு, நீலம் அல்லது சந்தன நிற துணியை கட்டி புகைப்படத்திற்கு பின்னணியாக ஆக்கப்பட்ட மேடை, சம்பிரதாய சடங்குகள், ஐயர், புகைப்படங்கள், வீடியோக்கள் என்று எல்லா திருமணங்களும் இப்படி ஒரே மாதிரியாக தொடங்கி, முடிவடைந்து விடுகின்றன. இவற்றில் மற்றவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகிறதே என்ற மனக்குறை பணக்கார வர்க்கத்தை வாட்டியிருக்கும் போலும்.
‘பத்து இலட்ச ரூபாய் காரென்றாலும் பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிய அதே காரை நாமும் வாங்க முடியுமா? பிறகு அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? சாப்பிடும் இட்லியிலே 100 வகைகள் வந்துவிட்டன, போடும் உடைகள் மட்டுமல்ல உள்ளாடைகளிலும் கூட, வித்தியாசமும் தனித்துவமும் வேண்டும் என்று விளம்பரங்கள் கூறும்போது திருமணத்தில் வித்தியாசம் வேண்டாமா?‘
திருமணம்
இன்று இருபதுக்கும் மேற்பட்ட ‘தீம்கள்‘ வந்துவிட்டன. திருமணத்தின் போது மணமக்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் தொடங்கி, மணமக்களின் பெற்றோர் எப்படி காட்சியளிக்க வேண்டும், மண்டபம் எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும், திருமணத்தில் எப்படி முகபாவனைகளை வைத்திருக்க வேண்டும், உறவினர்களை எந்த முறையில் வரவேற்க வேண்டும் என்பது வரை தீர்மானித்து சொல்லிக் கொடுக்க இன்று திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.
மேற்சொன்ன திருமணத்தில் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நண்பனின் குடும்பத்தார் வித்தியாசத்தை காட்டியிருந்தனர். இதற்கு கரு “ஜோதா அக்பர்”. அக்பர் உண்மையில் ஜோதா எனும் ஹிந்து மகராணியை காதலித்தாரா என்பதல்ல பிரச்சினை. இசுலாமியரான அக்பருக்கும் ஹிந்துவான ஜோதாவுக்குமான காதலை பாலிவுட்டில் படமாக எடுத்தார்கள். ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் நடித்த அந்த வெற்றிப்படத்தில் அவர்கள் அணிந்த உடைகள், மாட மாளிகை அலங்காரங்கள் தான் இந்த திருமண கருவிற்கான அடிப்படை. குறிப்பிட்ட வெற்றிப்படத்தில் கதாநாயகிகள் கட்டும் சேலை அந்த ஆண்டு தீபாவளி சேலை டிசைனில் பிரபலமாக்கப்படுவது போலத்தான் இதுவும். இருந்தாலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிவீதம் அதிகரித்திருப்பதால் டிசைன் டிசைனாகப் புடவை என்பதிலிருந்து, டிசைனை டிசைனாக கல்யாணம் என்பதை நோக்கி தேசியப் பண்பாடும் வளர்ந்திருக்கிறது.
‘ஜோதா அக்பர் தீம்‘ (கரு) என்பதால், மணமேடை அந்த காலத்து அரசவை மாதிரி இருந்தது; பெண்ணை பல்லக்கில் வைத்து மேடைக்கு தூக்கி வந்தார்கள்; மணமகன் அக்பர் போல் வேடமணிந்து உட்கார்ந்திருந்தார்; மணமகள் அந்தக் காலத்து ராணியை போல் முக்காடு எல்லாம் போட்டு, நிறைய நகைகள் அணிந்திருந்தார்; மணமகனின் தந்தை வட நாட்டு ஷெர்வாணியை போன்ற மேல் அங்கியை அணிந்திருந்தார். நண்பனின் மாமா அதை உடுக்க மறுத்துவிட்டதால் கோட் சூட் போட்டிருந்தார்; அந்த மண்டபத்தில் அக்பர் அவையில் நுழைந்த அந்நியர் போல் காட்சியளித்தார். உள்ளே நுழையும் போது சாமரம் வீசுபவர், சந்தனம் தெளிப்பவர், பழச்சாறு கொடுப்பவர் என அனைவரும் முகலாயர் காலத்திற்கு அழைத்துச் சென்றனர். வந்திருந்த விருந்தினர்களுக்கும் உடையை மாற்றி விடுவார்களோ என்று நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஜோதா அக்பர் தீமுக்கு விருந்து எப்படி இருக்கும், அக்பர் அசைவம் ஆச்சே என்று யோசித்தபோது அதில் மட்டும் சம்பிரதாயமான சைவத்தை கைவிடவில்லை. சரக்கடிப்பவன் கூட சாக்கனாவில் சைவத்தை கைவிடுவதில்லையே. இருந்த போதிலும் அக்பர் தீம் என்பதால், வட நாட்டு சைவ உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. ஜோதா அக்பர் கரு கொண்ட திருமணம் என்றால் என்ன, வருபவர்கள் நம் மக்கள் தானே? விருந்து பரிமாறுமிடம் நாமே எடுத்து உண்ணும் சுயசேவை மாதிரியை கொண்ட “பஃபே”. (“பஃபே” என்பது பிரெஞ்சு வார்த்தை, அதற்கு அர்த்தம் “உணவு”. இந்த முறையில் மைசையில் வைத்திருக்கும் உணவு வகைகளை நாமே எடுத்து உண்ண வேண்டும்).
இது அரண்மனையல்ல, ஹைதராபாத்தில் திருமணம் ஒன்றின் நுழைவாயில்.
எல்லாம் வடநாட்டு உணவுகள், சில உணவை தவிர பல உணவுகள் நமக்கு பழக்கமில்லாதவை. பானி பூரி முதல் பாவ் பாஜி, வடா பாவ், ரோட்டி தால், லஸ்ஸி, ராஜ்மா, பாலக் எல்லாம் ஒவ்வொரு நிறம் ஒவ்வொரு சுவை. வாய்க்குள் உணவின் பெயரும் நுழையவில்லை, உணவும் நுழையவில்லை.
அக்பர் காலத்தில் ஸ்பூன், முள் கரண்டியால்தான் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கவுரவம் கருதி ரொட்டியை அதை வைத்துப் பிய்த்து சாப்பிட முனைந்த ஒருவர், ரொட்டியுடன் முதலாம் பானிப்பட் போர் நடத்தி தோற்றார். பிறகு, அந்நிய ஆயுதத்தை துறந்து தன் சொந்த ஆயுதமான கையில் அதை பிய்த்து வாயில் போட்டபின், ஒரு போரில் நாட்டை பிடித்த மகிழ்ச்சியை அடைந்தார்.
உணவு வகையில் பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தான், உத்தரபிரதேஷ் என்று சகல ஊர்களும் இணைந்ததால் அதை புதிதாக சாப்பிட்ட நம் மக்கள் வயிற்றை பதம் பார்க்கத் தொடங்கி விட்டது. பெண்ணின் அம்மாவுக்கு சர்க்கரை வியாதியாம். என்ன ஏதென்று தெரியாமல் பார்க்க அழகாய் தெரிந்த ஏதோ ஒன்றை இரண்டு துண்டு வாயில் போட்டவுடன் மயக்கமாகிவிட்டார். தீம் மேரேஜ் காண்டிராக்டில் ஆம்புலன்ஸ் சேவை சேர்க்கப்படவில்லை என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் பதறிக்கொண்டிருந்தார்கள்.
திருமண மேடை
நண்பனின் குடும்பத்தினர் எங்கே குண்டு வெடித்தாலும் அதற்கு இசுலாமியர்கள் தான் காரணம் என்று நம்பும் தேசபக்தர்கள். இருந்தாலும் ஜோதா அக்பர் தீமை தெரிவு செய்திருக்கிறார்கள் என்றால், மதச்சார்பின்மை நமது பண்பாட்டில் எவ்வளவு ஆழமாக வேரோடியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
இது சினிமா அல்ல, திருமணம் ஒன்றின் மணமேடை !
இருப்பினும், ஒரு கரு என்று எடுத்துக்கொண்டால், வடிவம் உள்ளடக்கம் இரண்டுமே பொருந்தி போக வேண்டுமல்லவா? மணமகன் இந்து, மணமகளோ முஸ்லிம் இல்லை என்பது மட்டுமல்ல, குறைந்த பட்சம் சாதி கூட வேறு இல்லை. சாதிக்குள் எந்த உட்பிரிவு என்பது வரை சமரசம் கிடையாது.
இன்று இது போன்ற தீம்கள் எத்தனையோ வந்துவிட்டன! ஜோதா அக்பர் தீமோடு, அலங்காரத்தில் அதிரடி செய்யும் இங்கிலாந்து அரச பரம்பரை தீம், தசாவதார தீம் (தசாவதாரம் படம் போல் மணமகன் பத்து வேடங்களில் மேடையில் தோன்றுவார் என நினைக்க வேண்டாம், மேடையின் பின்னனியில் விஷ்ணு எடுத்த தசாவதார சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்), கடற்கரை ஓரம் திருமணம் செய்து கொள்ளும் பே தீம், வடநாட்டு தீம், பஞ்சாபி தீம், ஆந்திரா தீம், செட்டிநாட்டு தீம், என்று ‘தீம்’கள் பல.
தசாவாதர ‘தீம்’மில், வரவேற்பவர்கள் பார்ப்பனர்கள் போல் இருப்பதும், பஞ்சாபி ‘தீமி’ல் பாங்க்ரா நடனம் ஆடுவதும், கடற்கரை ‘தீம்’மில் நீச்சல் உடையில் இருப்பதும் அந்த ‘தீம்’களின் சிறப்புகள். இந்த “தீம்”களில் சில உதிரியாக மற்ற திருமணங்களிலும் நுழைந்துவிட்டன. மருதாணி இட்டு கொள்ளும் “மெகந்தி அலங்காரம்” சிற்றுண்டிகளாக பரிமாறப்படும் பானி பூரி, மணமகன் உடுத்திக்கொள்ள ஷெர்வானி எனும் வடநாட்டு உடை போன்றவற்றை சொல்லலாம்.
முன்னர் பெரும் நிலவுடைமையாளர்களாக இருந்தவர்கள், ஊரையே கூட்டி பத்து நாள் திருமணம் நடத்தியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கரகாட்டம் முதல் கர்நாடக இசைக்கச்சேரி வரையில் பெரிய்ய செட்டுகளைக் கொண்டு வந்து இறக்குவதும், எத்தனை பேருக்கு சோறு போட்டோம் என்பதும்தான் அன்று ஆடம்பரத்தின் இலக்கணமாக இருந்தது. இதைத் தாண்டி திருமணங்களில் புதுமை எதுவும் இருந்ததில்லை.
மெகந்தி
மேலிருந்து கீழ் வரை பரவும் மெகந்தி ! காசுக்கேற்ற அழகு !!
புதிய பொருளாதாரக் கொள்கையில் புதுப் பிறப்பெடுத்திருக்கும் முதலாளித்துவம் முன்னைப்போல பத்து நாள் திருமணம் நடத்தாவிட்டாலும், ஒரே நாளில் பணத்தை வாணவேடிக்கை விடுகிறது. அதை வித்தியாசமாக செய்வது எப்படி என்பதுதான் இவர்களது கவலை. திருமணத்திற்கான இந்த புதுமைத் தேடலை நுகர்வுக் கலாச்சாரத்தின் வாயிலாக வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாற்றிவிட்டார்கள்.
எழுதும் பேனாவிலும் பார்க்கும் தொலைக்காட்சியிலும், பேசும் செல்பேசிலும் இன்று என்ன விசேசம் என்று பார்ப்பவர்களை இந்த தீம் திருமணங்கள் சுலபமாக கவர்ந்து விடுகின்றன. பணக்காரர்களைப் பொறுத்தவரை நுகர்வுக் கலாச்சாரத்திற்காக செலவழிப்பதை அத்தியாவசியம் என்றே கருதுகிறார்கள். தான் பெறாத வசதியை இந்தக்காலத்தில் தமது குழந்தைகள் பெறுவதை முன்னேற்றமாக பார்க்கிறார்கள்.
சாதி,மத பிற்போக்குத் தனங்களில் இம்மியவளவு கூட விட்டுக் கொடுக்காதவர்கள்தான் இத்தகைய ஆடம்பர புதுமைத் திருமணங்களை செய்து கொள்வதோடு அப்படி செய்து கொண்டதையும் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். எனினும் கொஞ்ச காலத்திலேயே இந்த தீம்கள் கசந்து போய் புதிய தீம்கள் வரலாம். ஆனால் விசயமென்னவோ, கருப்பொருளுக்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதுதான்.
கடந்த பிப்ரவரி – 2013 மாதம் மத்திய அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த, மராட்டிய மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் தனது மகன் மற்றும் மகளுக்கு ஒரு ஆடம்பர திருமணத்தை நடத்தினார். ஆனால் அந்த ஆடம்பரம் உங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
மும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சிப்லன் பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கோட்டை போன்ற செட் போடப்பட்டிருந்தது. ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்படி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விருந்தில் வெட்டப்பட்ட ஆடுகள், கோழிகள், வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மதிப்பு, ஆபரணங்கள் மற்றும் மது வகைகளைப் பற்றிய கணக்கை மத்திய வருமான வரித் துறையினர் கவனமாக ஆராய்ந்து வந்தாலும் கணக்கு போட்டு முடியவில்லை.
இதே மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதிதான் விவசாயிகளின் தற்கொலைக்கும் புகழ் பெற்றது. இந்தப் பகுதியில் நடக்கும் திருமணங்களும் கூட நிறைய மாறியிருக்கின்றன. பல கிராமங்களில் திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குரிய விசேசமாக இல்லை. தனியாகத் திருமணம் நடத்தி கடன் படுவது, தற்கொலைக்குரிய முக்கிய காரணமாக இருப்பதால், பல கிராமங்களில் யாரும் தனியே திருமணம் நடத்தக்கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடே போட்டிருக்கிறார்கள். பல திருமணங்களை சேர்த்து ஒரே மேடையில் நடத்துகிறார்கள். திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் இவ்வளவு பேருக்கு மேல் போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்.
படிக்காத விவசாயிகள் மத்தியில் வறுமையின் காரணமாகப் பிறப்பெடுத்திருக்கும் இந்த ‘தீம்‘, குடும்பத்தின் அடித்தளமான திருமணத்தை, தனிநபர் விவகாரம் என்பதிலிருந்து கூட்டுத்துவம் நோக்கி முன்னேற்றியிருக்கிறது. படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர் மத்தியில், மிதமிஞ்சிய பணத்திமிர் பெற்றெடுத்திருக்கும் தீம் மேரேஜ்களோ, அக்பர், பாபர், சேர சோழ பாண்டியன் என்று பின்னோக்கிச் செல்கின்றன. இருப்பினும் இதுதான் முன்னேற்றம் என்று அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: