வெள்ளி, 17 மே, 2013

கிரிக்கெட் சூதாட்டம்:கடிகாரத்தை திருப்புவது, சிறிய டவலை பேண்ட் பாக்கெட்டில் திணிப்பது என புக்கிகளுக்கு சிக்னல்


புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள்,  தங்களது கைக்கடிகாரத்தை திருப்பியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர். < இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.


முதல் சூதாட்டம் கடந்த 5 ஆம் தேதியன்று புனே வாரியர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றபோது, ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 2 ஆவது ஓவரின்போது சந்திலா 14 ரன்களை வாரி வழங்கி உள்ளார்.

குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வாரி வழங்குவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு பலவிதமாக சமிக்ஞைகளை கொடுத்துள்ளனர்.

தங்களது கைக்கடிகாரத்தை திருப்புவது, கையில் உள்ள சிறிய டவலை தங்களது பேண்ட் பாக்கெட்டில் திணிப்பது என புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் புக்கிகள் அடுத்து வரவிருக்கும் ஓவரை அடிப்படையாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பங்கு பணம், ஹவாலா முறையில் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சூதாட்ட பின்னணியில் தாவூத்?

இந்த கிரிக்கெட் சூதாட்ட பின்னணியில் 'டி' கம்பெனி ( 'D' Company) என அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம் கோஷ்டியினருக்கு தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,அதற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை எனக் கூறிய டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், அதே சமயம் மும்பை நிழலுக கோஷ்டியினருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சந்தாலியா மற்றும் சவாண் ஆகியோரை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு கூறி, ஶ்ரீசாந்த் அவர்களை சம்மதிக்க வைத்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சூதாட்டத்தில் மேலும் பல புக்கிகள் கைது செய்யப்பட உள்ளதாகவும், அதே சமயம் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இனி கைது செய்யப்படமாட்டார்கள் என்றும் கூறிய அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் மட்டும்தான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் யாரும் இதில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.
மகேந்திர சிங் தோனிதான் சதி செய்து தனது மகனை சிக்க வைத்து விட்டதாக ஶ்ரீசாந்த் தந்தை குற்றம் சாட்டியுள்ளாரே? எனக் கேட்டபோது, " தோனியா கைக்குட்டையை ஶ்ரீசாந்தின் பேண்ட் பாக்கெட்டில் வைத்தார்?" எனக் கேள்வி எழுப்பினார் நீரஜ் குமார்.
'மாஸ்டர் மைன்ட்'கள் வெளிநாடுகளில்...
இந்த சூதாட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் ( மாஸ்டர் மைன்ட்'கள்) வெளிநாடுகளில் உள்ளதாகவும் நீரஜ் குமார் தெரிவித்தார்.

vikatan.com6+ Razia Begum , Ramnad

கருத்துகள் இல்லை: