புதன், 17 ஏப்ரல், 2013

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்

கரு.முத்து
பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டிருக்கிறது.முதுபெரும் அறிஞர்களையும், தமிழ்ப் புலவர்களையும் உருவாக்கிய இந்த பல்கலைகழகத்தில்தான் திராவிட இயக்கத்தலைவர்களில் பெரும்பாலோனோர் உருவானார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் கிளம்பியபோது இங்கு படித்த மாணவர்கள் காட்டிய கடுமையான இந்தி எதிர்ப்பு ராஜேந்திரன் என்ற மாணவரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கியது. வரலாறு, இசை, பொறியியல், சமூகம், பொருளாதாரம்,வேளாண்மை,மருத்துவம்,கலை,விளையாட்டு என்று எல்லா துறைகளும் இயங்குகின்றன. தற்போதைய நிலையில் 12,600 ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.முப்பத்தைந்தாயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். இங்கு இயங்கும் தொலைதூர கல்வி நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.இவ்வளவு பெருமைக்குரிய எம்.ஏ.எம் ராமசாமிக்கு சொந்தமான இந்த பல்கலைகழகம் தற்போது அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. அது ஏன்? அரசுடைமையாக்கப்பட்டதன் காரணம் என்ன?

முதலில் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வரலாறு...

செட்டிநாடு பகுதியில் அரசோட்சிக் கொண்டிருந்த அண்ணாமலை செட்டியார் வட மாவட்டங்களில் கல்வியின்மை மற்றும் மேல்படிப்புக்கு வசதி இன்மை ஆகியவற்றை அறிந்து, அதனை போக்க சிதம்பரம் வந்து தன்னுடைய சொத்திலிருந்து சில லட்சங்களை செலவழித்து  மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியை தொடங்கினார்.அந்த நேரத்தில் சுவாமி சகஜானந்தர் சிதம்பரத்தில் நந்தனார் கல்விக் கழகத்தை தொடங்கி கல்விக் கூடம் ஆரம்பித்தார். இரண்டுக்கும் போட்டி வந்துவிடக் கூடாது என்பதற்காக இருவரும் சந்தித்து பேசி நந்தனார் கல்வி கழகம் பள்ளிப்படிபையும், மீனாட்சிக் கல்லூரி மேல் படிப்பையும் வழங்குவது என்று முடிவெடுத்து செயல்படுத்தினார்கள்.

ஒரு சில மேல் படிப்புகளோடு துவங்கிய மீனாட்சி கல்லூரியின் சேவை அதிகரித்து இன்னும் அதிக மக்களை சென்றடைய ஆரம்பித்தது.அதனால் இன்னும் பெரிதாக்க விரும்பினார்.அதன் விளைவாக இருபது லட்சம் ரூபாயையும் ஊராட்சி பிரதிகளிடம் ஒப்படைத்து கல்லூரியை பல்கலைகழகமாக ஆக்கினார்.1928 ஆம் ஆண்டு மீனாட்சி கல்லூரி அண்ணாமலை பல்கலைகழகமாக உருவெடுத்தது. இதில் அண்ணாமலை செட்டியார் அவரது காலத்துக்குப் பின் அவரது வாரிசுகள் ஆகியோருக்குத்தான் எல்லா அதிகாரங்களும் இருக்கும் வகையில் பல்கலைகழக சட்டம் உருவாக்கப்பட்டது.அந்த சட்டத்தில்தான் தமிழகத்தை சேராத வெளி மாநிலலங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயில அனுமதி இல்லை என்ற விதியும் இருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார், ராமசாமி செட்டியார் என்று செட்டியார் குடும்பத்தினர் பல்கலைகழகத்தின் இணைவேந்தராக சர்வ அதிகாரம் படைத்தவர்களாக விளங்கினார்கள்.முந்தைய இருவர் இணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பல்கலைகழகம் சிறப்பான முறையில் கல்விச்சேவையை அளித்து வந்தது மறுப்பதற்கில்லை.

முத்தையா செட்டியாரின் காலத்தில் பல்கலையை அரசுடைமையாக்க முயற்சித்தார் அப்போதைய முதல்வரான எம்.ஜிஆர். இதை தெரிந்துகொண்ட முத்தையா செட்டியார், எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து பல்கலைகழகம் உருவாக்கப்பட்டதன் காரணத்தை விளக்கி, கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலையை எடுத்துச் சொல்ல,அப்போது அரசுடைமையாக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அபபடி காப்பாறிய பல்கலையையைத்தான் இப்போது இழந்திருக்கிறார் ராமசாமி செட்டியார்.

இணைவேந்தராக ராமசாமி செட்டியார் வந்தும் வெகு காலம் வரை ஏழை மாணவர்களின் கல்விக்குத்தான்
முக்கியம் கொடுத்தார். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து தான் கல்விச்சேவை வணிகமாக மாறத்தொடங்கியது.  அண்ணாமலை பல்கலையில் பணிபுரிந்த சில கல்வியாளர்கள்,நிர்வாகிகள் சிலரால்தான் அப்படிப்பட்ட நிலைமை உருவானது.

தாங்கள் காசு பார்க்க செட்டியாரின் சேவை மனதை மாற்றினார்கள்.அதுவரை பலகலைகழகத்தை கல்வி நிலையமாக நிணைத்திருந்த எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார், கல்வியாளர்களின் கலகத்திற்கு பிறகு ஒரு வணிக நிறுவனமாக ஆக்கிக் கொண்டார்.

ஒவ்வொரு படிப்பிற்கும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் இவ்வளவு தொகை என்று நிர்ணயிக்கபட்டது அப்போதுதான்.
மிகக் குறைந்த தொகையே அப்போது நிர்ணயிக்கப்பட்டது. காசு கொடுத்தால் கல்விக்கு சீட், காசு கொடுத்தால் நிச்சயம் வேலை என்று உறுதியாக தெரிந்ததால் அதனை வாங்கி விற்க புரோக்கர்கள் நடமாட்டம் ஆரம்பித்தது.புரோக்கர்கள் அதிகமாக ஆக விலையும் உயர்ந்து கொண்டே போனது.இவையெல்லாம் 2006 க்கு பிறகு உச்சகட்டத்தை அடைந்தது.அதன் விளைவுதான் இப்போது செட்டியார் குடும்பத்தின் கையை விட்டு பறிபோகிறது.

புரோக்கர்கள் ராஜ்ஜியமாகிப்போன அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2006 நிலவரங்கள் அதன் விளைவுகள் நாளை...

vikatan.com

கருத்துகள் இல்லை: