வெள்ளி, 19 ஏப்ரல், 2013

காவல்நிலைய வளாகத்தில் 2 பேர் வெட்டிக் கொலை! திமுக செயற்குழு உறுப்பினர் கொலைவழக்கில் பிணையில் இருந்தவர்கள்

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கொலை வழக்கில் தற்போது பிணையில் உள்ள இருவர் பூம்புகார் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்த போது, காவல்நிலைய வளாகத்திலேயே அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம் மேலையூரில் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன் கொலை வழக்கில் பிணையில் உள்ள ரவி மற்றும் ராஜேந்திரன் இருவரும் தினமும் பூம்புகார் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை இருவரும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பும்போது, ஒரு மர்ம கும்பல் திடீரென அங்கே நுழைந்து காவல்நிலைய வளாகத்திலேயே அரிவாளால் வெட்டி ரவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். அதற்கு சற்று நேரம் முன்பாக கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்ற ராஜேந்திரன், காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, அவரையும் ஒரு கும்பல் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர். இருவர் கொலை தொடர்பாக தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே சடலங்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறது.

கருத்துகள் இல்லை: