ஞாயிறு, 18 மார்ச், 2012

சொந்த காசில் தொந்தரவை வாங்கிய ஜெயா

ஜெயலலிதாவுக்கு சங்கடம் கொடுக்க இலங்கை வி.ஐ.பி.களின் விசிட்கள்!

Viruvirupu
“இலங்கை வி.ஐ.பி.கள் தமிழக விஜயத்தை மேற்கொள்ளும்போது, அது குறித்து தமிழக அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்” என்று இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் சிங், “இலங்கை வி.ஐ.பி.களின் வருகைகளுக்கு ஏற்பாடு செய்யும்போது, அது குறித்து மாநில அரசுக்கும் அறிவிக்குமாறு மத்திய அரசு அதிகாரிகளை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மார்ச் 7-ம் தேதி எழுதிய கடித
த்துக்கே பிரதமர் இன்று பதில் கொடுத்திருக்கிறார். இலங்கை வி.ஐ.பி.-கள் தமிழக விஜயத்தை மேற்கொள்ளும்போது, அது குறித்து தமக்கு (மாநில அரசுக்கு) தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை வி.ஐ.பி.கள் அடிக்கடி தமிழகம் வருவதை ஊக்குவிக்க கூடாது எனவும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். “இலங்கை வி.ஐ.பி.கள் அடிக்கடி தமிழகம் வருவதை ஊக்குவிக்க கூடாது” என்ற பகுதியை பிரதமர் தனது பதிலில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.
இப்போது டில்லியில் இருந்து பந்தை சாமர்த்தியமாக தமிழக அரசின் மைதானத்தில் வீசிவிட்டிருக்கிறார்கள். இலங்கை வி.ஐ.பி.கள் தமிழகம் வரும்போது ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால், தமிழக அரசே அதற்கு பொறுப்பு என்ற நிலை இது. ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு, தமிழக அரசு இலங்கை வி.ஐ.பி.களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வி.ஐ.பி.கள் தமிழகம் வரும்போது, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அமைப்புகள் சில வெவ்வேறு வழிமுறைகளை கையாள்வது வழக்கம். கருப்பு கொடி காண்பிப்பதில் இருந்து, கன்னத்தில் அறைய முயற்சிப்பது வரை அமைப்புக்கு அமைப்பு வழிமுறைகள் வேறுபடும்.
இதுவரை காலமும், இலங்கை வி.ஐ.பி.களுக்கு என்ன நடந்தாலும், “அவர் வருவதே எமக்கு தெரியாது” என்று தமிழக அரசால் கூறி, பொறுப்பு முழுவதையும் டில்லியின் தலையில் போட்டுவிட முடியந்தது. அதனால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள்மீது தமிழகத்தில் சட்ட நடவடிக்கைகள் ஏதும் பாய்ந்ததில்லை.
இனி, தமிழக அரசுக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு அவர்களை தமிழகம் அனுப்பி வைக்கப்போகின்றது டில்லி.
இதிலுள்ள மற்றொரு விவகாரம், இலங்கை வி.ஐ.பி.-களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில அமைப்புகள், அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவை. அ.தி.மு.க.-வுக்காக பிரசாரம் செய்த ஆட்களும் உள்ளார்கள். இலங்கை வி.ஐ.பி.களுக்கு தமிழக அரசே பாதுகாப்பு கொடுக்கும்போது, இவர்கள் எந்தளவுக்கு தமது எதிர்ப்பைக் காட்டத் துணிவார்கள் என்பதை, அடுத்த இலங்கை வி.ஐ.பி. வரும்போதுதான் தெரிந்துகொள்ள முடியும்

கருத்துகள் இல்லை: