செவ்வாய், 20 மார்ச், 2012

கூடங்குளத்தில் மின்உற்பத்திக்கான பணிகள் துவக்கப்பட்டன

திருநெல்வேலி:முதல்வர் ஜெயலலிதா உத்தரவை தொடர்ந்து கூடங்குளத்தில் மின்உற்பத்திக்கான பணிகள் நேற்று துரிதமாக துவக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் கட்டப்பட்டுள்ளன. முதலாவது அணுஉலை 99 சதவீத பணிகள் நிறைவடைந்து உற்பத்திக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அணுமின்நிலையத்திற்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டங்களை துவக்கினர்.
அணுஉலையை மூடியே ஆகவேண்டும் என்ற கோரிக்கையில் இருந்தனர்.தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை அதிகரித்தது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால் தேர்தல் விதிமுறைகளால்கூடங்குளத்திற்கான முக்கியத்துவம் குறைந்தது. தமிழக கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் மார்ச் 2ம் தேதி கூடங்குளம் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சென்றுவந்தார். சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் மாலை 5 மணிக்கு தென்மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.
மார்ச் 18 மாலை நெல்லை கலெக்டர் செல்வராஜ், உதயக்குமார் தரப்பினரிடம் போனில் பேசினார். கடைசியாக பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பளிகப்படுவதாகவும் விருப்பமுள்ளவர்கள் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. உதயக்குமார் தரப்பினர் இதற்கு சம்மதிக்கவில்லை. தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே தங்களை "அழைக்கும்' அதிகாரிகளின் முயற்சி உள்ளே அடைப்பதற்காக இருக்கலாம் என்பதை புரிந்துகொண்டவர்கள் நாங்கள் இரவில் கூடிப்பேசி முடிவை சொல்கிறோம் என தட்டிக்கழித்தனர்.நேற்றுஅதிகாலையில் சாரை சாரையாக போலீஸ் படையினர் கூடங்குளம் நோக்கி செல்லத்துவங்கினர். தென்மண்டல ஐ.ஜி.,ராஜேஷ்தாஸ், நெல்லை டி.ஐ.ஜி., வரதராஜூ, எஸ்.பி., விஜயேந்திர பிதரி உள்ளிட்டோர் காலையிலேயே அங்கு முகாமிட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விருதுநகர், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அந்தந்த எஸ்.பி.,க்கள் தலைமையில் தலா 300 போலீசார் வரை குவிக்கப்பட்டுள்ளனர். தவிர தமிழக சிறப்பு போலீஸ் படையினர், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசாரும் பணியில் ஈடுடுத்தப்படுகின்றனர். நாள் குறிப்பிடாமல் போலீசார் இங்கேயே தங்கி சமைத்து சாப்பிடும்பட ஏதுவாக சமையல் உபகரணங்களுடன் வர உத்தரவிடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கவே ஏற்கனவே கூடங்குளம், இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் மற்ற இடங்களில் பணியாற்றியவர்கள் தற்போது கூடங்குளத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடங்குளத்தில் போலீசார் பணியமர்த்துவதற்காகவும், போராட்டத்தை ஒடுக்கவும் தனி கண்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அணுஉலை அதிகாரி தகவல்:தமிழக அரசின் நேற்றைய நடவடிக்கைகளால் கூடங்குளம் அணுவிஞ்ஞானிகள், பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அணுஉலை பணியாளர்களின் குடியிருப்பான செட்டிகுளத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். போராட்டக்காலத்தில் உதயக்குமார் தரப்பினர் இட்ட கட்டளைகளையெல்லாம் அரசு செயல்படுத்தியது. அதில் ஒன்றுதான் கூடங்குளத்திற்கு குறிப்பிட்ட பணியாளர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்பது. அதன்படி நேற்று வரையிலும் 120 பேர் மட்டுமே சென்றனர். போலீசார் குவிக்கப்பட்ட பிறகு நேற்று பிற்பகலில் 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அணுஉலைக்கு சென்றனர். இன்னமும் 2 மாதங்களில் அணுஉலை செயல்பாட்டிற்கு வரும் என வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: