புதன், 21 மார்ச், 2012

94,927 ஓட்டுக்களை 32 ஆல் வகுத்தால், ஒரு அமைச்சர் வெறும் 2966 மட்டுமே!

சங்கரன்கோவிலில் அமைச்சருக்கு விழுந்தது, வெறும் 3,000 ஓட்டுக்கள்!

Viruvirupu,
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68757 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். முத்துச்செல்விக்கு மொத்தமாக 94,927 ஓட்டுகள் விழுந்துள்ளன.
ஆளும் கட்சி என்ற வசதி, ஏற்கனவே பல தடவைகள் ஜெயித்த தொகுதி, 32 அமைச்சர்கள் டோரா அடித்துச் செய்த பிரசாரம் என்று எல்லா பிளஸ் பாயின்டுமே இருந்துகொண்டு, இந்த வெற்றியைக்கூட அடையா விட்டால் எப்படி? எனவே அதில் அதிசயம் ஏதும் கிடையாது.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, 2-ம், 3-ம் இடங்களுக்குத்தான் போட்டி.
டெபாசிட் இழந்தாலும், 2-வது இடத்தை கஷ்டப்பட்டு தக்க வைத்துக் கொண்டுள்ளது தி.மு.க. இந்த 2-வது இடமும், சில தினங்களுக்காவது ஸ்டாலினும், அழகிரியும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் இருந்ததும்தான் அவர்களுக்கு கிடைத்த பலன்.
தே.மு.தி.க. வெற்றி பெறாது என்பதை விஜயகாந்த் தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தார். ஆனால், தற்போது தமிழக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தமது கட்சி 4-வது இடத்துக்கு வரும் என்று கூறவில்லை.
எப்படியோ, பா.ஜ.க.-வை விட அதிகம் ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார்களே.. அதுவே போனஸ்தான்!
ம.தி.மு.க., 3-வது இடத்தை பெற்றிருக்கிறது.
தி.மு.க., இந்தத் தேர்தலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தும், அழகிரியையும், ஸ்டாலினையும் ஒன்றாக களம் இறக்கி, கலைஞரையும் பிரசாரத்துக்கு அழைத்து வந்த ஒரே காரணம், ம.தி.மு.க. 2-ம் இடத்துக்கு வரக்கூடாது என்பதற்காகதான்.
அப்படியிருந்தும், தி.மு.க.விடம், 5,500 வாக்குகளால்தான் தோற்றிருக்கிறது ம.தி.மு.க. (ஜவகர் சூரியகுமார் – 26,220 வாக்குகள். சதன் திருமலைக்குமார் – 20678 வாக்குகள்) இதைத்தான், கௌரவமான தோல்வி என்பார்கள்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, “இந்த வெற்றி, தே.மு.தி.க.விற்கு மக்கள் கற்பித்த பாடம்” என்ற காரணத்தையே முன்னிலைப்படுத்தி  கூறியுள்ளார்.
“எமது வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றோ, அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி” என்றோ முன்னிலைப்படுத்தி கூறவில்லை.
குறைந்தபட்சம், “32 அமைச்சர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி” என்றாவது கூறி, அவர்களை மகிழ்வித்திருக்கலாம். அல்லது, சில இடங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘தலைக்கு 1000 ரூபாவுக்கு’ கிடைத்த வெற்றி என்றாவது கூறி, ரிசர்வ் பேங்க்கை மகிழ்வித்திருக்கலாம். (ரூபா நோட்டு அச்சிட்டது அவர்கள்தான்)
இப்படி எதுவும் கூறாமல், 2-வது, 3-வது இடத்தில் ஜெயித்த கட்சிகளையும் ஸ்கிப் செய்து, 4-வது இடத்தில் உள்ள தே.மு.தி.க. பற்றி பிரஸ்தாபித்திருக்கிறாரே.. அந்த வகையில் விஜயகாந்துக்கும் வெற்றிதான்!
சரி. தலைப்பில் அமைச்சருக்கு 3,000 ஓட்டுக்கள் கிடைத்ததாக குறிப்பிட்டிருக்கிறோமே.. அது என்ன விவகாரம் என்று தெரிய வேண்டாமா?
முத்துச்செல்விக்கு மொத்தமாக 94,927 ஓட்டுகள் விழுந்துள்ளன. இந்த எண்ணிக்கையில் ஓட்டுக்களை பெற்றுக் கொடுப்பதற்காக 32 அமைச்சர்கள், தொகுதிக்குள் நாட்கணக்கில் குடியிருந்து பிரசாரம் செய்தார்களே.. 94,927 ஓட்டுக்களை 32 ஆல் வகுத்தால், ஒரு அமைச்சர் பெற்றுக்கொடுத்த சராசரி ஓட்டுக்கள், வெறும் 2966 மட்டுமே!
இதற்கு அவர்கள், தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டு, நாலு பைலைப் பார்த்திருக்கலாம்!

கருத்துகள் இல்லை: