புதன், 21 மார்ச், 2012

சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி

சென்னை: சங்கரன்கோவில் தொகுதி மக்கள் எப்போதுமே அதிமுகவுக்குத்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்போது தேமுதிகவுக்கு அவர்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். அதிமுகவுக்கு வாக்களித்து, மற்ற அத்தனை கட்சியினரையும் டெபாசிட் இழக்க வைத்த அத்தனை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை சபாநாயகர் தனபால், பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரின் மகன்களின் திருமணம் உள்பட 7 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழா சென்னையில் இன்று நடந்தது.

அதிமுகவுக்கு மிகவும் ராசியான வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதலவர் ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை ஆசிர்வதித்தார்.

அப்போது சங்கரன்கோவில் தேர்தல் முடிவு அங்கு வந்து சேர்ந்தது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெறும் செய்தியை அறிந்து கூடியிருந்த அத்தனை பேரும் உற்சாகத்தில் மூழ்கினர். முதல்வர் முகத்திலும் தாங்க முடியாத சந்தோஷத்தைக் காண முடிந்தது.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், எப்போதுமே சங்கரன்கோவில் தொகுதி மக்கள் அதிமுகவைத்தான் ஆதரித்து வந்துள்ளனர். இப்போதும் அது போலவே ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்குக் கிடைத்துள்ள இடம் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம் என்றார் ஜெயலலிதா.

சங்கரன்கோவில் மக்களை சங்கடமின்றி வாழ வைப்பேன்-ஜெ.

இந்த நிலையில் இடைத் தேர்தல் வெற்றி தொடர்பாக ஒரு அறிக்கையையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சொ. கருப்பசாமி அவர்களின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களை கோடிட்டுக் காட்டி, கழக வேட்பாளர் எஸ். முத்துச்செல்வியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், தி.மு.க. வேட்பாளர் உட்பட மற்ற அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றும் நான் சங்கரன்கோவில் வாக்காளப் பெருமக்களிடத்திலே கேட்டுக் கொண்டேன்.

சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, நடைபெறுவது இடைத்தேர்தல் அல்ல; எனது ஆட்சியின் செயல்பாடுகளை ‘எடை’ போடுகின்ற தேர்தல் என்று கூறியிருந்தார்.

எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, எனது ஆட்சியின் செயல்பாடுகளை, மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, 2006 முதல் 2011 வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் அராஜகங்களை மனதில் நிலை நிறுத்தி, நல்ல எடை போட்டு, இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளர் எஸ். முத்துச்செல்வியை 68,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததோடு மட்டுமல்லாமல், தி.மு.க வேட்பாளர் உட்பட மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து, நல்லாட்சிக்கு நற்சான்றளித்த சங்கரன் கோயில் வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்பதையும், சங்கரன்கோவில் மக்கள் சங்கடமின்றி வாழும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: