செவ்வாய், 6 மார்ச், 2012

மாயாவதி . ஆடம்பரம் ஊழல் பந்தா அரசியல் மொத்தத்தில் இவர் ஒரு ஜெயா

லக்னோ : ஆடம்பர செலவில் சிலைகள் அமைத்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட தவறியது, தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல் , பந்தா அரசியல் என பல்வேறு பிரச்னைகளுடன் தேர்தலை சந்தித்த மாயாவதி கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர், இளம் தலைமுறை அரசியலுக்கு மக்கள் வரவேற்பு அளித்திருக்கின்றனர் என்றாலும் தேசிய கட்சியான காங்கிரசின் இளவரசர் என்றழைக்கப்படும் ராகுலின் பிரசாரம் எடுபடாமல் போனது. இம்மாநிலத்தில் இவரது பிரசாரம் காரணமாக காங்கிரசுக்கு பெரும் அளவில் ஆதாயம் கிட்டவில்லை என்று சொன்னாலும் கடந்த 2007 தேர்தலை விட 22 தொகுதிகள் தற்போது 37 தொகுதிகளாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி ஆளும் கட்சியாகவோ , எதிர்கட்சியாகவோ வர முடியாமல் போனது. நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தலில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கோவாவையும் காங்., இழக்கிறது. மணிப்பூரை மட்டும் தக்க வைத்து கொள்ளும் . மாயாவதியின் சறுக்கலுக்கு என்ன காரணம் ? : இன்றைய தேர்தல் முடிவின் படி உ .பி., மாநிலத்தில் ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு ( மாயாவதி ) சம்மட்டி அடி விழுந்துள்ளது.
இதற்கு அவரது அரசியல் பாதையும், ஆடம்பர செலவும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இவரது ஆட்சி காலத்தில் அரசு பணத்தில் பல கோடிகளை செலவழித்து பூங்காங்கள் அமைத்தார். நகர் முழுவதும் மாயாவதியின் சிலைகளும், கன்சிராம் சிலைகளும், கட்சியின் சின்னமான யானை சிலைகளும் மெகா சைஸ்களில் நிறுவப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் செய்தன. இது மக்கள் மத்தியில் எடுபட்டது. இதனால் மாயாவதியின் செல்வாக்கு இறங்குமுகமாக மாறியது.

சுகாதார திட்டத்தில் ஊழல் : 2 வதாக மாயாவதி பெரும் பந்தா அரசியல் செய்தார் என்றதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் இவரது ஆட்சி காலத்தில் ஊழலும் பெரும் அவப்பெயரை தேடி தந்தது. தேசிய சுகாதார திட்டத்தில் அதாவது மத்திய அரசின் துணையுடன் செயல்படுத்தப்படும் திட்டம். இதன் மூலம் கிராமப்புற சுகாதாரம் மேம்பாடு, ஆஸ்பத்திரி சீரமைப்பு, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், தடுப்பு மருந்து எடுத்தல், உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும். இந்த திட்டத்தில் மாநில சுகாதார அமைச்சகம் பெரும் ஊழலில் பங்கெடுத்தது. இதன்காரணமாக அமைச்சர் நீக்கம், சி. பி. ஐ., ரெய்டு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், அரசு அதிகாரிகள் கைது படலம், தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்வாளிகள் கொலை , தற்கொலை, மர்மச்சாவுகள் என மாநில அரசின் அட்டூழியங்கள் அடுக்கி கொண்டே போகலாம் இதனால் மாயாவதி ஆட்சிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்பதை விட யானை மிதி கொடுத்துள்ளனர் என்றே கூறலாம்.
இவருக்கு தொண்டர்கள் பண மாலை அணிவித்ததும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை பெற்று தந்தது. கடந்த முறை 2007 ல் மாயாவதி கட்சி மொத்தம் 403 தொகுதிகளில் 206 தொகுதிகளை பெற்று பெரும்பான்மை கட்சியாக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இந்த முறை 70 முதல் 85 இடங்களை மட்டுமே பிடிக்க முடியும் என தெரிகிறது.

முலாயம் சிங் மகனுக்கு பெரும் ஆதரவு : இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங்கை விட இவரது மகன் அகிலேஷ்சிங் யாதவிற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் பெரு அளவில் கூடியது. மக்ககளோடு மக்களாக ரொம்ப சிம்பிளாக அவர் பழகினார்.
ராகுல் பிரசாரம் யாருக்கு உதவியது? ங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் களம் இறங்கி பிரசாரம் செய்தார், இங்கு மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு தர வேண்டும் என பிரசாரம் செய்தார். இவர் மாயாவதியின் ஊழல் , மக்கள் நலனில் அக்கறை இல்லாத மாயாவதி என்று வர்ணித்தார். ஆனால் மக்கள் இதனை ஏற்றுகொண்டாலும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க முன்வரவில்லை. இவரது பிரசாரம் முலாயம்சிங் கட்சிக்கு கூடுதல் செல்வாக்கை பெற்று கொடுத்தது என்பதுதான் உண்மை. மாயாவதியின் எதிர் ஓட்டுக்கள் முலாயம்சிங் கட்சிக்கு சென்றதால் பல இடங்களை இந்த கட்சி பிடிக்க முடிந்தது.

பா.ஜ.,வைபொறுத்தவரை இங்கு தனக்கு இருந்த செல்வாக்கை உயர்த்த பெரும் முயற்சி எடுக்கவில்லை என்றே தெரிகிறது. சரியான தலைவர் அடையாளம் காட்டும்படியாக அமையவில்லை என்ற குறை இருந்தது. கடந்த முறை பெற்றது 51 இடங்கள் . இந்த முறை பா.ஜ., 55 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும் முன்னேற்றம் எதுவும் இல்லை. முலாயம்சிங் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது.

ஆளும் தேசிய கட்சியான காங்கிரஸ் பெரும் அளவில் எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை. மொத்தம் 5 மாநிலங்களில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கோவாவை இழக்கிறது. மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.,வும் காங்கிரசும் மிக நெருக்கமான வெற்றியை பெற்று இருப்பதால் இங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும். இங்கு பா.ஜ., தனது ஆட்சியை இழக்கும் நிலை நிலவி வருகிறது. மொத்த்தில் இந்த தேர்தலில் மாநில கட்சிகள் மட்டுமே கூடுதல் வெற்றியை பெற முடிந்துள்ளது.

கருத்துகள் இல்லை: