
ஆனால், முதல்வர் என்னதான் எச்சரித்தாலும், ஒன்றிரண்டு மாதங்கள் பொறுத்திருந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் எல்லாம் தங்கள் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வெளிக்காட்டி, பணம் சுருட்டுவதில் தீவிரமாக இறங்கி விட்டனர். தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் மாமூல் வாங்குவது எங்கும் இல்லாத வகையில் பரவி வருகிறது.
அலறும் பொதுமக்கள்: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், எம்.எல். ஏ.,க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ரேஷன் கடை, மதுபான கடைகளில், மாமூல் வசூலிப்பதில் கறாராக ஈடுபடத் துவங்கியுள்ளனர். பிற மாவட்டங்களில் மணல் குவாரி விஷயங்களிலும், ஆளும் கட்சியில் பதவியில் இருப்போரின் மாமூல் வேட்டை, சொல்ல முடியாத அளவில் இருக்கிறது. இதைப் பார்த்து மணல் மாபியாக்களே அசந்து போயுள்ளனர். ஆளுங்கட்சியினரைப் பார்த்து பொதுமக்கள், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் எல்லாம் பயப்படத் துவங்கியுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியிலிருந்து எம்.எல்.ஏ., ஆகியுள்ள தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் நடவடிக்கை, முகம் சுளிக்க வைக்கிறதாம். ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை பெற்றுத் தருவதில், இவர் முன்னணியில் இருக்கிறாராம். ஆளுங்கட்சியினர் மாமூல் வசூலிப்பதில் முதலில் குறி வைப்பது, மதுபான கடைகளைத் தான். இங்கு நாள் ஒன்றுக்கு மாமூல் வசூலித்து வந்தது போய், இப்போது மாதந்தோறும் தனியாக கப்பம் கட்ட வேண்டும் என கிளம்பியுள்ளனர். இதனால், மதுபான ஏலம் எடுத்தவர்கள் கதி கலங்கிப் போய் உள்ளனர். இதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, நேற்று மணலியில் நடந்த சம்பவம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கதையாக அமைந்துள்ளது.
ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டல்: மணலி காமராஜர் சாலையில் குடிமையம் உள்ளது. இது, அ.தி.மு.க., நகர இணைச் செயலர் கோமதிக்குச் சொந்தமானது. குடிமையத்தை மனைவி பெயரில் முருகேச பாண்டியன் நடத்தி வருகிறார். நேற்று பிற்பகலில் குடி மையத்துக்குச் சென்ற அ.தி.மு.க., மணலி நகர செயலர் சந்திரன், மாதம் 5,000 ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
ஆளுங்கட்சி நிர்வாகிகள்: ஏற்கனவே தினமும், 750 ரூபாய் மாமூலாக தருவதால், மாதம் 5,000 ரூபாய் தர முடியாது என, முருகேச பாண்டியன் மறுத்துள்ளார். கோபமடைந்த சந்திரன், மாவட்ட பிரதிநிதி இளங்கோ, மகளிர் அணி நகர செயலர் கஸ்தூரி, வட்ட செயலர் செல்வதுரை, துணைச் செயலர் நாராயணன் ஆகியோருடன் சென்று, குடிமையத்தை ‹றையாடியதாகக் கூறப்படுகிறது. காலி மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் பயந்து போன குடிமகன்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முருகேச பாண்டியன் மீது பாட்டிலை வீசினர். மணலி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஆளுங்கட்சியினரே, தனது சக கட்சிக்காரரிடம் தகராறு செய்ததால், மணலி பகுதி மக்கள் "காலக்கொடுமை'யை பார்த்தீர்களா என முணுமுணுத்தபடி சென்றனர். இந்த காட்சி மணலியில் மட்டும் இல்லை, சென்னையில் பெரும்பாலான பகுதியில் இதே நிலைதான். சிலர் வெளியே சொல்ல முடியாமல் இருக்கின்றனர். விரைவில், கட்சிக் கூட்டம் நடக்கும்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? சென்னை மாநகராட்சிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், பெரும் தொகை கொடுத்து, "சீட்' வாங்கியதால், போட்ட காசை எடுக்க வேண்டும் என பலவற்றிலும் கை வைப்பதால், ஆளுங்கட்சிக்கு லோக்சபா தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு, முதல்வர் ஜெயலலிதா முட்டுக்கட்டை போட்டால் நல்லது என்பது, ஆளுங்கட்சியின் உண்மையான விசுவாசிகளின் எதிர்பார்ப்பு.
- நமது சிறப்பு நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக