வெள்ளி, 9 மார்ச், 2012

அண்ணா நூலக இட மாற்றம் கோர்ட் ஆய்வுக்குட்பட்டதல்ல??????

"சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் முடிவானது, அரசின் கொள்கை முடிவு. இது, கோர்ட் ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதல்ல' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதிலளித்து உள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை மாற்ற அ.தி.மு.க., அரசு முடிவெடுத்தது. இது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்', நூலகத்தை இடம் மாற்றும் முடிவுக்கு தடை விதித்தது.

மனுவுக்கு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: டி.பி.ஐ., பயன்படும்: சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், டி.பி.ஐ., உள்ளது. இந்த வளாகத்தில், நூலகம் அமைவது என்பது, சரியாக இருக்கும். கன்னிமாரா மத்திய நூலகம், தேசிய நூலகம் அருகில், டி.பி.ஐ., வளாகம் அமைந்துள்ளது. இதனால், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இங்கு அமையும் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். டி.பி.ஐ., வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா அமைப்பது என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதில், ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும், அறிவுப்பூர்வமான விஷயங்களை பெறும் விதத்தில், உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது என அறிவிக்கப்பட்டது. நூலகத்தை இடமாற்றம் செய்வது குறித்து, கடந்த, நவம்பர் 1ம் தேதியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கோர்ட் ஆய்வுக்கு உட்பட்டதல்ல: நூலகத்தை, டி.பி.ஐ., வளாகத்துக்கு மாற்றவும், கோட்டூர்புரத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுவதற்காக, அந்த இடத்தை சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நூலகத்தை மாற்றுவதால், மனுதாரர்களின் அடிப்படை உரிமை எதுவும் பாதிக்கப்படவில்லை. நூலகத்தை மாற்றும் முடிவானது, கொள்கை முடிவாகும். இது, கோர்ட் ஆய்வுக்கு உட்பட்டதல்ல. ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா வளாகத்தில் நூலகத்தை மாற்றுவது என்கிற கொள்கை முடிவானது, நியாயமானது. டி.பி.ஐ., வளாகம் அருகில் ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. பல்கலைக் கழகங்களும் உள்ளன. கோட்டூர்புரம் நூலகத்தை பயன்படுத்தும் ஆராய்ச்சி மாணவர்கள் குறைவானவர்கள் தான். பொது மக்களின் நலன் கருதி முடிவெடுக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவு நியாயமானது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது. இதற்கிடையில், கவிஞர் இளையபாரதி தாக்கல் செய்த மனு மீது விசாரணை செய்த முதல் பெஞ்ச், விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

கருத்துகள் இல்லை: