செவ்வாய், 6 மார்ச், 2012

சி.பி.ஐ.-யின் பார்வை.. அன்புமணி ராமதாஸின் பக்கம்!

Viruvirupu
தேசிய அளவிலான ஊழல் புகார் ஒன்றில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகனும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாசின் பெயரும் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “திராவிடக் கட்சிகளால் நாடே குட்டிச் சுவராகி விட்டது. இவர்கள் அனைவரது பெயர்களிலும் நடைபெறும் ஊழல் வழக்குகளே இவர்கள் ஊழல் பெருச்சாளிகள் என்பதற்கு சாட்சி” என சமீப காலமாக முழங்கி வருகிறார்.

சி.பி.ஐ.-யின் குற்றப் பத்திரிகையில் அன்புமணியின் பெயரும் சேர்க்கப்பட்டால், ‘பெருச்சாளி கூண்டுக்குள்’ தனது மகனும் நிற்பதை காணும் பாக்கியம் டாக்டருக்கு கிட்டும்.
ஏற்கனவே சர்ச்சையில் அடிபட்டு, அமுங்கிப் போயிருந்த விவகாரம் இது. தகுதியற்ற மருத்துவக் கல்லூரிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டு இது.
மருத்துவக் கல்லூரியில் ஒரு சீட்டுக்கே எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்று உங்களுக்கு தெரியும். அதை வைத்து, மொத்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க எவ்வளவு பணம் கைமாறி இருக்கும் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். அதில் நம்ம சின்ன ஐயாவும் ஒரு கட்டிங் அடித்திருக்கிறார் என சி.பி.ஐ. நம்புவதாக தெரிகிறது.
இதில் சம்மந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வருகிறது. பெயர், இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி.
கடந்த 2008-ம் ஆண்டு, இந்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்க மறுத்திருந்தது. காரணம், மருத்துவக் கல்லூரி நடத்துவதற்க்கான போதிய வசதிகள் அங்கில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்.
சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், மருத்துவக் கவுன்சில் அமைக்கும் குழுவும், சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் அமைக்கும் குழுவும் குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
மருத்துவக் கவுன்சில் சார்பில் மத்தியப் பிரதேசம் சென்ற குழுவினர், மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தபின், அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது என்பதை மீண்டும் உறுதி செய்தனர். அவர்களது அறிக்கையின் பரிந்துரை, இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதே!
இதற்கிடையே, குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரி நமது சின்ன ஐயா அமைச்சராக இருந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தை ‘சரிக்கட்டி’ விட்டது என்பது குற்றச்சாட்டு.
சின்ன ஐயா அமைச்சின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் நடத்திய ஆய்வில், “சகல வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான மருத்துவக் கல்லூரி அது என்பது தெரிய வந்தது. இந்த ரெக்கமென்டேஷனைப் பார்த்து புளகாங்கிதமடைந்த சின்ன ஐயா, இப்படியொரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிப்பது நமது தேசியக் கடமை என்று உணர்ந்து, அனுமதியை வாரி வழங்கினார்.
மருத்துவக் கவுன்சில் குழு வழங்கிய ரிப்போர்ட்டை ‘போட வேண்டிய இடத்தில்’ போட்டுவிட்டார்.
போட்ட இடம், குப்பைத் தொட்டி!
இந்த லீலை முடிந்த கையுடன் சின்ன ஐயாவின் பதவியும் கோவிந்தா ஆகிவிடவே, அவர் பெட்டி படுக்கையுடன் தமிழகம் திரும்பி விட்டார். ஆனால் வடக்கே விவகாரம் முடியவில்லை. சி.பி.ஐ. விசாரணை வரை போய்விட்டது.
சி.பி.ஐ. விசாரணையில், சின்ன ஐயா நியமித்த குழு போலியான ஆவணங்களின் அடிப்படையில்தான், ‘அற்புதமாக மருத்துவமனை’ என்று ரிப்போர்ட கொடுத்த விஷயம் வெளியாகிவிட்டது. அதையடுத்து சின்ன ஐயா முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் அவரது அமைச்சில் பணியில் இருந்த துணைச் செயலர், உதவிச் செயலர் ஆகியோர் மீது விசாரணை நடத்துவதற்கு அரசின் அனுமதியை சி.பி.ஐ. கோரியிருப்பதாக தெரியவருகிறது.
அதில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது என சி.பி.ஐ. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
சின்ன ஐயாவின் முன்னாள் துணைச் செயலர், உதவிச் செயலர் ஆகியோர் மீது விசாரணை நடத்தினால், அவர்கள் என்ன செய்வார்கள்? கிடைத்த கட்டிங்கில் அவர்களென்ன திண்டிவனத்தில் தோப்பு வாங்கினார்கள்? தமக்கு மேலே இருந்தவரை கைகாட்டி விடுவார்கள் என்றார் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸை விசாரிக்க சி.பி.ஐ., அரசிடமோ, நாடாளுமன்ற சபாநாயகரிடமோ அனுமதி பெறத் தேவையில்லை.
காரணம், எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் சின்ன ஐயாவின் கனவில்தான் உள்ளனவே தவிர, நிஜத்தில் கிடையாது!

கருத்துகள் இல்லை: