புதன், 7 மார்ச், 2012

சமாஜ்வாடிக்கு ரூ. 66,000 கோடி நிதி தேவை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற


Mulayam Singh Yadav
லக்னோ: உ.பி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற சமாஜ்வாடி கட்சிக்கு ரூ. 66,000 கோடி நிதி தேவைப்படுமாம். அந்த அளவுக்கு வாக்குறுதிகளை அக்கட்சி வாரி இறைத்துள்ளது.
உ.பியில் அடுத்த ஆட்சியை அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கிறது சமாஜ்வாடி. முலாயம் சிங் யாதவ் 4வது முறையாக முதல்வர் பதவியில் அமர்கிறார். பெரும் ஆதரவுடன் மக்கள் தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளதால் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் சமாஜ்வாடி உள்ளது.
ஆனால் அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமானால் ரூ. 66,000 கோடி நிதி தேவைப்படுமாம்.ஆனால் மாநில அரசிடம் அந்த அளவுக்கு நிதியாதாரம் இருப்பதாக தெரியவில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என்பது உறுதிமொழிகளில் ஒன்றாகும். இதை நிறைவேற்றினால் மாநில மின்வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1532 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுமாம்.

அதேபோல 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தையும் சமாஜ்வாடி கட்சி உறுதியளித்துள்ளது. அதேபோல 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லட் தரப் போவதாகவும் சொல்லியுள்ளது. இதற்கும் பெரும் பொருட் செலவாகும்.

அதேபோல, அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக நீர்ப்பாசன வசதி செய்து தருவோம் என்றும் சொல்லியுள்ளனர். இதைச் செய்ய ரூ. 589 கோடி நிதி தேவைப்படுமாம்.

இதுதவிர விவசாயிகள் வாங்கியுள்ள ரூ. 50,000 அளவிலான கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் சமாஜ்வாடி அறிவித்திருந்தது. அதைச் செய்ய வேண்டுமானால் புதிய அரசுக்கு ரூ. 11,000 கோடி செலவாகுமகாம்.

வேலையில்லாத 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1000 தரப் போவதாகவும் உறுதியளித்துள்ளனர். அதைச் செய்வதாக இருந்தால் ரூ. 1000 கோடி செலவாகுமாம்.

நிதித் தேவைக்கு மத்திய அரசையே முழுமையாக நம்ப வேண்டிய நிலையில் உ.பி. அரசு உள்ளது என்பதால் மத்திய அரசின் கையில் தான் சமாஜ்வாடி ஆட்சியின் வாக்குறுதிகள் நிறைவேறுவது உள்ளது.

கருத்துகள் இல்லை: