வெள்ளி, 10 ஜூன், 2011

சொத்து ரூ.1,100 கோடி ராம்தேவின் எலுமிச்சை,தேன் விரதம் ராம்தேவ்

புது தில்லி, ஜூன் 9: பாபா ராம்தேவின் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பு ரூ.1,100 கோடியாகும். இத்தகவலை ஹரித்வாரில் உள்ள ஆஸ்ரமத்தில் வியாழக்கிழமை அவர் வெளியிட்டார்.  "பொதுப் பணத்தை நான் கொள்ளையடிக்கவில்லை, எனது சொத்துகள் வெளிப்படையானவை, யார் வேண்டுமானாலும் அவற்றை ஆய்வு செய்யலாம். அனைத்து வருமானத்துக்கும் முறையாக கணக்குத் தணிக்கை செய்து, சரியாக வரி செலுத்தி வருகிறேன் என்று பாபா ராம்தேவ் தெரிவித்தார்.  ஊழல் பணம், வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணம் ஆகியவற்றை நாட்டின் சொத்தாக அறிவித்து உடனடியாக திரும்பக் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கடந்த நான்கு நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார் அவர். அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், போராட்டத்துக்கு முன்பாக பாபா ராம்தேவ் தன்னுடைய சொத்து விவரத்தை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  மத்திய அரசுக்கு நெருக்கடியை அளித்து வரும் ராம்தேவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், வருமான வரித் துறை, அமலாக்கத் துறையினர் விரிவாக விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதன் அடிப்படையில் ராம்தேவின் சொத்து, கம்பெனிகளின் வரவு, செலவு, லாபம், வரி ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  இந் நிலையில் ராம்தேவ் யோகா பீடத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் பாலகிருஷ்ணன் தனது சொத்து விவரங்களை வெளியிட்டார். அது போல், பாபா ராம் தேவ் ஹரித்வார் ஆஸ்ரமத்தில் நிருபர்களின் முன்னிலையில் தனது சொத்து விவரங்களை வியாழக்கிழமை வெளியிட்டார்.  ÷இதில் அவர் நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.1,100 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ராம்தேவ் தலைவராக உள்ள பதஞ்சலி யோகபீடத்தின் சொத்து மதிப்புகள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  பாபா ராம்தேவ் சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு முன்னதாக சில ஊடக நிறுவனங்கள் முன்கூட்டியே ஆய்வு நடத்தி, பாபா ராம்தேவின் சொத்து விவரங்களை வெளியிட்டன. இதன்படி பதஞ்சலி யோகபீடத்தின் கீழ் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிகிறது. ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன. இதன் மூலம் கிடைத்த வருமானமும் பலர் கொடுத்த நன்கொடை மூலமும் சொத்துகள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளை, திவ்யா யோகா அறக்கட்டளை, வேதிக் பிராட்காஸ்ட் லிமிடெட், ஆஸ்த்தா தொலைக்காட்சி உள்ளிட்டவை அடங்கும்.  பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளை சார்பாக தயாரிக்கப்படும் பொருள்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அம்லா, ஆலோவேரா ஜூஸ் (பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட ஜூஸ்), இந்த இரண்டு பொருட்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ( 2008 - 2009 ன்படி) 25 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் மூலிகை பொருட்கள் தயாரித்தல், தைலம், அழகு சாதன பொருள்கள் அனைவராலும் விரும்பி வாங்கப்படுபவையாகும். பதஞ்சலி நிறுவனத்திற்கு சில்லறை வியாபாரிகள் மூலம் 95 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகள் (சர்வான்சாம்- சுனிதா ) பெரும் பங்குதாரர்கள். இவர்கள் யோகா பீடத்திற்கு ஸ்காட்லாந்தில் ஒரு தீவை ( 900 ஏக்கர் ) அன்பளிப்பாக வழங்கி உள்ளதாகவும், இந்த தீவில் யோகா மையம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  எலுமிச்சைச் சாறு, தேன் சாப்பிட முடிவு: ஹரித்வாரிலும் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள பாபா ராம்தேவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை எலுமிச்சைச் சாறும், தேனும் சாப்பிடுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது

கருத்துகள் இல்லை: