சனி, 11 ஜூன், 2011

அடித்தட்டு மக்களின் நலத்திட்டங்கள் ரத்து,இந்த மாற்றம் தேவையா?கலைஞர்

"இனி என்ன செய்யப்போகிறது?' என்று தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க.வைப் பற்றி ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும், சொந்தக் கட்சிக்காரர்கள் மனதிலும் எழுந்த கேள்விக்கு பதில் சொல்வது போலத்தான் இருந்தது, திருவாரூரில் கடந்த ஞாயிறன்று (ஜூன் 5) நடந்த கலைஞரின் நன்றியறிவிப்பு பொதுக்கூட்டம்.

சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியாத அளவுக்கு அமைந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க தலைமையும் அதன் தோழமைக் கட்சிகளின் தலைவர் களும், 6 மாதத்திற்கு எந்த அரசியல் நடவடிக்கையையும் மேற் கொள்ள வேண்டாம் என்ற முடிவைத்தான் முதலில் மேற் கொண்டனராம். ""ஜெயலலிதாவின் இயல்பு தொடர்ந்து வெளிப்படும்போது, வாக்களித்த மக்கள் வருத்தப்படுவார்கள். கோபமடைவார்கள். அவருடன் கூட்டணி அமைத்து ஜெயிக்க வைத்த மார்க்சிஸ்ட் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தே.மு.தி.க., ம.ம.க., புதிய தமிழகம் என ஒவ்வொரு கட்சியாக அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வெளியே வரும். அந்தச் சூழ்நிலை வரும்போது, நமது அரசியல் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தலாம் என்ற மனநிலைதான் எங்கள் அணியில் இருந்தது'' என்கிறார் தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் முக்கிய பிரமுகர்.

இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்பதால், ஜூன் 3-ஆம் நாள் தனது பிறந்தநாள் கொண்டாட் டங்களைக்கூட தவிர்த்துவிட்டார் கலைஞர். ஆனால், தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வழக்கமான பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அமர்க்களப்படுத்தினார்கள்.

இந்த நிலையில்தான், ஜூன் 5-ந் தேதி திருவாரூரில் நன்றியறிவிப்பு பொதுக்கூட்டம். நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் ஜூன் 4-ந் தேதிவரை இருந்தது. 5-ந் தேதி காலையில் கம்பன் எக்ஸ்பிரசில் சொந்தத் தொகுதிக்கு கலைஞர் வந்தபோது, தி.மு.க.வினரிடம் உற்சாகம் கரைபுரண்டது. ரயிலடியில் பலத்த வரவேற்பு. வீல்சேரில் வராமல், இரண்டு பேர் தோளில் கைபோட்டபடி கலைஞர் மெதுவாக நடந்து வருவதைக் கண்ட தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக முழக்கங்களை எழுப்பினார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து, அதிக லீடிங்கில் வெற்றி பெற காரணமாக இருந்த தன் மகள் செல்வியையும் உடன் அழைத்து வந்திருந்தார் கலைஞர்.

தெற்குவீதியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் விறுவிறுவென நடந்தன. திருக்குவளைக்கோ, தாயார் நினைவிடத்திற்கோ செல்லாமல் வீட்டிலேயே கட்சியினரை சந்தித்தபடி இருந்த கலைஞர், மாலையில் பொதுக்கூட்ட மேடை நோக்கிப் புறப்பட்டார் . திரண்டிருந்த கூட்டம் அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் கலந்துகொள்கிற முதல் பொதுக்கூட்டம் என்பதால், என்ன பேசப்போகிறார் என்பதை சென்னையிலிருந்த மீடியாவினரும், இந்திய அளவிலான மீடியாவினரும் எதிர்பார்த்திருந்தனர்.

50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்த திருவாரூர் மக்களுக்கு நன்றி சொல்லி பேச்சைத் தொடங்கிய கலைஞர், "தமிழகத்தின் பல தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எனக்கு எதிரிகள் அல்ல. பகைவர்கள் அல்ல. நான் வெற்றிபெறக்கூடாது என்று நினைத்தவர்களும் அல்ல' என்ற அரசியல் முதிர்ச்சியுடன் அவரது பேச்சு தொடர்ந்தது. "தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்துவிட்ட காரணத் தால் நீங்கள் (திருவாரூர்வாசிகள்) தூக்க முடியாத சுமையை என்னுடைய தலையிலே ஏற்றியிருக்கிறீர்கள். அந்த சுமையும்கூட சுவையாக இருக்கிறது' எனத் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

தி.மு.க. அணிக்கு ஏற்பட்ட தோல்வியை கலைஞர் எப்படிப் பார்க்கிறார் என்பதற்கான பதிலும் அவரது பேச்சில் இருந்தது. "தோற்றது திராவிட இயக்கம் அல்ல. திராவிட உணர்வு அல்ல. திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகள் அல்ல. அவைகளை மேலும் கூர்தீட்டி, வலிமைப்படுத்தி பயன்படுத்த இந்தத் தோல்வி எங்களுக்குப் பயன்பட்டிருக்கிறது' என்று கலைஞர் சொன்னதை தி.மு.க.வின் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

நீதிக்கட்சி தோல்வியடைந்தபோது, ""இந்தத் தோல்வியை வரவேற்கிறேன்'' என பெரியார் அறிக்கை விடுத்தார். மக்களிடமிருந்து கட்சியின் தலைவர்கள் விலகியிருந்ததையும், கொள்கையிலிருந்து விலகி தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் செயல் பட்டதாலும்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட பெரியார், நீதிக்கட்சி மீண்டும் தனது கொள்கை வழியில் மக்களுடன் நிற்பதற்கு இந்தத் தோல்வி பயன்படும் என சுட்டிக்காட்டியிருந்தார். 2011 தேர்தலில் தி.மு.க பெற்ற தோல்வியையும் கலைஞர் அப்படித்தான் பார்க்கிறார். அதைத்தான் தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.

மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜெ. ஆட்சியின் கடந்த 20 நாட்களில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கைவிடப்பட்டது, செம்மொழி நூலகம் மூடப்பட்டது, பல திட்டங்கள் கை விடப்பட்டது, தொடர்ச்சியாக நடைபெறும் கொலை- கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்த மாற்றம்தான் தேவையா எனக் கேள்வி எழுப்பினார் கலைஞர். கனிமொழி கைது செய்யப்பட்டது பற்றி கலக்கத்துடன் பேசிய கலைஞர், சிறையில் அவர் தனக்கு தைரியம் சொன்னதை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியபோது, கூட்டமும் கலங்கியது.

ஊடகங்கள், ஜெ.வின் ஆலோசகர்களாக உள்ள உயர்சாதியினர் எனப் பலரும் தி.மு.கவிற்கு எதிராக செய்யும் சதிகளைப் பற்றிப் பேசிய கலைஞர், தி.மு.க.வையும் அதன் இலட்சியங்களையும் கொள்கைகளையும் காத்திட என்ன காரியம் செய்யவேண்டுமோ, அந்த காரியத்தைச் செய்துவிட்டுத்தான் நான் மறைவேன் என்று சொன்னபோது, கூட்டம் உணர்ச்சிவயமானது.

"விடைபெறுகிறேன்' என்று சொன்ன கலைஞர், ""பொதுவாழ்க்கையிலிருந்து அல்ல.. இந்த இயக்கத்தைக் காப்பதற்கு, அதனை அழிக்க நினைப்பவர்களை வெற்றி கொள்வதற்கான விடையினை உங்களிடமிருந்து பெறவிரும்புகிறேன். அதனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார். எந்த நிலையிலும் மனஉறுதி தளராமல், ஓய்வை விரும்பாமல் உழைக்கக்கூடியவரான கலைஞர், இந்தத் தேர்தல் தோல்வியிலும் தி.மு.க.வின் செயல்பாடுகளை ஒத்திவைக்க வேண்டியதில்லை என்ற புதிய முடிவுடன்தான் திருவாரூரில் தனது செயல் திட்டத்தை தொடங்கியிருக்கிறார். "இனி, தி.மு.க.வின் செயல் திட்டங்கள் வேகமெடுக்கும்' என்கிறார்கள் கலைஞரின் மனதை அறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: